கேள்வி 1: ஒன்றிய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் 7-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், முகலாயர்கள் மற்றும் டில்லி சுல்தானியம் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் நீக்கப்பட்டு பிரயாக்ராஜின் மகா கும்பமேளா சேர்க்கப்பட்டிருப்பது இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயல் அல்லவா?
– கி.சுகுந்தா, வந்தவாசி.
பதில் 1: இந்திய ஒருமைப்பாட்டை – அய்க்கியத்தைச் சீர்குலைக்கும் செயல் மட்டுமல்ல; அசிங்கத்திற்குப் பொட்டு வைத்த செயலும் கூட.
*****
கேள்வி 2: நெடுஞ்சாலைகளை அமைத்தாலும், அங்கு எந்த வசதியும் இல்லாததால், விபத்துகளில் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்க நடவடிக்கை மேற்கொள்வார்களா?
– ப.பொம்மி, காஞ்சிபுரம்.
பதில் 2: உங்களின் விளக்கமான கேள்வி முடிவில் விடையும் கூறி விட்டீர்களே – பிறகு என் பதில் எதற்கு?
*****
கேள்வி 3: தமிழ்நாட்டிற்கு வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், அவர்களின் அராஜகப் போக்கு அத்துமீறி நடப்பதையும் தடுத்து நிறுத்திட திராவிட மாடல் அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?
– இரா.சித்ரா, கூடுவாஞ்சேரி.
பதில் 3: தமிழ்நாட்டில் கல்விப் பெருக்கு மிகுதி. கூலித் தொழிலாளர்கள் ‘பஞ்சமோ பஞ்சம்’. வளர்ச்சிப் பணிகளுக்கு வேலையாட்கள் தேவை. வடக்குதான் இத்தேவையைப் பூர்த்தி செய்கிறது. வேறு வழியுமில்லை.
கண்காணிப்புகளை – சிங்கப்பூர் அரசு போல கடுமையானதாக ஆக்க வேண்டும். அதுதான் எளிய வழி; ஒரே வழி.
*****
கேள்வி 4: 2026-ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியே தொடரும் என்று வைகோ கூறியிருப்பது மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு என்று கருதலாமா?
– ம.அருள், மேட்டுக்குப்பம்.
பதில் 4: அரசியல் சீர்வாய்ந்த சகோதரர் – திராவிடர் இயக்கப் போர்வாள் தோழர் வைகோ கணிப்பு இதில் சரியாகவே அமையும்.
*****
கேள்வி 5: திராவிட மாடல் அரசு முன்னெடுத்திருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று குடிமைப் பணித் தேர்வில் மெச்சத் தகுந்த வகையில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இளைய தலைமுறையினருக்கு புதிய உற்சாகத்தையும் – உத்வேகத்தையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
– வ.வணங்காமுடி, வண்டலூர்.
பதில் 5: எதிர்பார்க்காதீர்கள் -– அத்திட்டம் செயலுக்கு வந்ததால் அய்.ஏ.எஸ். முதல் வெளிநாட்டுப் போட்டிகள் வரை ‘நான் முதல்வனாக’ நம் மாணவ மணிகள் வெற்றிக் கனி பறித்து வீசி, விளையாடுகிறார்கள்; வினையாற்றி மகிழ்கின்றனர் – இப்போது!
*****
கேள்வி 6: பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள சதுர்வேதி சாமியார் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் எழும்பூர் அல்லி குளம் மகளிர் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து, மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே இதுகுறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுமா?
– த.சுமதி சுந்தர், கோவை.
பதில் 6: இத்தகைய பேர்வழிகளை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டங்களின்படி தண்டனைக்கு உள்ளாக்கி சிறையில் அடைக்க வேண்டும். புதுக்கோட்டை பிரம்மானந்தாவின் முன்னுதாரணம் உண்டே!
*****
கேள்வி 7: பா.ஜனதா கட்சி தற்போது புல்டோசர் இல்லாமல் சுத்தியல் மற்றும் உளியை வைத்து அரசமைப்புச் சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியிருப்பதை மக்கள் மனதில் இருத்திக்கொண்டு, பா.ஜனதாவுக்கு வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
– மா.குமாரி, கன்னியாகுமரி.
பதில் 7: நிச்சயமாக, அந்த Count Dowan (கவுண்ட் டவுன்) கீழிறக்கம் சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே தொடங்கிவிட்டதே! இப்போதே மோடியின் பா.ஜ.க. அரசு ‘மைனாரிட்டி’ அரசு தானே!
*****
கேள்வி 8: “இந்துக்கள் கடையில் மட்டுமே பொருள் வாங்குங்கள்” என்று மகாராட்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் மீது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும், மக்கள் ஒற்றுமைக்கும் எதிரான விபரீதப் போக்கு அல்லவா?
– சு.சின்னப்பொண்ணு, வாலாஜாபாத்.
பதில் 8: முதலில் அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற, மராத்திய மாநிலத்தில் இந்தியா கூட்டணி முதல் – ஜனநாயகம் – மதச்சார்பின்மை – அரசமைப்புச் சட்டம் மீது அக்கறை உடையவர்கள் ஒன்று திரண்டு ஓர் இயக்கமே நடத்திட யோசிக்க வேண்டும்.
*****
கேள்வி 9: தீவீரவாதமும் பயங்கரவாதமும் தலைவிரித்து ஆடும் காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்கால சுற்றுலாதலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளார். அசாதாரண நிலை உள்ள இடத்தில் மக்கள் கூடும் பஹல்காமை சுற்றி 10 கி.மீ. சுற்றுவட்ட தூரத்திற்கு ராணுவ பாதுகாப்பு மய்யம் அமைக்கப்படாதது ஏன் என அந்தப் பகுதி மக்கள் மட்டும் அல்லாது பொதுவானவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனரே?
மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 9: எதிர்க்கட்சியினர் கேட்க வேண்டிய கேள்விகளை அப்பகுதி மக்களே கேட்க ஆரம்பித்துள்ளனரே! அதிசயம். ஆனால் உண்மை!!
*****
கேள்வி 10: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், இனமுரசு சத்யராஜ் அவர்களுக்கு 2025 – ஆண்டுக்கான ‘பெரியார் ஒளி’ விருது வழங்க இருப்பதாக தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள் அறிவித்திருப்பதை பெரியாரிய – அம்பேத்கரிய தோழர்கள் வாயார மனதார வாழ்த்தி மகிழ்வார்கள் அல்லவா?
– ந. இனியவன், இரும்பேடு.
பதில் 10: நல்ல முடிவு; பொருத்தமானவர்களுக்கு சகோதரர் எழுச்சித்தமிழர் திருமா அவர்கள் தேர்வு தொடருகிறது ஒவ்வொரு ஆண்டுக்கும் – அனைவருக்கும் வாழ்த்துகள்!