8 ஆம் வகுப்புவரை ‘ஆல் பாஸ்’ என்பதை மாற்றி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பிலும் தேர்வு நடத்துவதுதான் ‘‘புதிய கல்விக் கொள்கையா?’’
கிராமத்துப் பிள்ளைகளையும், முதல் தலைமுறையாகப் படிக்க வருவோரையும் சங்கடத்திற்கும்,
சலிப்பிற்கும் ஆளாக்கி, இடைநிற்றலுக்கு ஆளாக்குவதா?
இத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு எதிர்த்து ஒப்புக்கொள்ளாதது வரவேற்கத்தக்கது!
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துவது என்பது, கிராமத்துப் பிள்ளைகளையும், முதல் தலைமுறையாகப் படிக்கும் பிள்ளைகளையும் சங்கடத்திற்கும், சலிப்பிற்கும் ஆளாக்கும் என்றும், இது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இதனை கல்வியாளர்களும், பெற்றோர்களும் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றும், இத்திட்டத்தை எதிர்த்து ஒப்புக்கொள்ளாத தமிழ்நாடு அரசின் முடிவு வரவேற்கத்தக்கதாகும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:-
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு ‘‘புதிய கல்விக் கொள்கைத் திட்டம்’’ என்ற ஒன்றைத் தயாரித்து, மாநிலங்கள்மீது அதனைத் திணிக்க நாளும், நிதி மறுப்பு உள்பட சில ‘ஆயுதங்களை’ பிரயோகப்படுத்தி, அரசமைப்புச் சட்டம் 7 ஆவது அட்டவணையில் தந்துள்ள ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள ‘மாநிலக் கல்வி உரிமைகளைக் கபளீகரம்’ செய்து, நாட்டை பழைய மனுதர்ம ஆட்சிக்காலத்திற்கே தள்ளிட, நாளும் தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது!
தமிழ்நாடு நிராகரிக்கிறது!
பெரியார் மண்ணான தமிழ்நாட்டின் கூர்மையான தொலைநோக்கும், நுண்ணறிவும், வருமுன் காக்கும் வகையில், இதனை நிராகரிக்கிறது. இந்தப் புதிய கல்வித் திட்டத்தினைத் தயாரித்த குழுவில், எத்தனை பேர் கல்வியாளர்கள் என்று விரலை மடக்க முடியுமா?
ஆர்.எஸ்.எஸ். நினைப்பதைக் கல்விக் கொள்கை யாகவே ஆக்கி, முரண்பாடுகளின் மொத்த உருவ மாகவே, இந்தப் புதிய கல்விக் கொள்கைத் திகழ்கிறது.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் ஒரு பக்கம் குலக்கல்வியின் பெருமைகளைக் கூறிக்கொண்டே, மறுமுனையில் பற்பல தேர்வுகளை – முற்றிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அறிவிக்கிறார் – இத்திட்டத்தின்மூலம்!
மருத்துவம் படிக்க ‘நீட் தேர்வு’ ஒருபுறம் – மாணவ, மாணவிகளின் உயிர்களைப் பலி வாங்கும் பலி பீடமாக ஆகி, தொடர் கதையாகவே இன்றுவரை தொடரும் அவல நிலை!
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மாநிலக் கல்வித் திட்டப் பள்ளிகளின் படிப்பையே அங்கீகரிக்க மறுக்கும் வகையில், ஒன்றிய அரசினர் மனுதர்மத்தில் உள்ளபடி – கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்க பல ‘கண்ணிவெடிகளை’ப் புதைத்து வைத்துள்ளார்கள்.
5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை
எத்தனை எத்தனைத் தேர்வுகள்?
எத்தனை எத்தனைத் தேர்வுகள்?
5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு
8 ஆம் வகுப்பில் மீண்டும் பொதுத் தேர்வு
10 ஆம் வகுப்பில் ஏற்கெனவே பொதுத் தேர்வு
12 ஆம் வகுப்பில் மறுபடியும் பொதுத் தேர்வு
இவற்றையெல்லாம் தாண்டி வெற்றி பெற்ற பிறகும்கூட, கல்லூரிக் கல்விக்கு ‘க்யூட்‘, ‘நெக்ஸ்ட்’ இப்படிப் பல பன்னாடை முறை வடிகட்டல் தேர்வுகள் – என்னே கொடுமை!
இளம்பிள்ளைகளின் மனதை கல்வியில் நாட்டம் கொள்ளச் செய்ய 8 ஆம் வகுப்புவரை ‘ஆல்பாஸ்’ (All Pass) என்பது அவசியம் என்ற கல்வி நிபுணர்களின் கருத்துக்கிணங்கவே அது பல ஆண்டுகளாக அமலில் இருந்ததை இப்போது ஒழித்துவிட்டு, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வைத்து, அவற்றில் ‘பாஸ்’ செய்தால்தான் அடுத்து 6 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்புக்கோ போக முடியும் என்று ஆக்கினால்,
கிராமத்துப் பிள்ளைகள், முதல் தலைமுறையாகப் படிக்க வரும் பிள்ளைகளை சங்கடத்திற்கும், சலிப்பிற்கும் ஆளாக்குவதா?
ஏற்கெனவே கிராமப்புறங்களிலிருந்து வரும், முதல் தலைமுறைப் படிப்பாளிகளாக உள்ளவர்களும் இந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே தோல்வி, தோல்வி என்று கண்டால்,அவர்களுக்கு ஏற்படும் சலிப்பும, சங்கடமும், விரக்தியும் ஏற்பட்டு அம்மாணவர்கள் மனமொடிந்து இடைநிற்றலுக்கு (Dropout) ஆளாக்கி விடாதா?
அதைத் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், புதிய கல்விக் கொள்கையில் உள்ளடங்கிய ஆபத்தினை தெளிவாக விளக்கினார்.
Directive Principles of State Policy என்ற அரச மைப்புச் சட்டத்தின் நான்காவது பிரிவுப்படி உள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் முக்கியமாக 10 ஆண்டுகளில் ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக்கி – இளந்தலைமுறையினரைப் படிக்க வைக்க வற்புறுத்துகிறது.
அதையே காலந்தாழ்த்தித்தான் அப்போதைய காங்கிரஸ் (கூட்டணி) அரசு நடைமுறைப்படுத்தியது; தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில்கூட 25 விழுக்காடு வற்புறுத்தப்பட்டு, அதற்குரிய கட்ட ணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கும் அளித்து, கல்வியை வளர்த்த நிலை; இப்போது இந்தப் புதிய(?) கல்வித் திட்டத்தின்கீழ் இத்தனை அடுக்கடுக்கான தேர்வுகளை ஒன்றன்பின் மற்றொன்றாக திணிப்பது
மாணவர் கல்வியைப் பெருக்கவா? சுருக்கவா?பெற்றோர்களே, உங்கள் கடமை என்ன?
பெற்றோர்களே, உண்மையான கல்வி நிபுணர்களே, இது நியாயமா? அசல் ‘மனுதர்மத்தை‘ செயலாக்கி, சூத்திர, பஞ்சம மக்களது கல்வியில் மண்ணைப் போட்டு மூடுவதைத் தவிர, வேறு என்ன?
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இப்படி விபரீத விளையாட்டு – ஆர்.எஸ்.எஸ். ‘விளை யாட்டு‘‘கள் என்ற விபரீதத்தை நீங்கள் வேடிக்கைப் பார்க்கலாமா?
கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொறிந்துகொள்வது அறிவுடைமையா?
குருகுலக் கல்வி அடுத்து அமலுக்கு வருவதற்கும், கல்விக் களத்தை ஆயத்தப்படுத்தி, சிவப்புக் கம்பள வரவேற்பை நல்குகிறார்கள்!
சமஸ்கிருதம் கற்ற ஆசிரியர் ஒருவரிடம், ‘‘12 ஆம் வகுப்புக்குச் சமமான படிப்பை இவர் படித்துள்ளார்’’ என்ற சான்றிதழ் பெற்றுவிட்டால், அவர் நேரடியாகக் கல்லூரிகளில், பல்கலைக் கழகப் பட்டப் படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடலாம் குருகுலக் கல்வியில். ஒரு ‘‘கல்லில் இரண்டு மாங்காய்’’ அடிக்கிறார்கள்.
- சமஸ்கிருத வீட்டுப் படிப்புக்கு அங்கீகாரம்‘
- பல தேர்வுகளை குருகுல மாணவர்கள் இப்படி சந்திக்காமலேயே மேற்பட்டப் படிப்பு (Post Graduate) வரை சென்றுவிடும் திட்டம் நிறைவேற்றி, உயர்ஜாதி முன்னேறியவர்கள் எப்படி Quantified Data– புள்ளி விவரம் ஏதும் கேட்காமலேயே 10 சதவிகித இட ஒதுக்கீடு ‘‘உயர்ஜாதி ஏழைகள்’’ என்ற 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் பெறும் ’’விசித்திர ஏழைகள்’’ அடையும் கல்வி, உத்தியோக வாய்ப்புகள் போல, இதுவும் வந்து, அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கும்.
எனவே, தமிழ்நாடு புரிந்துகொண்டதைப்போல, மற்ற மாநிலங்களும் புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம்.
தமிழ்நாடு கல்வியில் வளருவதை அழிக்கும் நோக்கில், வேரில் வெந்நீர் பாய்ச்சும் இம்முயற்சிக்கு எதிராக நாடெங்கும் கண்டனக் குரல்கள் ஓங்கட்டும்! ஓங்கட்டும்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.5.2025