ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த மோடி
நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஓராண்டுக்கு முன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோடியின் காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலின்போது பேசிய மோடி, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ‘Urban Naxal’களின் எண்ணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை?
சுதந்திர இந்தியாவின் முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ளது. 2011இல் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு (SECC) தரவுபடி 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், 1931இல் ஆங்கிலேயர்கள் எடுத்த கணக்கெடுப்பில் 4,147 ஜாதிகள்தான் இருந்துள்ளன. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாக மாறியுள்ளது ஜாதிவாரி கணக்கெடுப்பு.
தமிழில் உருவாகும்
ஏ.அய். (AI) படம்
ஏ.அய். (AI) படம்
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்றை மய்யமாகக் கொண்டு ஏஅய் மூலம் ‘நாவாய்’ என்ற படம் உருவாகிறது. கதாபாத்திரங்கள், படத்தின் சூழல் அமைவிடம் (லொகேஷன்) ஆகியவை ஏஅய் மூலம் உருவாக்கப்படுகின்றன. பார்கவன் சோழன் இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக, இந்தியாவில் Love You என்ற கன்னட படம் முழுக்க முழுக்க ஏஅய் மூலம் உருவாகி கவனம் பெற்றது.
வாக்காளர் அட்டையில் முக்கிய மாற்றம்
விரைவில் சட்டப்பேரவை தேர்தல்கள் வரவுள்ள நிலையில், வாக்காளர்கள் வசதிக்காக 3 முக்கிய மாற்றங்களை செய்ய தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்களை உடனடியாக நீக்கவும், பூத் சிலிப்களில் தொகுதி, வாக்கு செலுத்தும் இடம் உள்ளிட்டவைகளை பெரிய அளவில் அச்சிடவும், BLO எனப்படும் பூத் அளவிலான அதிகாரிகளின் அடையாள அட்டைகளை மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
நிலைக்குழு உறுப்பினர்களாக கனிமொழி, தயாநிதி மாறன் நியமனம்
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக திமுக மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மதிப்பீடுகள் குழு உறுப்பினராக தயாநிதி மாறனும், பொதுத்துறைக்கான குழு உறுப்பினராக கனிமொழியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உலகின் வயதான பெண்மணி மறைந்தார்
உலகின் வயதானவர் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரேசிலை சேர்ந்த செவிலியர் இனா கனபெரா லூகா (116) மறைந்தார். 1908ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி அவர் பிறந்தார். அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லூகா மறைவையடுத்து, உலகின் வயதான நபராக இங்கிலாந்தின் சர்ரே பகுதியை சேர்ந்த இதல் கடர்ஹாம் (115) அங்கீகாரம் பெற்றுள்ளார்.
விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது
கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், சில பள்ளிகள் இணையவழி பாடம் நடத்துவதாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் கிடைத்தன. இவ்வாறு சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
தூக்கத்தை தொலைப்பது யார்? பிரதமருக்கு காங்கிரஸ் பதிலடி
பலர் தூக்கத்தை தொலைக்கப் போவதாக கேரளாவில் பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலடி கொடுத்துள்ளார். நாங்கள் நிம்மதியாகதான் தூங்குவோம், ஆனால் இனி பிரதமர் தூங்குவது தான் கடினம் என அவர் கூறியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் இந்தியா கூட்டணி பிரதமருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கந்து வட்டியோ!
ஏடிஎம்மில் 5 இலவச பரிவர்த்தனைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 2.5.2025 முதல் உயர்த்தப் பட்டுள்ளது. அதாவது, ரூ.21ஆக இருந்த கட்டணம் ரூ.23ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல், ஏடிஎம்மில் பண இருப்பை தெரிந்து கொள்ள இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அக்கட்டணம் ரூ.6இல் இருந்து ரூ.7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஏடிஎம்மை திட்டமிட்டு பயன்படுத்துங்கள்.