அசோக் கெம்கா ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். 1991-ஆம் ஆண்டு பயிற்சி நிறைவு செய்தவர். இவர் அரியானா மாநிலத்தில் பணியாற்றியவர் நேர்மையான பணி பரவலாக அறியப்பட்டவர்.
2025 மார்ச் வரை, அவரது 34 ஆண்டு பணிக் காலத்தில் 66 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அரியானாவில் அதிக முறை பணியிட மாற்றம் செய்யப் பட்ட இரண்டாவது அதிகாரி என்ற பெருமையை அவருக்கு அளிக்கிறது. தேர்தல் முறைகேடுகளை கண்டுபிடித்ததால் பணி இடமாற்றம், அரசியல்வாதிகளின் நில மோசடி தொடர்பான மனுவை விசாரிக்க ஆணையிட்டதால் இடமாற்றம், சாமியார் ராம் ரகீமின் பிணை மனு தொடர்பான கோப்புகளை அரசுக்கு திருப்பி அனுப்பியதால் இட மாற்றம், சாலை ஆக்ரமிப்பு தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுத்ததால் இட மாற்றம், இப்படி தொடர்ந்து 66 முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
எத்தனை முறை இடமாற்றம் செய்யப் பட்டாலும் இவர் நேர்மை தவறியதே இல்லை. அரியானா மாநில ஜவுளித்துறை தலைவராக இருந்தபோது தனியார் துறையினருக்கு அரசு மிகவும் குறைந்த விலையில் ஒப்பந்தங்களை கொடுத்து அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினார். உடனே இடமாற்றம் பரிசாக கிடைத்தது. இவர் கடிதப் பரிமாற்றத்தில் (லெட்டர்ஹெட்) தனது பெயரை அச்சடிக்க மறுத்துவிடுவார். காரணம் எப்படியும் சில மாதங்களில் பதவியிலிருந்து வேறு பதவிக்கு அனுப்பிவிடுவார்கள். இதனால் தனது பெயர் மற்றும் கையெழுத்தை எப்போதுமே லட்டர் ஹெட்டில் எழுதியே பயன்படுத்துவார்.
இதனால் பல ஆயிரங்கள் மிச்சப்படும் என்று நகைச்சுவையாக கூறுவார். எத்தனை அலைக்கழிப்புகள் இருந்தாலும் கவலைப்படாமல் பணியாற்றினார். சில நேரம் கொலை மிரட்டல்கூட வந்துள்ளதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இருப்பினும் பணியில் நேர்மையாக இருந்து விடைபெற்றார். இவர் பணி ஓய்வின் போது கூட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவில்லை. காரணம் எங்கே இவர் பணி ஓய்வில் கலந்துகொண்டால், அரசு நம் மீது சந்தேகப்பார்வை பார்க்குமோ என்ற அச்சம் தான் காரணம்.
கொல்கத்தாவில் 1965 ஏப்ரல் 30இல் பிறந்தார். இவர் அய்அய்டி காரக்பூரில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலைப் பட்டம் (1988) பெற்றவர். மேலும் டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
2025 ஏப்ரல் 30 அன்று அவர் பணி ஓய்வு பெற்றார், மேலும் அவரது நேர்மை மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டத்திற்காக பலரால் பாராட்டப்பட்டார்.