சென்னை, மே 3- தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக வணிகர் சங்கத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொழிலாளர் துறை ஆணையர் சி.அ.ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழில் பெயர்ப்பலகை
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக தொழிலாளர் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று (2.5.2025) நடைபெற்றது.
தொழிலாளர் துறை ஆணையர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதை உறுதிசெய்ய அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உறுப்பினர் செயலராக தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி உதவி இயக்குநர், ஊராட்சி உதவி இயக்குநர், மாவட்ட அளவிலான வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான உணவு நிறுவன உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான வேலையளிப்போர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
விழிப்புணர்வு
இக்குழுவின் மூலம், தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பைப் பெறுதல், தமிழில் பெயர்ப் பலகைகள் வைப்பது தொடர்பான சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மாநகராட்சி ஆணையர், உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், வேலையளிப்போர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கூட்டங்கள் நடத்தி தமிழில் பெயர்ப் பலகைகள் வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
அபராதம்
உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்துக்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதியின் கீழ் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கேட்டரிங் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கப் படாவிட்டால், தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டப்படி ரூ.500 வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் ம.பிரிதிவிராஜ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கார்த்திகேயன், மாநகர வருவாய் அலுவலர் கே.பி.பானுசந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.