சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதி, அடர்ந்த வனப்பகுதிகளையும், வளமான கனிம வளங்களையும் கொண்டிருப்பதுடன், நீண்ட காலமாக அரசு படைகள், பொதுமக்கள் மோதல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பல்வேறு கொடுமைகளின் களமாகவும் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள், இந்த மோதல்களுக்கு இடையே சிக்கி, மனித உரிமை மீறல்கள், இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு மற்றும் கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.
நக்சல் மோதல்களின் தாக்கம்
பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையேயான மோதல்கள் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. இந்த மோதல்களின் போது, பழங்குடி மக்கள் சந்தேகத்தின் பேரில் குறிவைக்கப்படுவதாகவும், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் போலி என்கவுன்ட்டர்கள் நடைபெறுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. நக்சல் தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் கொல்லப்படுவதாகவும், இது கார்ப்பரேட் நலன்களுக்காக பழங்குடி நிலங்களை அபகரிக்கும் ஓர் உத்தி எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அப்பாவி பழங்குடி மக்கள் குறிவைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, பழங்குடியினர் உரிமை செயற்பாட்டாளர் சோனி சோரி உள்ளிட்டோர் இது குறித்து ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் பழங்குடி மக்களின் உயிரிழப்புகளுக்கு வழிவகுப்பதாகவும், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரும் மாவோயிஸ்டுகள் எனத் தவறாக அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்படுவதாகவும் சோனி சோரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு ஆதரவுடன் செயல்பட்டு பின்னர் தடை செய்யப்பட்ட சல்வா ஜூடும் அமைப்பு பஸ்தரில் பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. கொலைகள், கிராமங்கள் எரிப்பு, பாலியல் வன்முறை, பட்டினி மற்றும் பெருமளவிலான இடப்பெயர்வு என அது ஈடு செய்ய முடியாத துயரங்களை ஏற்படுத்தியது. சல்வா ஜூடுமுக்குப் பிறகு ஆபரேசன் கிரீன் ஹண்ட் என்ற பெயரில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் என பஸ்தர் கிராம மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.
400-க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்ட கொடுமை
கொல்லப்பட்ட கொடுமை
2024ஆம் ஆண்டு முதல் ஆபரேசன் காகர் என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் புதிய நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர். இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் (2024இல் 287, 2025இல் 113). கொல்லப்பட்டவர்களில் பலர் மாவோயிஸ்டுகள் எனக் கூறப்பட்டாலும், உள்ளூர் மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அவர்களை பொதுமக்கள் எனக் கண்டறிந்துள்ளனர். இது பொதுமக்கள் குறிவைக்கப்படுவதை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், பாதுகாப்புப் படையினர் (168), மாவோயிஸ்டுகள் (327) ஆகியோரை விட பொதுமக்கள் (335) அதிகமாகக் கொல்லப்பட்டதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் கொல்லப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களில், 15 பொதுமக்கள், 14 பாதுகாப்புப் படையினர் மற்றும் 150 மாவோயிஸ்டுகள் உயிரிழந்துள்ளனர்.
இவையெல்லாவற்றையும்விட அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், இந்தக் கொலைகளுக்காக பாதுகாப்புப் படையினருக்கு ரூ. 8.24 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதுதான். இது ‘என்கவுன்ட்டர்’களை ஊக்குவிக்கும் விதமாகாதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இடப்பெயர்வு மற்றும் வாழ்வாதார இழப்பு
மோதல்கள் காரணமாக பலர் தங்கள் சொந்த இடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற நேரிடுகிறது. கிராமங்கள் காலி செய்யப்படுவதும், மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி இடம் பெயர்வதும் தொடர்கிறது. இது அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களான விவசாயம் மற்றும் வனப் பொருட்களை சேகரிப்பதை பாதிக்கிறது. அவர்களின் நிலங்கள் மற்றும் வனங்களின் மீதான உரிமைகளும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
நில அபகரிப்பு மற்றும் சுரண்டல்:
பஸ்தர் பகுதியின் வளமான கனிம வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சுரங்கத் திட்டங்கள் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்காக பழங்குடி மக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. போலி ஆவணங்கள் மூலம் ஒப்புதல் பெறுவது மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வ உரிமைகளை மீறுவது போன்ற செயற்பாடுகள் நடைபெறுவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைப்பது கூட கனிம வளங்களைச் சுரண்டுவதை எளிதாக்குவதற்கான ஒரு கருவியாகவே பார்க்கப்படுகின்றன.
கடந்த 25 ஆண்டுகளில் 16,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 10,884 பேர் சரணடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. 2026 மார்ச்சுக்குள் மாவோயிஸ்டுகள் முழுமையாக ஒழிக்கப் படுவார்கள் என்றும், தற்போது ஆயுதம் ஏந்திய குழுவினர் சுமார் 400 பேரே எஞ்சியுள்ளனர் என்றும் அரசு கூறுகிறது.
ஆனால், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் பெரும்பாலும் நாட்டுத் துப்பாக்கிகள், பழைய 12-போர் துப்பாக்கிகள் என மொத்தம் 263 மட்டுமே. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது ஆறாகக் குறைந்துள்ளது. இது மாவோயிஸ்டுகள் முன்பு போல பெரிய அச்சுறுத்தலாக இல்லை என்பதை உணர்த்துகிறது. அப்படியிருக்க, ராணுவமயமாக்கல் இந்த அளவுக்கு அதிகரிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மீறல்,
வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு
வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு
சிறப்பு காவல் அதிகாரிகள் அமைப்பைக் கலைக்கவும், சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை ஆயுதம் தாங்கிய எதிர்போராட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை நிறுத்தவும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அரசு மாவட்ட ரிசர்வ் காவலர்கள் மற்றும் பஸ்தர் ஃபைட்டர்கள் போன்ற படைகளின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலும் மேனாள் சல்வா ஜூடும் அமைப்பினர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இவர்களே மனித உரிமை மீறல்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதேநேரம், இவர்களுடைய உரிமைகளும் மீறப்படுவதாகக் கூறப்படுகிறது.
சல்வா ஜூடும் காலம் முதல், இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மிகக் குறைவான அல்லது எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், வழக்கு விசாரணை மற்றும் தண்டனை என்பது உறுதிசெய்யப்படாத நிலையிலேயே உள்ளது.
பஸ்தர் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை பொது அல்லது தனியார் நிலங்களில், கிராமங்களுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன. இது பழங்குடி மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. தற்போது, ஒவ்வொரு 9 பொதுமக்களுக்கும் ஒரு பாதுகாப்புப் படை வீரர் என்ற விகிதத்தில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதிகள், பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளின் வளர்ச்சி, சாலைகள் அமைத்தல் போன்றவை ராணுவமயமாக்கலின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிக பின்தங்கியுள்ளன. அதேநேரம், அரசு பல சுரங்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது பழங்குடி மக்களிடையே இடப்பெயர்வு மற்றும் சுற்றுச்சூழல் அழிவு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்தி, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
சத்தீஸ்கர் பஸ்தர் பகுதியில் சுரங்கத் திட்டங்களுக்கு எதிரான பழங்குடி மக்களின் அரசமைப்புச் சட்ட ரீதியான போராட்டங்களும், அவர்களின் உரிமைகளும் கொடூரமாக ஒடுக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும்பாலும் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற போர்வையிலேயே நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
PESA சட்டம் (Panchayats Extension to Scheduled Areas) Act) மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தங்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்காக அமைதியாகப் போராடும் கிராம மக்கள் கடும் அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர். அவர்களின் போராட்டக் களங்கள் இடிக்கப்படுகின்றன, கிராம மக்கள் தாக்கப்படுகின்றனர். மோட்டார் ஷெல்கள் (mortar shells) மற்றும் குண்டுகள் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது பரவலான அச்சத்தையும், இயல்பு வாழ்க்கைக்கு இடையூறையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்புகள் தடை, UAPA-வில் கைது
அரசின் நடவடிக்கைகள் பற்றி அமைதியான முறையில் கருத்துத் தெரிவிப்பதற்கும், போராடுவதற்கும் உள்ள அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மூலவாசி பச்சாவ் மஞ்ச் (Moolvasi Bachao Manch) போன்ற பழங்குடி மக்களின் உரிமை அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இளம் பழங்குடித் தலைவர்கள், பாதுகாப்பு முகாம்கள் அமைத்தல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராடியதற்காகவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணை ராணுவத்தின் கொடூரச் செயல்கள்
பழங்குடியினர் உரிமை செயற்பாட்டாளர் சோனி சோரி, துணை ராணுவப் படைகள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபோன்ற கொடூரமான செயல்களைக் கொண்டாடியதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே பாதிக்கப்படக்கூடிய மக்களை மேலும் வேதனைப்படுத்துவதாகவும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தேவைப்படும் சமூகங்களையே அந்நியப்படுத்துவதால் இது முற்றிலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பழங்குடி மக்கள், பாதுகாப்புப் படையினர் மோதல்கள், அரசு அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற பல்வேறு கொடூரங்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது, மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் பழங்குடி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது அவசியம்.
கோரிக்கைகள்
இந்தக் கடுமையான சூழலில், பழங்குடி மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
நடவடிக்கைகளை நிறுத்துதல்
முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் வரை, பழங்குடிப் பகுதிகளில் நடைபெறும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
சுதந்திரமான விசாரணை
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஒரு நேர்மையான – பாரபட்சமற்ற குழுவை அமைக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை
பழங்குடித் தலைவர்கள், உரிமை ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்களுடன் அவர்களின் குறைகளை நேரடியாக அறியவும், அவர்களை ஆட்சி மற்றும் வளர்ச்சித் திட்டமிடலில் ஈடுபடுத்தவும் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.
மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்
ராணுவ மயமாக்கலில் இருந்து விலகி, சமூக-பொருளாதார மேம்பாட்டை நோக்கி ஒரு திட்டவட்டமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது பழங்குடி மக்களின் உரிமைகளும், வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
நீதி, அரசமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் நல்வாழ்வை உறுதி செய்ய இந்தப் பிரச்சினைகளில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.
பஸ்தர் பகுதியில் நடக்கும் பழங்குடியின மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை நிறுத்தி, அம்மக்களின் உரிமைகளைக் பாதுகாக்க அவர்களுக்கு நீதி, அரசமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதிய கடித்ததில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.