(சென்ற வார தொடர்ச்சி…)
நாட்டை 800 ஆண்டுகாலம் ஆண்டவர்கள் இஸ்லாமியர்கள் அவர்கள் தங்கள் மொழியை முழுமுதற் தேசத்திற்கும் கட்டாயம் என்று திணிக்கவில்லை ஆனால் பார்ப்பன பாஜக திணிக்கிறது. அதன் நோக்கம் ஒற்றைத்தன்மையில் ஒரே நாடு இந்துஸ்தான், ஒரே மதம் இந்துமதம், ஒரே மொழி இந்திமொழி என்று ஆக்குவது. பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தாலும் அயோத்தியில் நீதிபதிகளுக்கு ராமர் அருளிய ஆசி கொண்டு தீர்ப்பு வாங்கி ராமருக்கு கோவில் எழுப்பினாலும் அடங்குவதாய் இல்லை 300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவுரங்கசீப் சமாதியை பிடிப்பதற்காக புறப்பட்டு இசுலாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியைத்தூண்டி கலவரம் செய்து வருகிறார்கள். அந்த இந்துத்துவவாதிகள் பாரதம் கேட்டது எல்லாம் மொகலாயர்களால் என்று வெறுப்பை உமிழும் போது உண்மையில் தமிழை தமிழரை அழிக்கும் எதிரிகள் சக்திகள் ஆரிய வகுப்பினரே என அன்றே இயம்பிய பாரதிதாசன்
“மொகலாயர் வந்து முடிபூண்டும் தம்மொழிதான்
சகலர்க்கும் சட்டமென்று சாற்றவில்லை என்தமிழா!
தாய்மொழிக்கு நேரெதிர்ப்பாய்த் தம்மொழியை வற்புறுத்து
பேய்களைநாம் கண்டதில்லை பேருலகில் என்தமிழா!
அன்று தமிழ்நூல் அழித்தார்கள் ஆரியர்கள்;
இன்றுதமிழ் வேரறுக்க எண்ணிவிட்டார் என்தமிழா!
காய்ச்சலுறு நாட்டில் கனித்தமிழே யல்லாது
மூச்சுறுத்தும் இந்திவந்து முட்டுவதா என்தமிழா!
இந்தி தனைப்புகுத்தி ஏற்படுத்தும் நல்லுரிமை
பந்தியிலே வேறான பார்ப்பனர்க்காம் என்தமிழா!
நல்லுரிமை தேடும் நரிகள் முகமொன்றே.
சொல்லும் அவர்எண்ணும் சூழ்ச்சிகளை என்தமிழா!
பார்ப்பனர்க்கே இந்திவரும் பச்சைத் தமிழரெலாம்
சீர்ப்படுதல் எவ்வாறு செப்பிடுவாய் என்தமிழா!
என்று எழுதி பார்ப்பனர் சூழ்ச்சியை அடையாளம் காட்டினார்.
தேசியக் கல்விக் கொள்கையை மும்மொழியை ஏற்காவிட்டால் தமிழக பள்ளிகளுக்கு நியாயமாக வழங்கவேண்டிய சமக்ர சிக்க்ஷ அபியான் திட்ட நிதி ரூ.2152 கோடியை விடுவிக்க முடியாது என்று தன்மேந்திர பிரதான் சொன்னார். அப்போதே ” தன்மேந்திர பிரதான் திமிரை தமிழ்நாடு அடக்கும் ” என்று ஆசிரியர் வீரமணி சொன்னார்.அந்த வார்த்தைகளின் உணர்வு அய்யா பெரியார் கண்ட திராவிட இயக்கத்தின் வடவர் எதிர்ப்பின் வரலாறாகவும் பாரதிதாசன் பாடிவைத்த கவியின் தொடர்ச்சியாகவும் இருக்கிறது.
43 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கான செலவுத் தொகையான ரூ.2152 கோடியை நிறுத்தி வைத்து தேசிய கல்வி கொள்கையை ஏற்றே ஆக்கவேண்டுமென மிரட்டுகின்ற போதும்
“ஆட்டிப் படைப்பவர்க் கஞ்சுதல் வேண்டாம்;
அமைச்சர் என்பார்க்கும் அஞ்சுதல் வேண்டாம்;
காட்டிக் கொடுப்பார்க்கும் அஞ்சுதல் வேண்டாம்
கருத்திலாக் கட்சிகட் கஞ்சுதல் வேண்டாம்!”
என்று பாரதிதாசன் அன்றே பாடியதற்கு ஏற்பவே, “இந்த திட்டத்தில் கையெழுத்துப் போட்டால் தான் ரூ.2,000 கோடி கிடைக்கும். ரூ.10,000 கோடி பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம். 2,000 கோடிக்காக நாங்கள் கையெழுத்து போட்டால், 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி நமது தமிழ் சமுதாயம் போய்விடும். அந்த பாவத்தை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்யமாட்டான்” என்று ஒன்றிய பாசிச பாஜகவிற்கு எதிராக வீர கர்ஜனை செய்திருக்கிறாரே திராவிட மாடல் முதலமைச்சர். அந்தத் துணிவிற்கும் கூட பாவேந்தரின் வரிகள் துணை சேர்க்கிறது.
இந்திக்கு ஆதரவாக இன்றுமட்டுமல்ல அன்றும் பார்ப்பனர் ஆட்சிக்கு காவடித்தூக்கிய தமிழருள் துரோகிகள் உண்டு, இன்றும் அப்படிப்பட்டவர்கள் மூன்றாவது ஒரு மொழி ஏழை குழந்தைகளுக்கு இல்லையா என்று மக்களை குழப்பும் முயற்சியில் இறங்கினார்கள். உண்மையில் இந்தி திணிப்பு வரின் ஆபத்து என்ன என்பதை விளக்கும் பாரதிதாசன்
“பள்ளியிலே தேர்ச்சிபெறும் பத்தில் ஒருதமிழன்
தெள்ளெனவே இந்திவரின் தேறான்காண் என்தமிழா!”
என்று எச்சரிக்கிறார். தாய்மொழியோடு ஆங்கிலம் கல்விமொழி இன்று அரசு பள்ளி மாணவர்களிடம் கூட சரளமாக வருகிறது என்றால் அதற்கு பல ஆண்டு முயற்சிகள் இருந்தது.இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு மொழியை திணித்தால் அதனால் தமிழர்களின் கல்வியே தேறாமல் முடங்கிவிடும் என்கிறார். இன்றும் கர்நாடகத்தில் அது நிரூபணமாகியிருக்கிறது.கடந்த ஆண்டு நடந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90,000 மாணவர்கள் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டதால் திணிக்கப்பட்ட இந்தி மொழி பாடத்தில் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
இந்த ஆபத்தை உணர்ந்து உண்மையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழிநின்று இந்தி திணிப்பை எதிர்த்து சமர் செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சிதான் பாரதிதாசன் காண விரும்பிய ஆட்சி. திராவிடரே தமிழரில்லை, மேலே சொன்னவரில் கூட யாரும் தமிழரில்லை நாங்கள் வேறு என்று ஆரியர்களின் சூழ்ச்சிக்கு வலுசேர்க்கும் ஜாதி தமிழ்தேசியக்கூட்டம் இந்தி திணிப்பவர்களை எதிர்க்கும் தமிழர் எழுச்சியை திசைதிருப்பப்பார்க்கிறது.அது அய்யா பெரியார் காலத்திலிருந்து தொடரத்தான் செய்கிறது என்றாலும் திராவிடப்பெருங்கவிஞர் பாரதிதாசனை அதற்கு பயன்படுத்தும் போக்கு ஆபத்தானது.
“சாதிசம யத்தினிலே வீழ்ந்தோர் அன்றே தொந்திபெருத் தோர்அடியில் வீழ்ந்தோர் ஆவார்! தூவென்று சாதிமதம் கான்று மிழ்ந்தால் அந்தநொடி யேநமது மிடி பறக்கும் அடுத்தநொடி திராவிடரின் கொடி பறக்கும்!” என்று பாடிய கவி பாரதிதாசன் தமிழர் வீழ்ந்தது திராவிடத்தால் அல்ல ஆரியத்தால் என்பதையே ஆயுள் முழுவதும் எழுதினர். இன்னும் தெளிவாக ஆரியத்தால் வீழ்ந்த வீரத்தமிழினத்தை மீட்டவர் தந்தை பெரியாரே என்பதையும் ” ஆள நினைப்பவர் யாருக்குமே ஆட்பட்டிருந் தழிந்தநிலை. தாள முடியாத போர்களினால் சமய மதங்களின் வேர்களினால் நீளத் துயின்றனம் பாழ்அடிமை நிமிரா தழித்தது ஆரியமே. மீளப் பெரியார் பெருந்தொண்டு நாம் பிற நமை மின்னலாய்ப் பாய்ந்தது கட்டறுத்தோம் .” என்று அவர் பாட கேட்கட்டும் போலி தமிழ்த்தேசிய பொய்யின் அடிமைகாள்.
“வீரம் பிறந்த நாட்டிற் பிறந்தவர் ;
வெற்றித் தமிழர்; உலகிற் சிறந்தவர்;
ஆரியர் அல்லர்; மறைந்தி ருந்தே
அம்பு பாய்ச்சும் பூரியர் அல்லர்!”
என்று தமிழரில் ஒருபோதும் கலக்காத ஆரியர் இன வேறுபாட்டை ஆணி அடித்தாற்போல் தமிழர்கள் நாங்கள் ஆரியர்கள் அல்ல என்கிறார். ஆரியத்தை எதிர்த்தால் ஜாதி வாக்குகளை அறுவடை செய்ய முடியாது என்று என்னும் கூட்டம் அத்தனையும் படை சேர்த்துக்கொண்டு தமிழர்கள் திராவிடர்கள் இல்லை என்கிறது.
திராவிடத் தலைவர்கள் கன்னடர், மலையாளி, தெலுங்கரெனச் சொல்லி தமிழர்களுக்கு அவர்கள் எதிரானவர்கள் அவர்கள் தமிழரே இல்லையென்று பிரச்சாரம் செய்யும் தமிழ்த்தேசிய சங்கப்பரிவாரங்களின் நோக்கம் பார்ப்பனர் பாதுகாப்பின்றி வேறில்லை. ஆனால் அதற்கு பாரதிதாசனை பயன்படுத்துவோர் அவரின் வரிகளில் வெட்டியும் ஒட்டியும் திராவிடத்துக்கெதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வீராவேசமாகப் பேசுவது படிக்காத கூட்டத்திடம் கைத்தட்டல் வாங்குவதற்கு மட்டுமே பயன்படும்.
“எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே! – இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!” பாரதிதாசனின் இந்த வரிகள் இங்குள்ள தமிழர்களுக்கு திராவிடர்கள் எதிரானவர்கள் என்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்குவார்கள் உண்மையில் அந்த கவிதையின் முடிவு ” ஆண்ட தமிழில் ஆரியம் சேர்த்தார்! ஆயினும் தமிழர் நெறிகண்டு வேர்த்தார். மூண்டுணர் வால்எழுந் ததுதமிழரசு! முற்றும் வெற்றி என்று கொட்டடா முரசு!” என்பதுதான். தமிழ் இனத்தின் எதிரிகள் ஆரியர்கள்தான் என்று அவர் சொன்னதை சொல்லாமல் தவிர்க்கவே முதல் வரியை மட்டுமே மூச்சுவிடாமல் பேசுவார்கள்.
“ஆரியரும் தமிழரைப்போல் ஆதிமுதல் இங்கிருந்து
காரியங்கள் பார்த்தாராம் பொன்னப்பா?- அவர்
ஊர்திருட வந்தவரே சின்னப்பா.”
பொன்னப்பன் சின்னப்பன் கேள்வி பதிலில் பார்பனரையும் தமிழ் நிலத்தின் பூர்வகுடிகள் என்று சொல்வோருக்கு “அவர்கள் ஊர் திருட வந்தவர்கள்” என்று பதிலுரைக்கிறார் பாரதிதாசன்.
‘பார்ப்பனர் தமிழர் பகைவன்’ என்றேன் உண்மை என்றே அன்னை ஒப்பினாள். ”பார்ப்பானுக்குத் தமிழ் மகள் பயந்த தீயனால் நாட்டுக்கு நன்மையுண்டா?’ என்றேன் அன்னை இயம்புகின்றாள். பார்ப்புக்குப் பிறந்தோன் பகைவன்; அன்னோ தீர்ப்புக் கடங்கி திரிபவரும் தீயரே வள்ளுவன் திருக்குறள் ஆணை! அவர்களால் எள்ளுமூக்கத்தனை நன்மையும் இந்நாட்டுக்கு இல்லை இல்லை என்றாள் அன்னை’ இன்னும் தெளிவாய் தமிழரின் எதிரி யாரென்று காட்டிட உயிராய் கருதிய தமிழன்னைக்கே விண்ணப்பம் செய்கிறார். பார்ப்பனர்கள்தான் பகைவர்கள் என்றும் அவருக்கு அடிமைகளாய் ஊழியம் செய்பவர்களால் ஒரு நன்மையும் தமிழர்க்கு இல்லையென்றும் அது வள்ளுவன்மேல் ஆணையென்றும் அடித்தே கூறிவிட்டார். இதுதான் பாரதிதாசன் என்றால் திராவிடரற்று வேறு யாரும் அவரை கொண்டாடவே முடியாது. அதனால்தான் பொதுவுடமைக்காரர்களும்கூட பார்ப்பன பாரதியோடு நின்றுகொண்டார் – பார்ப்பன எதிர்ப்பில் தந்தை பெரியருக்குப்பின் ஒரு பேரெதிர்ப்பாளர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்பதால் அவரை ஏற்கவும் அங்கீகரிக்கவும் மறுத்தார்கள். என்றபோதும்,
தமிழர் செய்த தவம்பலித் திட்டது
பெரியார் திருவுளம் எமைக்காக்க வந்தது
சமையம் சாதி ஆரியம் இந்தி
தலைதூக்கி எங்கள் காலைக் கவ்வினும்,
தமிழ்நாட்டை விடுதலை செய்வோம். – கெட்ட
சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்!
என்கிறார் பாரதிதாசன்.
இன்றும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங்கபரிவாரங்களும் ஆரிய ராமனுக்கு நண்பனான சங்கிகளும் சூழ்ந்து நின்று திராவிடர்மேல் பண்பாட்டுப்போரை தொடுத்தபோதும் ஒன்றியத்தில் ஆளும் பார்ப்பனர் தலைமைத்துவ ஆட்சியை வீழ்த்தும் பெரியார் கொள்கை எம்மிடம் உண்டு என்ற போர்முரசு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவி கொண்டு முழங்குவோம் .பார்ப்பனியம் வீழும் வரை பாரதிதாசன் வாழ்வார். (முற்றும்)