ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: பத்து வயதில் 27.6.1943இல் மேடையில் முதன்முதலாகப் பேசிய தாங்கள் 80 ஆண்டுகள் ஆன நிலையில், அதே கொள்கை உறுதியோடு 27.6.2023 அன்று அதுபோன்றதொரு மேடையில் பேசிய பொழுதில் எத்தகைய உணர்வைப் பெற்றீர்கள்?

– கி.இராமலிங்கம், செம்பியம்

பதில் 1: “இதற்கு முழு முதற் காரணமான எம் அறிவு ஆசான், அன்னையார் – இவர்கள் வைத்த நம்பிக்கைக்கு குந்தகம் வராது, அக்கொள்கையைக் காக்கும் லட்சியப் பயணத்தில், மேலும் ஈடுபாட்டுடன் கலந்து, பெரியாரை உலக மயமாக்க நம்மால் முடிந்ததை, “முடியும்வரை – என் வாழ்வு முடியும்வரை” செய்து மனநிறைவுடன் உச்சத்தில் இயக்கத்தை அமைக்கும் பணியை கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு செய்ய முடியும்” என்கின்ற நம்பிக்கை உணர்வே என்னுள் மிகுந்தது!

எதையும் நான் விரும்பியதில்லை – காரணம், இதில் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது.

—-

கேள்வி 2: கடன் அட்டை (கிரெடிட் கார்டு) வைத்திருப்பது நன்மையெனக் கருதுகிறீர்களா? தவறானது என்று கருதுகிறீர்களா?

– திவ்யபாரதி, அரும்பாக்கம்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: பயனுக்கு – அத்தியாவசியத் தேவையே! இந்தக் கணினி யுகத்தில் கடன் அட்டை தொழில்  செய்வோருக்கு அவசியம்; ஜம்பத்திற்காக வைத்திருப்பது தேவையற்றது. எனக்கு கடனும் இல்லை – அட்டையும் இல்லை. அதுபற்றி அதிகம் எனக்கு ஏதும் தெரியாது!

கேள்வி 3: ஒன்றியத்தை ஆளுகின்ற பா.ஜ.க. அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த மறுப்பது ஏன்? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள்மூலம் நெருக்குதல்கள் ஏன்?

– ச.அருட்செல்வன், பெண்ணாடம்

பதில்: ஆர்.எஸ்.எஸ். இலக்கு – கொள்கை – திட்டம் அதுதான். எனவேதான் இந்நிலை. இந்த விடையை விரித்துப் பார்த்தால் விளங்கும்.

—-

கேள்வி 4: புதிதாக வாக்களிப்போரின் உரிமைகளை மதிக்கும் வண்ணம் 2024 மக்களவைக்கான பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரங்கள் எவ்வித குறைபாடுகளோ, சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவோ இருக்கக் கூடாதல்லவா?

– க.ஆற்றலரசி, செஞ்சி

பதில்: உங்கள் ஆசை அது; நடைமுறை எப்படியோ – சட்டப்படி நீங்கள் சொன்ன கருத்துதான் இயக்கத்தவர்கள் கருத்து – நோக்கம்.

—–

கேள்வி 5: புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராசன், தனக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே இருக்கும் பிரச்சினை அண்ணன் – தங்கை பிரச்சினை என்கிறாரே?

– பா.முகிலன்,  சென்னை-14

பதில்: அண்ணன் – தங்கை இப்படி சண்டை போடுவார்களா – அண்ணன் பங்கை எந்த நல்ல தங்கையும் ‘அபேஸ்’ செய்ய நினைப்பாரா? தமிழிசையின் இந்த வசனம், விசனத்தைத் தருகிறது!

—- 

கேள்வி 6: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கச் சொல்லி அ.தி.மு.க.வினர் சொல்வது ஏன்?

– லோ.விஜயலட்சுமி, வேலூர்

பதில்: ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு வந்தபோது இந்தக் கோரிக்கையை வைத்து அவர் மீது, நடவடிக்கை எடுக்க அவர்களில் எவராவது பேசியதுண்டா? இல்லையே! ஏன்? ஏன்?

—-

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 7: எதிர்க்கட்சித் தலைவர்களின் பாட்னா கூட்டம் எதிர்பார்த்த பலனைத் தருமா?

– பா.கண்மணி, தென்காசி

பதில்: பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜகவினரது நிலைதடுமாறிய பேச்சுகள், பாட்னா முதல் கூட்டமே பெரும் பூகம்பமாகி உள்ளது என்பதற்கு தக்கச் சான்று ஆகும்! வெறும் Photo Shoot – படம் எடுக்கும் காட்சிக்கா இத்தனை பேச்சும், இப்படி அலறல்களும்… புரியுமே!

——

கேள்வி 8: மணிப்பூர் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்காதது ஏன்?

– கே.கண்ணன், திருவண்ணாமலை

பதில்: மணிப்பூர் கலவரம், மக்களிடம் பா.ஜ.க.வுக்குள்ள மதிப்பு – பாசம் எவ்வளவு என்பதையும், நிருவாகத் திறமை இவர்களுக்கு உண்மையில் எவ்வளவு என்பதையும் காட்டும் அளவுகோல் ஆகும்.

——

கேள்வி 9: தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் உங்களைப் பார்க்கும்பொழுது உந்துதல் பெறுகிறார்களே, அதற்கு என்ன காரணம்?

– ப.ஆனந்த், மயிலாடுதுறை

பதில்: எனது குரல் பெரியார் குரல் – கொள்கைப் பேச்சு அவ்வளவுதான்!

——

கேள்வி 10: பைபிள், குரானை கேலி செய்து திரைப்படமெடுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?

– ந.நீலமேகம், சேலம்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: அலகாபாத் நீதிமன்றத்தின் நிறம் எப்படி? ஒவ்வொரு தீர்ப்பும் காவி நெடியுடன் எப்படி உள்ளது என்பதற்கு, இதுவும் ஒரு கூடுதல் சாட்சியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *