* புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கடைசிவரை தந்தை பெரியாரின் கொள்கையாளராகவே வாழ்ந்தவர்!
* புரட்சிக்கவிஞர் விழாவை “தமிழ் வார விழாவாக’’ அறிவித்த நமது முதலமைச்சருக்கு நன்றி, பாராட்டு!
புரட்சிக்கவிஞருடைய உலகப் பேரவைத் தலைவராக இருந்து ஆண்டுதோறும் நடத்திக் காட்டுவார் நமது ஜெகத்ரட்சகன்!
ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவிப்போடு நிறுத்தாமல்,
உடனே செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்!
ெசன்னை, மே 3 புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை ‘‘தமிழ் வார விழா’’வாக அறிவித்த நமது முதலமைச்சருக்குப் பாராட்டுத் தெரிவித்தும், ஆண்டுதோறும் இவ்விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் புரட்சிக்கவிஞருடைய உலகப் பேரவைத் தலைவராக நமது ஜெகத்ரட்சகன் இருப்பார் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முழங்கினார்.
புரட்சிக்கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு விழா!
நேற்று (2.5.2025) மாலை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் களம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா – தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு விழா- ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில், விருது வழங்கி விழாப் பேருரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
அவரது விழாப் பேருரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு 42 ஆம் ஆண்டாக நடை பெறக்கூடிய புரட்சிக்கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா – அதேநேரத்தில் கூடுதலாக நமக்கு மகிழ்ச்சியை இந்தாண்டு தருகின்ற ஒரு சிறப்பு – புரட்சிக்கவிஞருக்கு 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் வேறு எந்த ஆண்டிலும் இல்லாத ஒரு மகிழ்ச்சி, உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுகின்ற பெரும் உவகை என்னவென்று சொன்னால், 42 ஆண்டுகளாக நாம் கொண்டாடி, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோரெல்லாம் அவ்விழாவில் கலந்து கொண்ட பிற்பாடும்கூட, இன்றைக்கும் புரட்சிக்கவிஞர் தேவைப்படுகிறார். தமிழ்ப் பாதுகாப்பு அரணாக இன்றைக்கு ஓர் ஆட்சி – திராவிட மாடல் ஆட்சி இங்கே இருக்கின்ற காரணத்தினால், நம்முடைய கோரிக்கைகளை எந்தப் போராட்டமும் இல்லாமல், கேட்டதைவிட, ஒருபடி கூடுதலாகக் கொடுக்கக்கூடிய ஒரு நல்ல முதலமைச்சர் திராவிட நாயகர் நமக்குக் கிடைத்திருக்கின்ற காரணத்தினால், இந்த விழாவிற்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்று சொன்னால், அவருக்கு நன்றி செலுத்துகின்ற விழாவாகும்.
முதலமைச்சருக்குப் பாராட்டு!
புரட்சிக்கவிஞர் கலைப் பண்பாட்டு புரட்சி விழா மட்டுமல்ல – 42 ஆம் ஆண்டாக நடை பெறக்கூடிய இவ்விழாவில், அவருடைய 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – அவர் பிறந்த ஒவ்வொரு ஆண்டை யும், ‘தமிழ் வார விழா’வாக அறிவித்த நம்முடைய முதலமைச்சருக்குப் பாராட்டு விழா என்பது ஒரு சிறப்பு.
அதைவிட இன்னும் சிறப்பு – இன்றைக்கு மே 2 ஆம் நாள். இந்த மே 2 ஆம் நாள்தான், முதன்முதலாக ‘குடிஅரசு’ ஏடு வெளிவந்தது. இன்றைக்கு நூறாண்டு ஆகிறது.
அதனுடைய பிள்ளைகளாகிய நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். பெரியாரால், முதுகெலும்பு பெற்றவர்களெல்லாம் எத்தனை பேர் நம்மோடு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; இருக்கின்றவர்கள் முதுகெலும்போடு இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான இந்த விழாவிற்கு இன்னொரு சிறப்பு – ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கி வைத்தவர் யார் என்று சொன்னால், நம்முடைய ஒப்பற்ற ஊருணி.
‘‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு’’ (குறள் 215)
‘திரு’ என்பதற்கு அறிவுச்செல்வம் என்ற பொருளும் கூட.
அப்படிப்பட்ட வகையில், நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்கள், ஒப்பற்ற மாமேதை. அவர் ஆய்வு செய்து டாக்ட்ரேட் பட்டம் வாங்கியவர். மிக முக்கியமானவர்.
அதுமட்டுமல்ல, வறுமை என்ன என்பதைப் புரிந்து, இன்றைக்கு வந்த வளமையை, எத்தனை பேருக்கு வறுமையைப் போக்குவதற்கு விளம்பரம் இல்லாமல் உதவி செய்ய முடியுமோ, அத்துணையும் செய்யக்கூடிய ஓர் ஒப்பற்ற மாபெரும் தோழர்.
அவர் கட்சிப் பார்ப்பதில்லை. ஏன், கொள்கை யைக்கூடப் பார்ப்பதில்லை பல நேரங்களில். மனித நேயத்தைத்தான் பார்க்கிறார். மானுடப் பற்று எப்படி மிக முக்கியமோ, அப்படி.
திராவிட இயக்கத்தின் மானுடப் பற்று!
எனவே, புரட்சிக்கவிஞராக இருந்தாலும், தந்தை பெரியாராக இருந்தாலும், திராவிட இயக்கமாக இருந்தா லும், முதலமைச்சர் அவர்களாக இருந்தாலும், பல நேரங்களில் அவர்களுக்கு ஒரே அளவுகோல், கட்சி யல்ல – கொள்கையையும் தாண்டி மானுடப் பற்றுதான்.
அந்த மானுடப் பற்றின் காரணமாக இவ்விழாவிற்கு வந்து இவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறார். அதுவே பெரிய வியப்பு.
பொதுவாகவே, அவரைப் படம் பிடிப்பது எளிது, வந்திருக்கின்ற நேரத்தில். ஆனால், அவரை சந்திப்பது எளிதல்ல. அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதுகூட அவ்வளவு எளிதல்ல. நாங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள். அப்படியிருந்தாலும், அவரைப் பிடிப்பது எங்களுக்கே கடினம்.
ஏனென்றால், எந்த நேரமும் உழைப்பு, உழைப்பு, உழைப்புதான் அவருக்கு. திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த ஓர் அற்புதமான பெரிய வள்ளல். கொள்கையாளர், மிகுந்த அடக்கத்தோடு இருக்கக்கூடியவர்.
அப்படிப்பட்டவரை, கொஞ்சம் ஆட்டி அசைத்துப் பார்த்தால், திராவிட இயக்கம் கொஞ்சம் அசையுமோ, ஒடுக்கலாமோ என்று ஆதிக்கச் சக்திகள் தங்கள் கைகளில் இருக்கின்ற திரிசூலங்களையெல்லாம் பயன்படுத்திப் பார்க்கிறார்கள்.
கடவுளைவிட உயர்ந்தவர்கள் பார்ப்பனர்களாம் – கம்பன் கூறுகிறார்!
எந்த சூலமும் இவரிடம் எடுபடாது. இவர் சூலங்கள் இருந்த இடத்தையெல்லாம் தாண்டித்தான் இந்த இடத்தில் வந்து அமர்ந்திருக்கின்றார். அப்படிப்பட்டவர், இன்றைக்கு ஒரு சிறப்பான ஓர் உரையை இங்கே நிகழ்த்தியிருக்கிறார்.
அவருக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரி வித்துக் கொள்கிறோம்.
அவரிடம் ஒரு வேண்டுகோளும்கூட, கம்பன் புகழ்பாடி, கன்னித்தமிழையெல்லாம் நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள்.
கம்பன்மீது, பெரியாருக்கும், எங்களுக்கும் வெறுப்பு கிடையாது. அண்ணா, ‘கம்பரசம்’ எழுதினார் என்றால், கம்பன்மீது உள்ள வெறுப்பு அல்ல; கம்பனுடைய ஆற்றல் சிறப்பானதாக இருக்கலாம். மாறாக, அவன் எழுதிய பாட்டு என்பது சுயமரியாதைக்குக் கேடாகும்.
‘‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் அய்ந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்’’
இந்தப் பாடலின் அர்த்தம்,
அந்தணர் – வேதம் வல்ல வேதியர்; கரிய மாலினும் – கருநிற உருவினனாயதிருமாலைக் காட்டிலும்; கண்ணுதலானினும் – நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானைக் காட்டிலும்;உரிய தாமரைமேல் உறைவானினும் – தனக்கே உரிய திருவுந்தித் தாமரை மேல் வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும்; விரி யும் – பரந்து விளங்கும்; ஓர் பூதம் அய்ந்தினும்- ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும்; மெய்யினும் – சத்தியத்தைக் காட்டிலும்; பெரியர் – மேம்பட்டவர் ஆவர்; (அவர்களை) உள்ளத்தால் – மனப்பூர்வமாக; பேணுதி – புறந்தருவாயாக’’ என்பதுதான்.
ஆழ்வாரா? மற்றவர்களுடைய உள்ளத்தை ஆள்பவரா ஜெகத்ரட்சகன்!
இந்தப் பாடலை முழுமையாக நமது ஜெகத்ரட்சகன் அப்படியே ஒப்பிப்பார். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – நடமாடும் நாராயணன். ஆழ்வார் என்றே கலைஞர் அவர்களால் அழைக்கப்பட்டவர்.
ஆனால், மற்றவர்களுக்கு ஆழ்வார் அங்கே! இவர் எல்லோருடைய உள்ளத்தையும் ஆள்வார் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் எஸ்.ஜெகத்ரட்ச கன் இவ்விழாவிற்கு அழைத்தவுடன், வந்தார்.
புரட்சிக்கவிஞர் பிறந்த நாளையொட்டி, ‘முரசொலி’ நாளிதழில் ஒரு பக்கம் கவிதையை எழுதியிருக்கிறார். அதனை ‘விடுதலை’யிலும் வெளியிட்டு இருக்கின்றோம். மிக அற்புதமான கவிதையாகும் அது.
அதுமட்டுமல்ல, எதைச் செய்தாலும், செறிவோடு செய்யவேண்டும் என்பதற்கு அடையாளம், அவருடைய உரை தயாரிக்கப்பட்ட உரை. அவர் நினைத்தால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்; கவிதை மழையை, அருவி போல கொட்டிக் கொண்டிருப்பார்.
ஜெகத்ரட்சகனுக்கு
ஒரு வேண்டுகோள்!
ஒரு வேண்டுகோள்!
அவரிடம் என்ன வேண்டுகோள் என்றால், இன்றைக்குக் கம்பருக்கு நிறைய செய்துவிட்டீர்கள். ஆனால், புரட்சிக்கவிஞர்தான் இப்போதும் தேவைப்படுகிறார். எனவே, புரட்சிக்கவிஞருக்கு ஒரு வாரம் – தமிழ் வார விழா கொண்டாடவேண்டும் என்று திராவிட இயக்கத்தினுடைய முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, நீங்கள் உங்களுடைய முன்னெடுப்புகளைச் செய்தால், உலகம் முழுவதும் இந்தப் பணி மிகச் சிறப்பாக நடைபெறும்.
எனவே, புரட்சிக்கவிஞருடைய உலகப் பேரவைத் தலைவராக இருக்க நீங்கள் தகுதி பெற்றவர்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை மிகச் சிறப்பாக தமிழ் வார விழாவாகக் கொண்டாடவேண்டும்.
கம்பன்மீது
எங்களுக்கு என்ன கோபம்?
எங்களுக்கு என்ன கோபம்?
அவருடைய ஆற்றலைப்பற்றிச் சொல்லும்போது, பெரியார், படிக்காமலேயே சொல்லுகிறார் என்றனர். ஆனால், அண்ணா படிக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது.
எங்களைப் போன்றவர்கள், ஜெகத்ரட்சகன் போன்ற வர்கள் எல்லாம் குழந்தைகளாக இருந்த காலத்தில், பெரியார் ‘கம்பன் ஆராய்ச்சி’யை சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல், மற்றவர்களுக்குத் தெரியாது!
கம்பனைப்பற்றி தந்தை பெரியார்!
1938 ஆம் ஆண்டு ‘பகுத்தறிவு’ வார இதழில், தந்தை பெரியார் அவர்கள் ஒரு கட்டுரை எழுதுகிறார்.
அந்தக் கட்டுரையில் என்ன சொல்லுகிறார் என்றால்,
‘‘கடவுள் இல்லை; கடவுள் உண்டு’’ இந்தப் பிரச்சினை விவாதத்திற்கு வரும்போது – இது இப்போது இருக்கிறது என்று நினைக்கிறார்கள். கம்பனே பயன்படுத்தி இருக்கிறான்; கம்பன் எழுதிய பாட்டி லேயே இருக்கிறது’’ என்றார்.
பல பேர் நினைக்கிறார்கள், பெரியார் படிக்காதவர் என்று, மேலெழுந்தவாரியாகப் பேசுவார் பெரியார் என்று சொல்லும் முண்டங்களுக்கு நான் தெளிவாகச் சொல்கிறேன். கோபமாக அந்த வார்த்தையை நான் சொல்லவில்லை. கழுத்துக்கு மேலே ஒன்றும் இல்லை என்றால், முண்டம்தான். ஆகவேதான், அந்த முண்டங்களுக்குச் சொல்கிறேன். இதில் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால்,
சீதையை வர்ணிக்கிறார் கம்பர். அவர் எழுதிய பாட்டில்.
அப்படி வர்ணிக்கும்போது,
சீதையை அலங்கரித்துக் கொண்டு வந்தபோது, அயோத்தி மாந்தர், மற்றவர்கள் எல்லாம் பேசும்போது அவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
சீதைக்கு இடை இருக்கிறதோ, இல்லையோ என்பது தான் அது.
அந்த இடை இருக்கிறது என்கின்றனர் சிலர்;
இடை இல்லை என்கின்றனர் சிலர்.
அது எப்படி என்றால், கடவுள் இருக்கு என்று சில பேர்; கடவுள் இல்லை என்று சிலர் எப்படி சொல்கிறார்களே அதுபோல, சீதை இடையின்மேல் சந்தேகம் வந்தது என்று கம்பர் பாடியிருக்கிறார்.
அந்தப் பாடலை, பெரியார் கோடிட்டுக் காட்டியி ருக்கிறார். அப்படியென்றால், கம்பராமாயணத்தை, பெரியார் அவர்கள் எந்த அளவிற்கு ஆய்வு செய்தி ருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நுனிப்புல் மேயக்கூடியவர்கள் அல்ல திராவிட இயக்கத்தவர்கள். அது அண்ணாவானாலும், கலைஞரானாலும், அடியேன் வீரமணியாக இருந்தாலும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், கம்பராமாயணத்தி லேயே நாத்திகம் உள்ளே புகுந்திருக்கிறது.
அந்தக் காலத்திலேயே கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இருந்திருக்கிறார்கள்.
சீதைக்கு இடை இருக்கிறதோ, இல்லையோ என்கிற சந்தேகம் வரும்போது, கடவுள் இருக்கோ, இல்லையோ என்று இரண்டு பேர் விவாதம் செய்வதுபோல் உள்ளதாம்.
கடவுள் நம்பிக்கையை எங்கே கொண்டு போய் கம்பன் வைத்தான் என்றால், ‘சீதையின் இடையில் கொண்டு போய் வைத்தான்.’
அப்படிப்பட்ட கம்ப ராமாயணத்தைப்பற்றிச் சொல்லும்போது, ‘‘கரிய மாலினும், கண்ணுத லானினும்’ என்பதில், நம்முடைய உணர்வுகள் என்ன என்பதுதான் கவனிக்கத்தக்கது.
எனவேதான், என்னுடைய அன்பான வேண்டுகோள் – உரிமையுடன் நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால், புரட்சிக்கவிஞர் விழாவை ஒரு வாரம் நடத்தலாம்ல தமிழ் வார விழாவாக!
நாடு முழுவதும் பெரிய விழா எடுக்கவேண்டும்; உலகம் முழுவதும் எடுக்கவேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா –
தமிழ் வார விழாவின்
புரவலர் ஜெகத்ரட்சகன் என்று அறிவிக்கப்படுகிறது!
தமிழ் வார விழாவின்
புரவலர் ஜெகத்ரட்சகன் என்று அறிவிக்கப்படுகிறது!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – தமிழ் வார விழாவின் புரவலர் – தலைவராக இன்றுமுதல் அறிவிக்கப்படுகிறார் நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்கள்.
அவர் எதை எடுத்துக்கொண்டாலும், மிகச் சிறப்பாக செய்வார். அவர் சுலபமாக எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அவர் எடுத்துக்கொண்டால், அது உலகளாவிய பெருமையைப் பெறும்.
புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவை- உலகம் முழுவதும் தமிழ் வாரமாகக் கொண்டாடவேண்டும் என்று, தமிழ் மொழியைக் காப்பாற்றுகின்ற பணியை இப்படி அமைத்திருக்கிறார்கள்.
தியாகராயர் அரங்கில் இந்த விழா நடப்பது பொருத்தமானது!
எங்கள் தோழர்கள், தலைமை என்ன நினைக்கிறதோ அதைத்தான் பேசுவார்கள். தோழர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் நானும் குறித்து வைத்திருப்பேன். அதேபோன்று கவிஞர், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் சொன்ன கருத்தும் அதுதான்.
இந்த விழாவிற்கு இன்னொரு தனிச் சிறப்பு என்னவென்றால், புரட்சிக்கவிஞருக்குச் சமமாக இன்னொருவர் இல்லை என்பதற்கு பெரியார், ஒரு வார்த்தை சொன்னார்.
அது என்னவென்றால், ‘‘புரட்சிக்கவிஞர் போன்று ஒரு பெரிய சிறந்த கவிஞர், இவர்தான், முதலும், கடைசியும்’’ என்றார்.
நிறைய பேர் என்ன நினைத்தார்கள் என்றால், “பெரியார், ‘‘கடைசி’’ என்று சொல்லமாட்டாரே, காரணம், அவர் பகுத்தறிவுவாதியாயிற்றே’’ என்று.
அதற்குப் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு கருத்தையும் புரட்சிக்கவிஞர் போன்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வதில்லை. எல்லோருக்கும் புகழ்மீது ஆசை இருக்கும். ‘‘சுப்பிரமணிய துதி அமுதை’’ ஆரம்பக் காலத்தில் எழுதிய கவிஞர் கனகசுப்புரத்தினம்தான் – புரட்சிக்கவிஞர் அல்ல.
இந்த விழாவை நடத்துவதற்கு தியாகராயர் அரங்கத்தை நாங்கள் ஏன் தேர்ந்தெடுத்தோம் என்றால், வேறு எந்த அரங்கத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு இந்த அரங்கத்திற்கு உண்டு. அது சில நேரங்களில் இடையூறு கூட!
அது என்னவென்றால், படிகள் உண்டு. மேடைக்கு வருகிறவர்களிடம், ‘‘படி, படி, படி’’ என்று சொல்லி, ஒவ்வொரு படியாக ஏறி வரவேண்டும். வயதானவர்கள் வருவது மிகவும் கஷ்டம். எங்களைப் போன்றவர்கள் இந்தப் பக்கம் வந்துவிடுவோம்.
இங்கே வரும்போதே, பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வர்கள், ‘‘பார்த்துங்க, படியுங்க; பார்த்துங்க, படி யுங்க’’ என்று.
அந்தப் படிப்பை இங்கேயும் ஞாபகப்படுத்து வதற்குத்தான் தியாகராயர் அரங்கம் இருக்கிறது. அதனால்தான், இந்த விழா மிகச் சிறப்பாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
புரட்சிக்கவிஞருடைய அந்த அழுத்தம் திருத்தம் இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.
ஒரு நொடிப் பொழுதில் அந்தக் கருத்துகளைச் சொல்வார். அவர் போன்று துணிச்சல், வேறு எந்தக் கவிஞருக்கும் இருக்க முடியாது.
எப்படிப் பெரியார் ஒரு தனித்தன்மை வாய்ந்தவரோ, அதேபோன்று.
அதேபோல, நம்முடைய அருமைக் கவிச்சுடர் கவிதைப் பித்தன் அவர்களும் மிகச் சிறப்பாகச் சொன்னார்.
அவருக்கு ஒரே ஒரு வேண்டுகோள், தயவு செய்து எங்களைப் போன்றவர்களையெல்லாம் ‘‘வாழும் பெரியார்” என்று சொல்லாதீர்கள். இதை நான் நிறைய கூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன்.
பெரியார் எப்போதுமே வாழ்பவர்; மறைந்தால்தானே, அடுத்தவர்களைச் சொல்வதற்கு.
எனவேதான், ‘‘வாழும் பெரியார், வாழும் கலைஞர், வாழும் அண்ணா’’ என்று இன்னொருவரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணா எப்போதும் வாழ்வார்; கலைஞர் எப்போதும் வாழ்வார்; பெரியார் இப்பொழுதும் வாழ்கிறார். ஆகவேதான், அவர்கள்வாழும்போது, இன்னொருவர் போட்டியாவதற்கு அவசியமில்லை. நாங்கள் எல்லாம் பெரியாருடைய மாணவர்கள். புரட்சிக்கவிஞருடைய மாணவர்கள்.
நகைச்சுவை உணர்வும் புரட்சிக்கவிஞருக்கு உண்டு. ஒருமுறை ஒருவர் மூன்று வரியில் எழுதிக் காட்டினார்.
‘‘என்று கூறும் கூற்றில் இல்லை புத்தி!’’ என்று முடித்தார் கவிதையை!
‘‘திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி’’ என்று எழுதி, புரட்சிக்கவிஞரிடம் கொடுத்து, ‘‘அய்யா, கவிதை எழுதவேண்டும் என்று எழுத ஆரம்பித்தேன்; இதை எப்படி முடிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இதை நீங்கள்தான் முடித்துக் கொடுக்கவேண்டும்’’ என்று கொடுத்தார்.
அதைப் படித்த புரட்சிக்கவிஞருக்கு, அந்த மூட நம்பிக்கையின் காரணமாக கோபம் தாள முடியாமல், ‘‘என்று கூறும் கூற்றில் இல்லை புத்தி’’ என்று நான் முடிக்கிறேன் என்று எழுதி முடித்தார்.
புரட்சிக்கவிஞர் அவர்கள், சுயமரியாதை இயக்கத்திற்கு வந்து, கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். அவரைப் பார்த்தவுடன், மற்ற தமிழாசிரியர்களுக்குக் கோபம். புரட்சிக்கவிஞருக்குத் தனி செல்வாக்கு இருப்பதால், அவரை எப்படியாவது தீர்த்துக் கட்டவேண்டும்; அவரை வெளியேற்றவேண்டும் என்று நினைத்தனர்.
இவர் மதத்தை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார். இந்தக் கல்லூரி மதவாதிகளால் நடத்தப்படுவது. ஆனால், இவரை தலைமைக்குரியவராக ஆக்கியிருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் கொடுக்காத வாய்ப்பை, புரட்சிக்கவி ஞருக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று 1930 ஆம் ஆண்டு கடிதம் எழுதினார்கள்.
அதற்குப் பதில் எழுதினார் புரட்சிக்கவிஞர் அவர்கள். அந்த வரிகள் எப்படி இருக்கும்? கவிதைப்பித்தன் போன்றவர்கள் எழுதும்போது, பேனாவை மை தொட்டு எழுதுவதில்லை; கொள்கையைத் தொட்டு எழுதுவதினால், நெருப்புத் துண்டுகளாக அந்தக் கவிதைகள் வருகின்றன.
பாதிரியார்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்ட அன்றைய புரட்சிக்கவிஞர்!
புதுவையில் பள்ளியின் ஆண்டுவிழா நடைபெறு கிறது. அந்தக் கல்லூரி பாதிரியார்களின் கல்லூரி என்பதால், அவ்விழாவிற்கு பாதிரியார்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.
அந்நிகழ்வில், புரட்சிக்கவிஞர் அவர்கள் தன்னு டைய கவிதையைப் படிக்கின்றார். அதை நாவலர் அவர்கள் உரையாற்றுகின்ற மேடையில் மிக அழகாகச் சொல்லுவார்.
‘‘வறியவர்க்கெல்லாம் கல்வியின் வாடை’’
என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் கவிதையின் முதல் வரியைப் படித்தவுடன், அனைவரும் கைதட்டி, அடுத்த தாக என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தார்கள்.
‘‘வரவிடவில்லை, மத குருக்களின் மேடை’’ என்று சொன்னவுடன், அனைவரின் முகமும் சுருங்கிப் போயிற்று. புரட்சிக்கவிஞர் சொன்னதை, பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்கிறார்கள். மேடையில், நிறைய பாதிரிமார்கள் இருக்கிறார்கள், எதிரே இருப்பவர்களிலும் நிறைய பாதிரிமார்கள் இருக்கிறார்கள்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் நிதானமாகப் படிக்கிறார். உடனே மேடையில் இருந்த கவர்னருக்கு ஆர்வம் ஏற்பட்டு, ‘‘கோந்தினியே, கோந்தினியே’’ (‘‘மேலே சொல்லுங்கள், மேலே சொல்லுங்கள்’’ என்று பிரெஞ்சு மொழியில் அர்த்தம்) என்றாராம்.
‘‘வறியவர்க்கெல்லாம் கல்வியின் வாடை
வரவிடவில்லை மத குருக்களின் மேடை
நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை
நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை’’
என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் படித்து முடித்ததும், அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் எழுந்ததாம்!
கடைசிவரை தந்தை பெரியாரின் கொள்கை வீரர் புரட்சிக்கவிஞர்!
அன்றைக்கு எழுதியவர், கடைசிவரையில் அந்தக் கொள்கையில்தான் இருந்தார். கடைசி வரையில் பெரியாருக்கு அரணாக இருந்தவர். பெரியார் எப்படி தன் சொந்தக் கருத்துகளைச் சொன்னாரே, அதேபோன்று, ‘திராவிடத் திருமணத் திட்டம்’, ‘சுயமரியாதை இயக்கத் திட்டம்’ இவை அத்தனையும் சொல்லிவிட்டு, கடைசியில், ‘‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண முறைதான் ஒழுகல் வேண்டும்’’ என்று எழுதினார்.
பெரியார் சொன்னதையே பல பேரால் இன்றும் ஜீரணிக்க முடியாது.
அப்படிப்பட்ட ஒரு காலத்தில், இன்றைக்கு உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் எல்லாம், பெரியாரின், நம்முடைய கொள்கையின் தேவையினை உணர்ந்து அவற்றுக்குச் சாதகமாக வந்தாயிற்று.
அப்படிப்பட்ட புரட்சிக்கவிஞருக்குப் பிறந்த நாள் விழா – தமிழ் மொழிக்காக அரண் சேர்த்தது.
‘‘வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்!
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்!
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்!
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்!
தமிழனே இது கேளாய்…’’
என்றார்.
‘‘இருட்டறையில் உள்ளதடா! உலகம்! ஜாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே!
வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்”
ஜாதிவாரி கணக்கெடுப்பு வெறும் அறிவிப்பாக மட்டும் இருக்கக்கூடாது!
ஒரு காலத்தில் சங்க காலம்; இப்போது ஜாதி சங்க காலம். புதிது புதிதாக வருகிறது.
இப்படி இருக்கும்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்று சொன்னவுடன், ‘‘அய்யோ, ஜாதி, ஜாதி’’ என்று சொன்னார்கள்.
இந்த விழாவில் நமக்கெல்லாம் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், திராவிட இயக்கம் அன்று முதல் இன்றுவரையில், திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டு வந்த ஒரு செய்தி ‘‘ஜாதிவாரி கணக்கெ டுப்பாகும்.’’
இதோ இந்தப் புத்தகம் 20 ரூபாய்தான். அந்தப் புத்தகத்தை உங்கள் இருக்கைக்கே கொண்டு வருவார்கள், தோழர்கள். அதை நீங்கள் எல்லோரும் வாங்கவேண்டும்; படிக்கவேண்டும். முழுமையான வரலாறு இருக்கிறது அதில்.
இன்றைக்கு ஓர் ஆங்கில நாளேட்டின் தலை யங்கத்தில் எழுதியிருக்கிறார்கள்.
அதில், இன்றைக்கு மோடி அறிவித்திருக்கி றாரே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று. ஆனால், இதற்கு முன்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்கின்றவர்கள் எல்லாம் யார் என்றால், ‘‘அர்பன் நக்சல்கள்’’ (நகர்ப்புற நக்சல்கள்) என்றார்.
இன்றைக்கு முதல் நகர்ப்புற நக்சல்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால், அங்கேதான் இருக்கி றார்கள். இருந்தாலும் பரவாயில்லை, இந்தக் கணக்கெடுப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏனென்றால், இந்தக் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிராகும். இதை யாரும் அசைத்துவிடலாம்; ஒழித்துவிடலாம் என்று நினைக்க முடியாது.
அரசியல் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், புலவர்கள் பெருமான்கள் அமர்ந்திருக்கக்கூடிய இந்த அரங்கத்தில், இந்த இயக்கத்தில், இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
‘‘ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்கிறோம்’’ என்று தீர்மானம். அப்படி வரவேற்கின்ற நேரத்தில், கணக்கெடுப்புக்கு கால வரையறை செய்ய வேண்டும்.
ஏனென்றால், மோடி அறிவிப்பார், அதற்குக் காலவரையறை இருக்காது. மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை மசோதாவாக நிறைவேற்றினார்கள். ஆனால், அது நடை முறைக்கு வரவில்லை.
ஆகவேதான், காலவரையறை செய்ய வேண்டும்.
அரசமைப்புச் சட்டம் 742 ஆவது பிரிவில், 7 ஆவது அட்டவணையில், 69 ஆவது அயிட்டமாக, ஒன்றிய அரசினுடைய அதிகாரமாக இருக்கக்கூடிய ஒரு செய்தி.
அது நடைமுறையில் வந்தாயிற்று.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். சில பேர் ‘‘காப்பி ரைட் சமூகநீதிக்கானவர்கள்’’ மற்றவர்களுக்கெல்லாம் காப்பி ரைட் கிடையாது; எங்களுக்கு மட்டும்தான் என்று சொல்லக்கூடிய ஒருவர் சொல்கிறார்.
அது என்னவென்றால், ‘‘தி.மு.க.விற்கு இதில் உரிமையே கிடையாது’’ என்று.
தி.மு.க. என்றாலே, தி.க.தான்!
தி.மு.க. என்றாலே, தி.க.தான். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. ஏனென்றால், தி.க.வை விட்டுவிட்டு, தி.மு.க.வை எழுத முடியாது.
மேலும் அவர் சொல்கிறார், ‘‘ஸ்டாலினுக்கு உரிமை இல்லை’’ என்கிறார்.
ஸ்டாலினுக்கு உரிமையில்லை என்று எப்படி சொல்ல முடியும்? எப்படி ராகுல் காந்தி அவர்கள், இரண்டாண்டுகள் தொடர்ந்து போராடினார். அதற்கு முன்பு, காங்கிரஸ் இயக்கம், வேறு நிலையை எடுத்தி ருந்தது. ஆனால், அவருடைய தலைமையில், பழைய தவறுகள் எல்லாம் திருத்தப்பட்டு, சமூகநீதியினுடைய காங்கிரசாக, இன்றைய காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மிக முக்கியமான ஜாதிவாரி கணக்கெடுப்பில் என்ன செய்யவேண்டும் என்றால், ‘‘காலவரையறை செய்வதுடன், அதற்காக பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். இவ்வளவு பெரிய நெருக்கடி வந்தவுடன், நாடாளுமன்றத்தைக் கூட்டியிருக்கவேண்டும். அதைத்தான் காங்கிரஸ் நண்பர்களும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியினர் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால், இந்தக் காலகட்டம் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று அவர்கள் அறிவித்தது- பீகார் மாநில சட்டப்பேரவை தேர்த லுக்காகக்கூட இருக்கலாம். அது எப்படியோ இருக்கட்டும். அந்த ஆராய்ச்சிக்கு நாம் போகவேண்டிய அவசியமில்லை.
ஆனால், ஒரு காலத்தில், மற்றவர்களைப் பார்த்து அவர்கள் கேலி செய்தார்கள்; குற்றம் சுமத்தினார்கள். இன்றைக்கு வேறு வழியில்லாமல், ‘‘சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி’’ என்று சொன்ன பழைய கணவன்மாதிரி, இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு வந்திருக்கிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
மற்றவர்கள், ‘‘எங்களுக்குத்தான் உரிமை, எங்க ளுக்குத்தான் உரிமை’’ என்று சொல்லுகிறார்கள்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘‘வெற்றிக்கு ஆயிரம் பேர் உரிமை கொண்டாடுவார்கள்; தோல்வி அனாதையாகத்தான் இருக்கும்’’ என்பதுதான் அது.
ஆகவேதான், இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.
இந்த ஆண்டு, ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டாகும். செந்தில்வேல் அவர்கள் அதனை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.
‘விடுதலை’யில் வெளிவந்துள்ள தலையங்கம்!
‘விடுதலை’யில் வெளிவந்திருக்கின்ற இன்றைய தலையங்கத்தைப் படித்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
என்னதான் உலகப் பார்வை இருந்தாலும், உள்ளூர் பார்வை போகாது எங்களுக்கெல்லாம். நான் கடலூர்க்காரன். எங்கள் கடலூர் ஞானியார் அடிகள்தான் ‘குடிஅரசு’ இதழைத் தொடங்கி வைப்பதற்காக, மே 2 ஆம் தேதி வந்தார்.
‘‘அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சனை, பொய், களவு சூது
சினத்தையும் தவிப்பாயாகில்
செய்தவம் வேறுண்டோ?’’
‘குடிஅரசு’ இதழில் உள்ள பாட்டு.
இதைப் பார்த்த என்னுடைய சட்டக் கல்லூரி ஆசிரியர் நீதிபதி இஸ்மாயில், தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
அந்தப் பாடலை அவரிடம் படித்துக் காட்டியபோது, ‘‘ஏம்பா, இது யார் எழுதிய பாட்டு? வள்ளலார் எழுதிய பாடல் போன்று இருக்கிறதே’’ என்றார்.
அப்படிப்பட்ட ‘குடிஅரசை’பற்றி இரண்டு செய்தி களை மட்டும் இங்கே சொல்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் – பத்தாண்டு வரையில், ‘குடிஅரசு’ இதழில் புரட்சிக்கவிஞர் வாழ்த்து எழுதினார். அதுவே, ஒரு தனி நூலாக – பாடல்கள் தொகுப்பாக வந்து – பல்கலைக் கழகங்களில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பாக அமைந்தது. ஓர் அம்மையார் தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார். இது உங்களின் தகவலுக்காகச் சொல்கிறேன்.
1927 மே மாதம் ஒன்றாம் தேதி, ‘குடிஅரசு’ இதழில் அய்யா பெரியார் பேசுகிறார்:
எதை எதையெல்லாம் கண்டித்தார் தந்தை பெரியார்!
‘‘பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடிஅரசு’வி னாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவற்றைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்ப வற்றைக் கண்டித்திருக்கின்றேன். வேதம்என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன். சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜாதி என்பதனைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜனப் பிரநிதித்துவம் என்ப தைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராச்சியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்னவற்றையோ,யார் யாரையோ கண்டித்திருக்கின்றேன். கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.
எதைக் கண்டித்திருக்கின்றேன்; எதைக் கண்டிக்க வில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும், கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப்படமாட்டேன் என்கிறது’’ என்கிறார் தந்தை பெரியார்.
‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ கலைஞர் ‘குடிஅரசு’ குருகுலத்தின் தயாரிப்பு!
22 விஷயங்களைப் பட்டியல் போட்டிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள். இப்படி ஒரு புரட்சிகரமான ஏடு – அந்த ஏட்டில் இருந்த பணிக் காலத்தைத்தான், நம்முடைய ‘‘மானமிகு சுயமரியாதைக்காரரான’’ கலைஞர், ‘‘குடிஅரசு குருகுலம்’’ என்று குதூகலித்தார். அந்தக் குடிஅரசு குருகுலத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய ஆட்சி – செயல்திறன் வளர்ந்திருக்கிறது.
அண்ணா அவர்கள், ‘குடிஅரசு’ ஏட்டில், ‘விடு தலை’க்குப் பணிபுரிய அந்தக் காலகட்டத்தில் ஈரோட்டிற்குச் சென்றிருந்தார்.
இவையெல்லாம் திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற வரலாறாகும்.
இன்னும் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. என்றாலும், நேரம் நெருங்கிவிட்டது. கட்டுப்பாட்டை மீறக்கூடாது. ஆகவே, இவ்விழாவிற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடைக்கு வந்த ஜெகத்ரட்சகன் வேறு; மேடையிலிருந்து திரும்பும் ஜெகத்ரட்சகன் வேறு!
இன்றைக்கு நமக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால், அவர் வரும்போது, நாடாளுமன்ற உறுப்பி னராக வந்தார்; கல்வி நிறுவனங்களின் காப்பாளராகவும், நிரந்தர அமைப்பாளராகவும், ஏற்பாட்டாளராகவும், நிறுவனராகவும் வந்தார்.
இவ்விழா முடிந்து செல்லும்போது, ‘‘புரட்சிக்கவிஞ ருடைய உலகப் பேரவைத் தலைவர்’’ என்ற சிறப்புடன் செல்கிறார்.
இந்த விழாக்கள் உலகம் முழுவதும் நடைபெறு வதற்கான முன்னெடுப்புகளை செய்வார். எங்களுக்கு உற்சாகம் இருந்தாலும், எங்களுடைய வயது கூடிக் கொண்டிருப்பதால், அதற்குரிய கோளாறுகள், இடையூறுகள் இருப்பதால், ஆகவே, இவரைப் போன்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நினைத்து, இவரிடம் ஒப்படைத்திருக்கின்றோம்.
இவ்விழாக்களை முன்னெடுங்கள், வேகமாகச் செல்லுங்கள் – புரட்சிக்கவிஞர் மூலமாக, “தமிழ் ஒளி உலகமெலாம் பரவட்டும்!”
எனவே, உலகெலாம் என்று எடுத்த அடி இருக்கிறதே, அதனை இன்றைக்கு உலகெலாம் என்று நாங்கள் அடியெடுத்துக் கொடுக்கிறோம். நாங்கள் சேக்கிழார்கள் கிடையாது – ஆனால், செயல் கிழார்கள். ஆகவே, இதனை நீங்கள் செய்யுங்கள்!
வாழ்க புரட்சிக்கவிஞர்!
திராவிடம் வெல்லட்டும் – முதலமைச்சருடைய பணிகளுக்கு என்றைக்கும் துணையாக இருப்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.