புரட்சிக் கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா
புரட்சிக் கவிஞர் தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா
சென்னை, மே 3- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கிய தென்றல், பெரியார் களம் ஆகியவற்றின் சார்பில் 42 ஆம் ஆண்டு புரட்சி கவிஞர் விழா ,தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா, தமிழ் வார விழா, முதலமைச்சருக்கு பாராட்டு – குடிஅரசு நூற்றாண்டு விழா நிகழ்ச்சி 2.5.2025 அன்று மாலை சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவரது உரையில்:
நீதிக்கட்சிக்கு மய்யமான பகுதி தியாகராயர் நகர் என்றும் தியாகராய நகரை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து இடங்களும் நீதிக்கட்சியின் வரலாற்றை பேசக்கூடிய இடங்கள் தான் அந்த வகையில் தியாகராயர் அரங்கத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழா எடுப்பது மிக பொருத்தம் என்றார். தொடர்ந்து 42 ஆண்டுகளாக புரட்சி கவிஞர் விழாவை தமிழர் கலை பண்பாட்டு புரட்சி விழாவாக திராவிடர் கழகம் ஏன் கொண்டாடி வருகிறது என்ற வரலாற்றினை பதிவு செய்தார்.
ஆசிரியர் எடுத்த முடிவு
சென்னை தேனாம்பேட்டையில் ‘இந்து சமய கலை விழா’ என்ற செய்தியைப் பார்த்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழர் பண்பாட்டை பரப்பும் வகையில் பாரதிதாசனுக்கு விழா எடுக்க வேண்டும் என்று 42 ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்த முடிவினை கூறினார். மேலும் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை தமிழ் வார விழாவாக கொண்டாட வேண்டும் என்பது உலக தமிழர்கள் எண்ணம் என்றும், அதனை தெரியப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 4, 2025 அன்று ஆசிரியர் அவர்கள் விடுதலையில் வெளியிட்ட அறிக்கையும் அதனைத் தொடர்ந்து 25/4/2025 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் புரட்சி கவிஞர் பிறந்தநாள் விழாவை தமிழ் வார விழாவாக அறிவித்ததையும் மிக மகிழ்வுடன் பதிவு செய்தார். உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு இது என்றும், அதிலும் 02.05.1925 அன்று தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழை தொடங்கிய நாளில் இவ்விழா நடப்பது கூடுதல் சிறப்பு என்றார் .பாரதிதாசன் அவர்கள் குடிஅரசு எட்டாம் ஆண்டு தொடக்கத்தில் எழுதிய கவிதையை வாசித்து, அந்தப் புரட்சிக் கவிஞர் அவர்களின் வழி வந்த கவிச்சுடர் கவிதை பித்தன் அவர்கள் இன்று ‘புரட்சி கவிஞர் விருது’ பெற இருக்கிறார்கள் என்ற மகிழ்வினையும் வெளிப்படுத்தி நிறைவு செய்தார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் சு.குமாரதேவன்
நிகழ்வில் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். அவரது உரையில், புரட்சிக் கவிஞருக்கும் சர்.பிட்டி.தியாகராயருக்கும் எவ்வகையில் தொடர்பு இருக்கிறது என்பதை விளக்கினார். குறிப்பாக புரட்சி கவிஞர் அவர்கள் இறுதியாக வாழ்ந்த இடம் இந்த தியாகராய நகர் என்றும் புதுச்சேரிக்கு இருக்கும் பெருமை தியாகராய நகருக்கும் உண்டு என்றார். பல கவிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் ‘பாவேந்தர் பரம்பரை’ என்று சொல்லத்தக்க வகையில் தனி பெருமை புரட்சிக் கவிஞர் அவர்களுக்கு மட்டும்தான் உண்டு என்றார். இன்று ஆரிய பண்பாட்டு படையெடுப்பாக ஆரிய பண்பாட்டினை திணிப்பதற்காக பலவகையில் ஒன்றிய அரசு முயற்சி செய்வதையும் ,தற்போது அகஸ்தியரை அவர்கள் கையில் எடுத்திருப்பதையும் விளக்கினார். விஜய பாரதம் பத்திரிகையில் பாரதிதாசன் பற்றி வெளி வந்திருக்கக் கூடிய செய்திகளை ஆதாரத்துடன் எடுத்துரைத்து, புரட்சிக் கவிஞரை தேசிய கவிஞர் என்று எவ்வித ஆதாரமும் இன்றி அவர்கள் பரப்புகின்ற பொய்களை எடுத்துரைத்தார்.
திராவிடக் கவிஞர்
எங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்துள்ள புரட்சிக்கவிஞரை திராவிட கவிஞர் என்று நாம் என்றும் பெருமையுடன் கூறுகிறோம் என்றும், சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்னால் குடிஅரசு இதழை வாசிப்பதற்கு முன்னால் பாரதியார் மீது பற்றுக் கொண்டிருந்தவர். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து அவரின் இறப்பு வரை தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்ற தொண்டராகதான் வாழ்ந்து மறைந்தார் என்றார். தொடக்க உரையாற்ற வருகை தந்திருந்த மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் முன் வைத்தார். கம்பரை பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசும் ஆற்றலை படைத்த தாங்கள் புரட்சி கவிஞரைப் பற்றி தொடர்ந்து பேச வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து நிறைவு செய்தார்.
கழக பிரச்சார செயலாளர்
வழக்குரைஞர் அருள்மொழி
வழக்குரைஞர் அருள்மொழி
கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரையில், தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துக்களை, புரட்சிகர சிந்தனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை புரட்சி கவிஞர் செய்தார் என்றும், போர்க்களத்தில் நிற்பவர்களுக்கு புரட்சிக் கவிஞர் படை கருவியாக அமைந்தார் என்றார். ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’ என்ற தலைப்பில் அவர் பேசியதை நினைவு கூர்ந்து ,அது வெறும் வரிகள் அல்ல தனது வாழ்வில் மலேசியா அரசு சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் நூற்றாண்டு விழாவுக்காக தான் முதலில் விமானத்தில் பயணம் செய்ததாகவும், பெரியாரின் சிந்தனைகளால் புரட்சிக்கவிஞரால் தான் விமானத்தில் பறக்கும் வாய்ப்பினைப் பெற்றேன் என்ற நெகிழ்வான செய்தியைப் பதிவு செய்தார். புரட்சிக் கவிஞர் அவர்கள் எந்த அளவுக்கு கொள்கை பிடிப்புடன் இருந்தார் என்றும், பிரதமர் நேருவின் படத்தை கொளுத்திய வரலாற்றையும் தெளிவாக எடுத்துரைத்தார் .இன்றைக்கு திராவிடர் இயக்கத்திற்கும் புரட்சிக் கவிஞருக்கும் பிரச்சினை என்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க கூடிய கயவர்களுக்கு, ஆதாரங்களுடன் பதில் உரைத்தார். குறிப்பாக, புரட்சிக் கவிஞர் அவர்களின் கவிதைகளை நாட்டுடைமை ஆக்கியவர் கலைஞர் தான் என்றும், எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்பதற்கு ஏற்ப கலைஞர் செய்த சாதனையை கூறினார். 1930 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் பொதுவுடைமை கட்சியின் அறிக்கையை இந்தியாவிலேயே முதன்முறையாக மொழிபெயர்த்து வெளியிட்ட அதே சமயத்தில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என்னும் தலைப்பில் சமத்துவ பாட்டு என்று சமத்துவம் குறித்து மிக நீண்ட கவிதையை புரட்சிக் கவிஞர் எழுதி இருந்தார் என்றும், பகுத்தறிவு சார்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதைகளை விவரித்தும் உரையாற்றினார். இறுதியாக, ஈரோட்டு இறைவன் சொல் கேட்க வேண்டும் என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளை கூறி, அவரின் பெண் உரிமை கவிதைகள் ஏற்படுத்திய தாக்கங்களை விளக்கி நிறைவு செய்தார்.
கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு விருது
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக கவிச்சுடர் கவிதைபித்தன் அவர்களுக்கு புரட்சிக்கவிஞர் விருதினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கினார். விருதினைப் பெற்ற கவிச்சுடர் கவிதைபித்தன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அவரது உரையில், தான் தன்னுடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றும், திருச்சி பெரியார் கல்லூரியில் தான் பட்டம் பெற்றேன் என்றார். தான் பட்டம் பெற்றது திருச்சி பெரியார் கல்லூரி என்றால் முதன் முதலில் தான் சென்னைக்கு வருகை தந்தது தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவிற்காக தான் என்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பெரியாரின் கொள்கைகளை என்றும் நெஞ்சில் ஏந்தி நடப்பவர் என்றும், தன்னுடைய முதல் கவிதையே பகுத்தறிவு கொள்கை சார்ந்தது தான் என்பதை கவிதையுடன் எடுத்துரைத்தார். 1981ஆம் ஆண்டு 10,600 பேர் கலந்துகொண்ட அகில இந்திய கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்ற நிகழ்வினையும், முதல் பரிசு பெற்றும்கூட எந்த ஊடகமும் ஏடும் இந்த செய்திகளை பதிவு செய்யவில்லை என்றார். அன்றைக்கு பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையையும் பார்ப்பனரல்லாத நமக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் இதன் மூலம் விளக்கினார். அத்தருணத்தில் தனது தமிழாசிரியர் புதுக்கோட்டையிலே, அவாள் மட்டும் இப்படி முதல் பரிசை பெற்றிருந்தார்கள் என்றால் டில்லி அரசவை கவிஞராக ஆக்கிஇருப்பார்கள் ஆனால் நம்மவர் பெற்றிருப்பதால் அது செய்தியாகவில்லை என்று பேசிய செய்தி செய்தித்தாளில் வந்திருந்தது. அதை பார்த்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனடியாக புதுக்கோட்டை பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களை அழைத்து இந்த செய்தியை தெரியப்படுத்தி ஏன் நீங்கள் அவருக்கு பாராட்டு விழா எடுக்கவில்லை என்று கடிந்து கொண்ட செய்தியையும், ஆசிரியர் பேசிய 24 மணி நேரத்திற்குள் புதுக்கோட்டை நகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தனக்கு பாராட்டு விழா எடுக்கப்பட்டதையும் மிகுந்த நிகழ்ச்சியுடன் பதிவு செய்தார். மேலும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு தன்னை அறிமுகப்படுத்தி வைத்ததும் ஆசிரியர்தான் என்றார். அன்றைக்கு ஆசிரியரால் கலைஞர் இடத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பின்பு மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தேர்தலில் நிற்கக் கூடிய வாய்ப்பினை கலைஞர் தனக்கு வழங்கியதையும் நினைவு கூர்ந்தார். எத்தனை விருதுகளை தனது வாழ்நாளில் பெற்றிருந்தாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற்றதைதான் மிகுந்த பெருமையோடு நினைவு கூர்வதாகவும், அதற்கு நன்றி செலுத்த கலைஞரை சந்தித்தபோது, ஆசிரியரை சந்திக்க வேண்டும் என்று கலைஞர் கூறிய நிகழ்வினை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். அந்த சந்திப்பின்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தன்னை எவ்வாறு எல்லாம் பாராட்டினார் என்றும், கிடைத்தற்கு அரிய வாய்ப்புகளை எல்லாம் அந்த உரையாடலில் ஏற்படுத்திக் கொடுத்த வரலாற்று நிகழ்வினை பதிவு செய்தார். மேலும் தந்தை பெரியாரை அவதூறு செய்யத் துடிக்கும் கயவர்களுக்கு எதிராக அவர் எழுதிய கவிதைகளை மிகுந்த எழுச்சியுடன் பதிவு செய்து நிறைவு செய்தார்.
ஜெகத்ரட்சகன் எம்.பி. சிறப்புரை
நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருடைய நெஞ்சில் தங்க சிம்மாசனமாக இருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் பதிவு செய்து உரையை தொடங்கினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எந்த அளவிற்கு தன்னுடைய வாழ்வில் கலந்திருக்கிறார் என்பதை பல்வேறு நிகழ்வுகளுடன் பதிவு செய்தார். குறிப்பாக 1968 ஆம் ஆண்டு பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வையும், பாவேந்தரை பற்றி தவறான செய்தியை குறிப்பிட்டவரை என்ன செய்தார்கள் என்பதையும் எடுத்துரைத்தார். ஆசிரியர் அவர்களைப் பொறுத்தவரை இலக்கணம் பிறழாத வாழ்க்கை வாழ்பவர் என்றும் ,நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு ஆசிரியர் அவர்கள் என்றும், தமிழ்நாட்டில் இந்த கருப்பு சட்டையைப் பார்த்துதான் எல்லோரும் பயப்படுகிறார்கள். பகுத்தறிவு போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் என்றால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை தமிழ் வார விழாவாக அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே தெரியவில்லை என்றும், பத்து வயதிலேயே கவிதை படைத்தவர் புரட்சிக் கவிஞர் என்றும், கலைஞருக்கு அதிகம் பிடித்த கவிஞர் புரட்சிக் கவிஞர்தான் என்பதையும் எடுத்துரைத்தார்.
1965 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளையும் கொண்டது தமிழ்நாடுதான் என்றும், அப்படிப்பட்ட தொண்டர்களைக் கொண்ட திராவிட இயக்கத்திற்கு தனி கீதமே எழுதியவர் புரட்சிக் கவிஞர் தான் என்றார். சாகும்போதும் தமிழ் பேசி சாக வேண்டும் என்ற வரிகள் எத்தகைய உணர்ச்சிமிக்கது என்றும் எடுத்துரைத்தார். மேலும் பிரெஞ்ச் சீர்த்திருத்தவாதி ஜூல்ஸ் பெஃரி (Jules Ferry) நூற்றாண்டு விழாவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களை பேச அழைக்க வேண்டாம் காரணம் அவர் பகுத்தறிவாளர் என்று அங்குள்ளவர்கள் கூறியதையும், அதன் பிறகு அந்த நிகழ்விற்கு சென்ற புரட்சி கவிஞர் அவர்கள் வாசித்த கவிதையினையும் பதிவு செய்தார். மேலும் அமெரிக்காவிலிருந்து தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியவர்களுக்கு எதிராக தனக்கு வந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, பெரியாரை அவதூறாக பேசுவதற்கு தமிழ் மண்ணில் யாருக்கும் தகுதி கிடையாது என்பதையும் எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான் தங்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாகவும், தட்டிக் கேட்பவராகவும் இருக்கிறார் என்றார். முதலமைச்சருக்கு கலைஞர் எப்படி இருந்தாரோ அந்த தந்தையின் இடத்தில் இருந்து ஆசிரியர்தான் தற்போது வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்து நிறைவு செய்தார்.
ஆவணம் ஆக்கிய ஆசிரியர்
நிகழ்வில் ஊடகவியலாளர் தி.செந்தில்வேல் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரையில், 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட குடிஅரசு வார இதழ் தற்போது நம் கைகளில் கிடைக்கப் பெறுகிறது என்றால் அதற்குக் காரணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதனை ஆவணப்படுத்தி இருப்பதுதான் என்றார் .நெருக்கடிகளை சந்திக்கும் நேரங்களில் எல்லாம் ஆசிரியரிடமிருந்து ஆற்றலையும் துணிச்சலையும் பெறுகிறோம் என்றார். மேலும் ஆசிரியர் இருக்கும் மேடையில் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஆவணம் என்றும், அதனால் தக்க ஆதாரங்களுடன் தன்னுடைய உரையை தயார் செய்திருப்பதாகவும் கூறினார். தந்தை பெரியார் எழுதிய அனைத்து கருத்துகளையும் ஆவணம் ஆக்கியவர் ஆசிரியர்தான். அந்த வகையில் பெரியார் மீதான அத்தனை அவதூறுகளுக்கும் பதில்களை குடிஅரசு இதழின் மூலமாக நாம் பெற முடிகிறது என்றார். ஜாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு திராவிட இயக்கம் தான் காரணம் அதற்கு முன்பு அந்த ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்ற பொய்யையும் , பேருந்துகளில் ஏற வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகம் என்று ஒன்று இல்லை என்றும், தந்தை பெரியார் திருக்குறளை மலம் என்று கூறினார் என்றும் பெரியார் ஆதிதிராவிட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை போன்ற பல பொய்களையும் ,அவதூறுகளையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பலர் பரப்பிக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் அவை அனைத்திற்கும் குடிஅரசு இதழ் நமக்கு பதில் சொல்கிறது என்றார்.
காரணம் தந்தை பெரியார்
குடிஅரசு இதழில் வெளிவந்த தந்தை பெரியார் அவர்கள் ஆதிதிராவிடர் மக்களுக்காக நடத்திய மாநாட்டின் பட்டியலை வாசித்தார். ஆதிதிராவிடர் நலனுக்காக தந்தை பெரியார் எழுதிய அறிக்கைகளை மேற்கோள் காட்டினார். மேலும் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய கரங்களை தமிழ்நாட்டில் வலுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு காரணம் தந்தை பெரியாருடைய கொள்கைகள் தான் என்றும், தந்தை பெரியார் இந்த சமூக இழிவுகளை நீக்க எவ்வகைகளில் எல்லாம் பேசி இருக்கிறார் என்பதை பல்வேறு ஆதாரங்களுடனும் குடிஅரசு அறிக்கைகள் மூலமும் பதிவு செய்தார். குறிப்பாக திருக்குறளை பொறுத்தவரை தந்தை பெரியாரின் குடிஅரசு இதழ் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை தாங்கி நின்றதை எடுத்துரைத்தார் . குடிஅரசுத் தலையங்கத்தில் தேசியம் பற்றி தந்தை பெரியார் எழுதிய செய்தியை குறிப்பிட்டு, இன்றுவரை நம்மை தேச பக்தி அற்றவர்கள் என்று பிஜேபி கூறிக் கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தார். அனைத்து செய்திகளையும் ஆதாரத்துடன் பதிவு செய்து, தந்தை பெரியார் அவர்கள் மே 2, 1925 இல் குடிஅரசு இதழை தொடங்கினார். இந்த இதழ் தமிழர்களுக்கு தடுப்பூசியாக அமைந்தது தந்தை பெரியார் தடுப்பூசி என்றால், நோய் ஆர்.எஸ்.எஸ். இந்த நோயை நாம் விரட்ட வேண்டும் என்றால், தந்தை பெரியார் என்ற தடுப்பூசியையும் குடிஅரசையும் நாம் வாசிக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.
உலகெலாம் பரப்புக
நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவரை ஆற்றினார். பல வரலாற்றுக் குறிப்புகளை இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்த ஆசிரியர் அவர்கள், மிக முக்கியமான இரண்டு செய்திகளை பதிவு செய்தார். உலக புரட்சிக் கவிஞர் விழாவின் தலைவராக திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களை அறிவித்தார் .உலகம் முழுவதும் புரட்சிக் கவிஞர் உடைய சிந்தனைகளை கொண்டு போய்ச் சேர்க்கும் மிக முக்கியப் பணியை அவர் செய்ய வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை அனைவரின் கரஒலிக்கு இடையில் பதிவு செய்தார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய பிஜேபி அரசு எடுப்பதாக அறிவித்திருக்கக்கூடிய சூழலில் எவ்வித அரசியல் காரணங்களுக்காக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் நிச்சயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான கால நிர்ணயத்தை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தையும் முன்மொழிந்தார். காலத்தின் அவசியம் கருதி ஆசிரியர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைத்து தோழர்களும் கரவொலியின் மூலம் வழிமொழிந்தனர்.
புரட்சிக் கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி 42ஆம் ஆண்டு விழா, தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு, ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா என நேற்று சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்குத் தமிழர் தலைவர் ‘புரட்சிக் கவிஞர் விருது’ வழங்கி, விழாப் பேருரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் களம் ஆகியவற்றின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கில் நேற்று (2.5.2025) மாலை 6 மணியளவில் புரட்சிக் கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி 42ஆம் ஆண்டு விழா, தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு, ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா நடைபெற்றது.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வரவேற்கிறோம். காலவரையறை செய்வதுடன் அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் விரைவில் அறிவிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்ற தீர்மானம் கழகத் தலைவரால் முன்மொழியப்பட்டது!
பலத்த கர ஒலி எழுப்பி ஆதரித்தனர்.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொதுச் செயலாளர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம், புதுமை இலக்கிய தென்றல் செயலாளர் வை.கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி இணைப்புரை வழங்கினார்.
திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் புரட்சிக் கவிஞர் 135 – என்ற தலைப்பிலும், ஊடகவியலாளர் செந்தில்வேல் ‘குடிஅரசு’ நூற்றாண்டு என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு ‘புரட்சிக் கவிஞர் விருது’ வழங்கி பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.
புரட்சிக்கவிஞர் விழா சிறப்புரையாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து புரட்சிக் கவிஞர் விருது பெற்ற கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்புரையாற்றினார். விழா நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். பெரியார் மாணாக்கன் குடும்பத்தினர் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர். இவ்விழாவில் பெருந்திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தொகுப்பு: செ.மெ.மதிவதனி