‘மசூதிகள் வேண்டாம். எங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கு முதலீடு செய்யுங்கள். பள்ளியைக் கட்டித் தாருங்கள். எங்களை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்.” – இப்ராஹிம் ட்ராவ்ரே (அதிபர், புர்கினோ பாசோ)
இளமையில் முடியும் மக்களின் ஆயுள்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினோ பாசோ. பொதுவாக மத்திய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை மேற்கத்திய நாடுகள் தங்களின் குப்பைகளைக் கொட்டும் நாடுகளாகத்தான் பார்க்கின்றன. சாஹாட், காஸ்டோ டிவேரா, கானா, டாகோ மற்றும் பெனின் போன்ற நாடுகளில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இயங்கும் துறைமுகங்களில் டன்கணக்கில் இயந்திரக் கழிவுகள், மின்னணுக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பலவும் கண்டெய்னர்களில் இருந்து இறங்கிக்கொண்டே இருக்கும். இந்த கழிவுகளில் இருந்து பயனுள்ள பொருட்களை பிரித்தெடுப்பதுதான் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், இதனால் அந்த மக்களின் வாழ்நாள் 30 வயதிற்குள்ளேயே முடிந்துவிடுகிறது.
சாலைகளில் ரத்த வெள்ளம்
இந்த நிலையில் புர்கினோ பாசோ நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்படவே அரசு கவிழ்ந்து பல துணைக் குழுக்கள் உருவாகி அரசைக் கைப்பற்ற கலவரத்தில் இறங்கின. இதனால் தலைநகர் பேபோ டவுலுசோ சாலைகளில் ரத்த வெள்ளம் ஓடியது. அதே போல் பிரான்சும் ஜெர்மனியும் தங்களின் கட்டுப்பாட்டில் இந்த நாட்டைக் கொண்டுவர தயாராகிக்கொண்டு இருக்கும் போது அந்த நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த இப்ராஹிம் ட்ராவ்ரே ராணுவத்தினரை ஒன்றுதிரட்டி நாட்டின் அதிபராக தன்னை அறிவித்துக்கொண்டு நாட்டின் அனைத்து மட்டத்தின் கட்டுப்பாட்டினையும் தனது தலைமையின் கீழ் கொண்டுவந்தார்.
முதலில் இவர் ராணுவ மயமாக்கலில் இறங்குவார் என்று எண்ணி இவருக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் துவங்கியது. ஆனால், அவரது நடவடிக்கை முற்றிலும் மாறாக அமைந்தது.
செப்டம்பர் 2022இல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து நாட்டில் பல்வேறு முக்கிய மாற்றங்களையும் கொள்கைகளையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் நாடு கடனில்லாத நாடு என்ற பெருமையை விரைவிலேயே பெற்றுவிட்டது.
முன்னுரிமை எதற்கு?
ட்ராவ்ரேவின் ஆட்சியின் முக்கிய நோக்கம் நாட்டில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதும், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதும் ஆகும். நாட்டின் சுமார் 40 விழுக்காடு நிலப்பரப்பு பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், ட்ராவ்ரே, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
பயங்கரவாதக் குழுக்கள் நாடு பெயர்வு
ராணுவத்திற்கும், பொதுமக்களுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக கிராம மட்டத்தில் குழுக்களை உருவாக்கினார். இதற்குத் தன்னார்வப் பாதுகாப்புப் படை என்று பெயர் சூட்டினார். இந்த நடவடிக்கையால் குறுகிய காலத்திலேயே ராணுவத்தின் மீதான அவநம்பிக்கை நீங்கியது. மக்களின் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு கிடைக்காமல் போகவே பல பயங்கரவாதக்குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தன்னார்வப் பாதுகாப்பு படையோடு இணைத்துக் கொண்டன. சில பயங்கரவாத குழுக்கள் வடக்கே மாலி நாட்டிற்குள் சென்றுவிட்டன.
மேற்கத்திய நாடுகளுடனான உறவில் மாற்றம்:
மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு மற்றும் உதவிகளைச் சார்ந்திருப்பதை விரும்பாத ட்ராவ்ரே காலனித்துவ நாடான பிரான்சுடனான உள்நாட்டு விவகாரங்களில் தலையிடல் தொடர்பான ஒப்பந்தங்களை முடிவிற்கு கொண்டு வந்து எந்த முடிவும் நாங்களே எடுத்து கொள்வோம் என்று பிரான்சிடம் கூறிவிட்டார்.
பிரெஞ்சுப் படைகள் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டதுடன், பிரெஞ்சு மொழிக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டு புர்கினோ பாசோவின் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காலனித்துவ காலப் பெயர்களைக் கொண்ட தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
பன்னாட்டு நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற மேற்கத்திய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதை முற்றிலும் நிராகரித்துவிட்டார். மேலும் இதுவரை புர்கினோ பாசோவிற்கு உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் கொடுத்த கடன் தொகைகளை முழுவதும் திருப்பிச் செலுத்தி கடனில்லாத முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெயரைப் பெற்றார்.
வளங்களை தேசியமயமாக்கல்
நாட்டின் கனிம வளங்கள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கைகளில் இருந்து பிடுங்கி அதை அரசுடமையாக்கினார். இதன் ஒரு பகுதியாக, முக்கியமான இரண்டு தங்கச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டுள்ளன.சுத்திகரிக்கப்படாத தங்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டிலேயே தங்கத்தைச் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். ஆண்டுக்கு 150 டன்கள் தங்கத்தைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட தேசிய தங்கச் சுத்திகரிப்பு ஆலையை அவர் திறந்து வைத்துள்ளார்.
பிராந்திய கூட்டமைப்புகளில் மாற்றம்:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தில் (ECOWAS) இருந்து புர்கினோ பாசோ விலகிய பின்பு ட்ராவ்ரே, மாலி மற்றும் நைஜர் நாடுகளுடன் இணைந்து சஹேல் நாடுகளின் கூட்டமைப்பை (Alliance of Sahel States) நிறுவியுள்ளார்1.
பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள்:
- அரசு அதிகாரிகளின் ஊதிய உயர்வை ரத்து செய்து, தான் ஓர் இராணுவத் தலைவராக தனது முந்தைய வருமானத்திலேயே நீடிப்பதாக ட்ராவ்ரே அறிவித்துள்ளார். இது ஊழலைக் குறைக்கும் மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
- விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து, பருத்தி பதப்படுத்தும் தேசிய மய்யத்தை நிறுவியுள்ளார்.
- சுகாதாரத் துறையிலும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். நடமாடும் மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்களுக்கான வாகனங்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள் மற்றும் டெலிமெடிசின் சேவைகளுக்காகத் டேப்லெட்டுகளை வழங்கியுள்ளார்.
- 4,000 இலவச கண்புரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் திட்டத்தையும் தொடங்கியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து பிற நாடுகளுடனும் கூட்டாண்மைகளை ஏற்படுத்த ட்ராவ்ரே முயற்சித்து வருகிறார். BRICS கூட்டமைப்பில் இணைய அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இது புர்கினா பாசோவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு புதிய திசையைக் காட்டுகிறது.
ட்ராவ்ரேவின் இந்த மாற்றங்கள் நாட்டில் ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளன. சிலர் இதை நாட்டின் இறையாண்மை மற்றும் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளாகப் பார்க்கின்றனர்.
தங்கத் துறையில் புதிய அத்தியாயம்
புர்கினோ பாசோ தனது முதல் தங்க சுத்திகரிப்பு நிலையத்தை 2024ஆம் ஆண்டில் திறந்து வைத்து, நாட்டின் தங்கத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. அதிபர் இப்ராஹிம் ட்ராவ்ரேவின் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே 142 டன்கள் அளவிலான சுத்திகரிக்கப்படாத தங்கத்தைப் பதப்படுத்தி, 93 கிலோகிராம் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த நிலையம், தினமும் 400 கிலோகிராம் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்தத் திட்டம் நேரடியான வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி, மறைமுகமாக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புகளை பெற்றனர். இது புர்கினோ பாசோவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் ஒன்றாக பார்க்கப்பட்டது.
பாரம்பரியமாக, புர்கினோ பாசோ தனது தங்கத்தை வெளிநாடுகளுக்குச் சுத்திகரிக்கப்படாமல் ஏற்றுமதி செய்து வந்தது. இதனால், தங்கத்தின் முழுமையான பொருளாதாரப் பலனை நாடு பெற முடியவில்லை. புதிய சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், தங்கத்தை உள்நாட்டிலேயே சுத்திகரித்து, அதிக மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய எடுத்த முடிவானது இந்த நாட்டின் வருவாயை ஓராண்டிற்குள்ளேயே அதிகரிக்கச் செய்துவிட்டது.
தக்காளிக் கூழ்
உலகத்திலேயே உயர்ரக தக்காளியை விளைவிக்கும் மிகவும் சொற்ப நாடுகளில் புர்கினோ பாசோவும் ஒன்று. பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது தக்காளிக்கூழ் அடிமை வர்த்தகம் போல் நடந்தது.
இந்த நிலையில் புதிய அதிபரின் முயற்சியால் தக்காளிக் கூழ் உற்பத்தியில் கவனம் செலுத்தி தாங்களே உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ததன் மூலம் தக்காளி கூழ் உற்பத்தி செய்யும் முதல் நாடாக புர்கினா பாசோ உருவெடுத்துள்ளது. போபோ-டியூலாசோவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பதப்படுத்தும் ஆலை மூலம் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது.
பொருளாதாரம் வலுப் பெறும்
“A’diaa” என்ற வணிகப் பெயரில் தக்காளி கூழ் மற்றும் சாஸ்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலை, புர்கினா பாசோவின் விவசாயம் சார்ந்த தொழில்துறையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. உள்நாட்டிலேயே தக்காளி விளைச்சலைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம், விவசாயிகள் பயனடைவதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்குப் பொருளாதார ரீதியாகவும் இது வலு சேர்க்கும்.
புதிய பதப்படுத்தும் ஆலையின் மூலம் உயர்தர தக்காளிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதி வாயிலாகவும் நாட்டிற்கு வருவாய் ஈட்ட வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது புர்கினோ பாசோவின் விவசாயம் மற்றும் தொழில் துறைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. உணவு தானிய உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெற்ற நாடாக மாறிய புர்கினோ பாசோ இதர ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புர்கினோ பாசோ மக்கள் பிரான்ஸ் மொழியை தவிர்த்தது மற்றும் மொழிப் பிரச்சினையில் பிரான்ஸ் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது தொடர்பாக புதிய அதிபர் இப்ராஹிம் ட்ராவரேவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.