A, மே 4 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் ஆட்சி எடுக்கும் முடிவுகளைத் தடை செய்வதற்கு ஓர் ஆளுநர் என்றால், அது எப்படி ஜனநாயகமாகும்; இதில் சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை பெற்றுத் தந்த நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்தான் உண்மையான ‘சவுக்கிதார்’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
தமிழர் தலைவர் தலைமையில் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா!
நேற்று (3.5.2025) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்..
அவரது வாழ்த்துரை வருமாறு:
வரலாறு காணாத வெற்றி! எனவேதான், வரலாறு காணாத பாராட்டு!
கல்வியாளர்களும், மாணவர்களும்
திரண்ட அரங்கம் இது!
இதுவரை இத்தனை கல்வியாளர்கள் ஒரு முதலமைச்சரை, ஒரே மேடையில் இணைந்து வாழ்த்திப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், மனதார வாழ்த்திக் கொண்டிருக்கின்ற கல்வி அறிஞர்களின் கூட்டம் ஒரு பக்கம், எதிரே என்னருமை மாணவர் பட்டாளம்; மாணவர்கள்தான் ஆட்சியை அமைக்கக் கூடியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். அப்படிப்பட்ட மாணவச் சிங்கங்களே, கல்வியாளர்ப் பெருமக்களே, பாராட்டுக்கும், பெருமிதத்திற்கும் உரிய வராக, வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல எங்களுடைய முதலமைச்சர், முழுக்க முழுக்க வரலாற்றையே உரு வாக்கக் கூடிய முதலமைச்சர் – இந்தியாவிலேயே முதல மைச்சர்களுக்கெல்லாம் முதலமைச்சர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சர்.
அப்படிப்பட்டவரை இன்றைக்கு ஊக்கப்படுத்துவதற்காக, பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல – வரலாறு அவர் முன், அரசமைப்புச் சட்டம் உயிரூட்டப்பட்டு இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிக்கெல்லாம் தீர்வு காண வழக்குரைஞர்கள் ஒரு பக்கம் மிகப்பெரிய அளவிற்கு அங்கே வாதாடுகிறார்கள்.
சட்டப் போராட்டத்தில் வெற்றி கண்டவர்
நமது முதலமைச்சர்!
அதற்காக இதுவரையில் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால், நம்முடைய முதலமைச்சர்தான், சட்டப் போராட்டத்தை தொய்வின்றி நடத்தினார். முதல் முறையாக, இந்திய வரலாற்றிலேயே அவர்தான் அரசமைப்புச் சட்டத்திற்குரிய தத்துவங்களை – தனியாக ஒரு மாநில சட்டப்பேரவை இயற்றிய சட்டங்களை, ஆளுநர் போன்றவர்கள், அடாவடி அரசியல் பேர்வழிகள், ஊறுகாய் ஜாடியில் அந்தச் சட்டங்களை ஊற வைத்தால், அதை நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகத்தான், சட்டப்பூர்வமாக செயல்பட்டு வென்று காட்டியுள்ளார். ஏற்கெனவே அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்கின்ற ஒரு பகுதியை, அவ்வளவு சீக்கிரம் அந்த இடத்தில் வெளிச்சம் பாயாத ஒரு பகுதியை, உங்களுடைய அறிவு, உங்களுடைய ஆற்றல், உங்களுடைய தன்னம்பிக்கை அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தமிழ்நாடு சரித்திரத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மட்டு மல்ல,இந்தியாவில் இருக்கக்கூடிய அத்துணை முதல மைச்சர்களுக்கும், அத்துணை சட்டப்பேரவை களுக்கும் அந்த உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறீர்கள்.
அன்று கலைஞர் வாங்கித் தந்த
உரிமை!
உரிமை!
முன்பு கலைஞர் அவர்கள், இந்திய சுதந்திர நாளன்று தேசியக் கொடியேற்றும் உரிமையை தமிழ்நாட்டிற்குப் பெற்றாலும், அது அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பொருந்தும். அதுபோல், நீங்கள் பெற்றிருக்கின்ற இந்த உரிமை சாதாரண உரிமையல்ல!
அரசமைப்புச் சட்டப்படி அந்த உரிமையைப் பெற்றிருக்கிறீர்கள். அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவை – இவ்வளவு அதிகமாக, இவ்வளவு துணிச்சலாக, இவ்வளவு தெளிவாக வெளியே கொண்டு வந்த பெருமை – நம்மடைய முதலமைச்சருக்கே உரிய ஒன்றாகும்! நீதிபதிகள் காரண காரியத்தோடு தீர்ப்பை விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.
இது அறிவார்ந்த கல்வியரங்கம் – அத்துணைப் பேரும் அந்தத் தீர்ப்பு முழுவதையும் படித்திருக்க முடியாது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெளிவாக இரண்டு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதனை மக்களிடையே பரப்பவேண்டும்.
நம்முடைய முதலமைச்சருடைய சிறப்பினை பொத்தாம் பொதுவில் சொன்னால் போதாது.
மாணவச் சிங்கங்களே, அறிவார்ந்த அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, கல்வி அறி ஞர்களே, பத்திரிகையாளர்களே, நண்பர்களே, இதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜனநாயக அமைப்பில், ஒரு முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை, அய்ந்தாண்டு களில் நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் அவரை, முதலமைச்சராக மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் தன்னுடைய பணிகளைச் செய்கிறார்.
முட்டுக்கட்டை போட
ஓர் ஆளுநரா?
ஓர் ஆளுநரா?
அப்படி செய்கின்ற நேரத்தில், அதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஓர் ஆளுநர் தேவையா? என்ற கேள்வியை, நாம் கேட்கவில்லை. உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்துக் கேட்கிறது. காதைத் திருகிக் கேட்கிறது; சட்டப்படி கேட்கிறது; நியாயப்படி கேட்கிறது!
அய்ந்தாண்டுகள் நல்லாட்சியை நடத்தவேண்டும் என்பதற்காக மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த அய்ந்தாண்டுகளில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அந்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதற்குத்தான் ஓர் ஆளுநர், அந்த ஆட்சிக்குத் துணையாக இருக்கவேண்டுமே தவிர, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக இருக்கக்கூடாது என்று சொன்னார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நமது முதலமைச்சருக்குக்
கிடைத்த பயிற்சிகள்!
கிடைத்த பயிற்சிகள்!
மேலே பாம்பு; கீழே நரிகள்; பாயலாம் என்று நினைத்தால் அகழி; அகழிக்குப் பக்கத்தில் தடுப்புச் சுவர்கள். ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, உங்களுடைய ஆற்றல், நீங்கள் பயின்ற இடம், பெரியாரிடம் ஆரம்பித்து, அண்ணாவிடம் ஆரம்பித்து, கலைஞரிடம் ஆரம்பித்து பயின்ற இடம் சாதாரணமானதல்ல.
அங்குள்ள துணிவு, அங்குள்ள எதிர்நீச்சல் ஆற்றல், எதையும் துணிவோடு சந்தித்து, தூள் தூளாக்கக் கூடிய மறத்தனம் இவையெல்லாம் உங்களிடத்தில் உண்டு என்பதற்காகத்தான் இந்தப் பாராட்டுக் கூட்டம் – இதோ மாணவச் சிங்கங்கள், எங்கள் மாணவப் பட்டாளங்கள், கல்வி அறிஞர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள்.
பாம்புகள் நசுக்கப்படும்; விஷப் பற்கள் பிடுங்கப்படும். நரிகள் காட்டுக்கு அனுப்பப்படும்.
இது ஒன்றும் நரியைப் பரியாக்கிய கதையல்ல. நரிகளை விரட்டக்கூடிய காலகட்டம் இது.
தடைக்கற்களைத் தாங்கும் தடந்தோள்கள் உண்டு!
அகழிகளைத் தூர்த்துத்தான் நீங்கள் கோட்டையில் அமர்ந்திருக்கிறீர்கள். மீண்டும் நீங்கள் அந்தக் கோட்டையில், 200 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அமர்வது உறுதி! உறுதி!! உறுதி!!! என்பதற்காகத்தான் இதோ இந்தப் பாராட்டு விழா – மாமலை போன்ற இளைஞர்கள் கூட்டம், மாணவர்கள் கூட்டம், கல்வி அறிஞர்கள் கூட்டம் இங்கே வந்திருக்கின்றது.
அதேநேரத்தில், தடுப்புகளை இங்கே செய்ய முடியாது. தடைக்கற்கள் உண்டென்றாலும், அதைத் தாங்கும் தடந்தோள்கள் இங்கு உண்டு.
எனவேதான், நீங்கள் தனி மனிதர் அல்ல; ஒரு சமுதா யத்தின் தலைவர்; இந்திய தேசத்தின் தலைவர் என்று இன்று வர்ணிக்கக் கூடிய அளவிற்கு, வழிகாட்டக் கூடிய அளவிற்கு, நாட்டிற்கு நீங்கள் மிகப்பெரிய எடுத்துக்காட்டு! நியாயங்கள் தோற்பதில்லை – பயணங்கள் முடிவதில்லை என்று பயணத்தை நீங்கள் மேற்கொண்டிருக்கின்றபோது, அந்தப் பயணத்தில் நீங்கள் தனி மனிதரல்ல; நீங்கள் ஒரு முதலமைச்சர் மட்டுமல்ல – இதோ தமிழ்நாடே உங்களுக்காகத்தான் திரண்டிருக்கிறது என்பதற்காகத்தான் இந்த மாபெரும் பாராட்டு.
பாம்புகளை, நரிகளை விரட்டுவோம்!
எனவே, இந்தப் பாராட்டு, பாம்புகளை விரட்டும், நரிகளை அடித்து விரட்டும், அதேபோன்று மதிற்சுவர்களைத் தரைமட்டமாக்கும்; அகழிகள் தூர்க்கப்படும்!
நமது முதலமைச்சர் அடுத்தத் தேர்தலைப்பற்றி மட்டும் சிந்திப்பதில்லை; அடுத்த தலைமுறையைப்பற்றியும் சிந்திக்கின்றார்.
அந்த நன்றி உணர்ச்சிதான், எங்கள் மாணவச் செல்வங்கள் மத்தியில் இப்போது வந்திருக்கிறது, இந்தப் பாராட்டு விழாவின் மூலமாக!
எனவே, உங்களுடைய வாழ்த்து எங்களுக்கு மிகவும் முக்கியம்!
யார் உண்மையான
சவுக்கிதார்?
சவுக்கிதார்?
ஒருவர் சொன்னார், ‘‘நான்தான் சவுக்கிதார்’’ என்று! இந்தியாவைக் காப்பாற்றக்கூடிய ‘‘சவுக்கிதார்’’ என்று சொன்னார்.
இப்போது இந்தியா முழுவதும் நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைப் பார்த்து, ‘‘இதோ உண்மையான சவுக்கிதார்; இதோ உண்மையான சவுக்கிதார்’’ என்று குரல் ஒலிக்கிறது!
பாம்புகளை விரட்டுவார்; நரிகளை விரட்டுவார்; அகழிகளைத் தூர்ப்பார்; மதிற்சுவர்களை உடைத்தெறிவார்.
உங்கள் பயணம் தொடரட்டும்!
உங்கள் வெற்றிகள் குவியட்டும்!
நாடு செழிக்கட்டும்!
விடுதலை கிடைக்கட்டும்!
கல்வி உரிமை எங்கும் இருக்கட்டும்!
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால், கொண்டு வரப்படும் சூழ்ச்சிப் பொறிகள் தகர்த்தெறியப்படட்டும்!
எங்கள் மாணவச் செல்வங்கள் நன்றி உணர்ச்சியோடு சொன்னார்களே, அப்படி இனிவரும் தலைமுறை தலைமுறையாக மனுநீதிக்கு இங்கே இடமில்லை; மனித தர்மத்திற்கே இங்கே இடம் உண்டு.
எனவேதான், வாருங்கள்! உங்கள் உறுதியைத் தாருங்கள்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.