கணவரின் பெற்றோர் மீது காவல்துறையில் வரதட்சணை புகார் அளித்த மருமகளின் வழக்கு நீதிமன்றம் வந்த போது விசாரணைக்காக நடக்க முடியாத முதிய இணையர் ஆட்டோவில் வந்தனர். அவர்களால் நீதிமன்றத்திற்குள் வர இயலாத நிலையில் நீதிபதியே நேரடியாக ஆட்டோவையே நீதிமன்றமாக மாற்றி விசாரணை செய்து வழக்கை தள்ளுபடி செய்த நிகழ்வு மனிதநேயத்திற்கு பாடமாக அமைந்துள்ளது
தெலங்கானா மாநிலம் ருதுரூர் பகுதியில் உள்ள ராய்கூர் கிராமத்தில், வயோதிக இணையர் மீது வரதட்சணை புகார் அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி உணர்வுபூர்வமான முடிவெடுத்ததாக நினைக்கப்படுகிறது.
சாயம்மா, கனகராமா ஆகிய வயதான இணையர், தங்களுடைய மகன்களுக்கு சொத்துக்களை பிரித்து வழங்கியிருந்தனர். ஆனால், ஒரு மருமகள் எதிர்பார்த்த இடத்தை வழங்காது, வேறு ஒரு இடத்தில் சொத்து வழங்கியது, குடும்பத்தில் பிரச்சினையை உருவாக்கியது. இதனால், கோபமடைந்த மருமகள், தனது கணவரின் பெற்றோருக்கு எதிராக வரதட்சணை புகார் அளித்தார்.
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உடல்நலக் குறைவால், வயோதிக இணையர் நீதிமன்ற அறைக்குள் செல்ல முடியாமல், ஆட்டோ ரிக்சாவில் காத்திருந்தனர்.
நீதிபதி ஈ சாய் ஷிவா, அவர்களது சூழ்நிலையை உணர்ந்து, நேரடியாக ஆட்டோவிற்கு சென்றார். பின்னர், வழக்கு விசாரணையின் தேவைகளை கருத்தில் கொண்டு, அந்த இடத்தையே தற்காலிக நீதிமன்றமாக மாற்றினார்.
இங்கு இரு தரப்பினரின் வாதங்களை கேட்ட பிறகு, நீதிபதி, இது சொத்துப் பிரிவினையால் ஏற்பட்ட குடும்ப விவாதமாகும், அது தவறாக வரதட்சணை புகாராக மாற்றப்பட்டது என உறுதி செய்தார். இதனையடுத்து, வயோதிக இணையருக்கு எதிராக இருந்த வழக்கை அங்கேயே தள்ளுபடி செய்தார்.
நீதிபதி எடுத்த இந்த மனிதநேயமான முடிவு, நீதித்துறையின் கருணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.