டில்லியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தேவ்மணி சர்மா என்பவரது வீட்டில் குளிர்சாதனக் கருவி பழுதாகியுள்ளது. இதனைச் சரிசெய்ய அவர் ஒரு பழுதுபார்க்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளார். அந்த நிறுவனமும் முகமது மற்றும் அனீஸ் என்ற பெயருடைய இரண்டு ஊழியர்களை தேவ்மணி சர்மாவின் வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
வீட்டிற்கு வந்த பணியாளர்களின் பெயர்களைக் கேட்ட தேவ்மணி சர்மா, அவர்கள் முகமது மற்றும் அனீஸ் என்று தெரிவித்தவுடன் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. இசுலாமியர்களான அவர்களைப் பார்த்து தேவ்மணி சர்மா, “நான் ஒரு இந்து என்று தெரிந்தும் எப்படி இசுலாமியர்களை ஏசி பழுதுபார்க்க அனுப்பலாம்?” என்று கோபமாகக் கேட்டுள்ளார். மேலும், இசுலாமியர்கள் குறித்து அவதூறாகப் பேசியதோடு, உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு அவர்களை வற்புறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்குச் சென்று புகார் அளிக்கப்போவதாகவும் தேவ்மணி சர்மா அந்த ஊழியர்களிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டிய பாஜக பிரமுகரின் செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும், இது குறித்து தேவ்மணி சர்மா தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.