ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முடிவு பெரியார் மண்ணின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியினரின் முயற்சியே காரணம் என்றும், சமூகநீதியின் முக்கியத்துவத்தை எதிர்வரும் மாநிலத் தேர்தல்களைக் கணக்கில் கொண்டேனும் ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதை வரவேற்பதாகவும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:-
நேற்று, (30.04.2025) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை (சென்சஸ்), ஜாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்துவது என்று தனது கொள்கை முடிவாக எடுத்து, அதனைத் தீர்மானமாக நிறைவேற்றியிருப்பதாக, ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார்.
காலந்தாழ்ந்த அறிவிப்பென்றாலும் வரவேற்கிறோம்!
கடந்த பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணிக் கட்சிகளால் வற்புறுத்தி வரப்பட்ட இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அவசியம் இடம்பெறுவதன் மூலம் மக்களுக்குச் சமூகநீதி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனைத் திராவிடர் கழகமும், தி.மு.க. போன்ற திராவிட இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், அதனை ஏற்காமல், “இது ஜாதியை வலியுறுத்தவே உதவும். ஆகவே இக்கோரிக்கையை ஏற்க முடியாது” என்று
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மறுத்தே வந்த நிலையில், திடீரென்று மோடி தலைமையிலான அமைச்சரவை, இதற்கு முன் கூறிவந்த தங்களது நிலைப்பாட்டிற்கு மாறாக
‘யு–டர்ன்’ போட்டு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை இந்த வரும் கணக்கெடுப்பிலேயே நடத்துவோம் என்று கூற முன்வந்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; “Better late than never” – ‘‘செய்யாமல் இருப்பதைவிட, கொஞ்சம் காலம் தாழ்த்தியாவது செய்தல் வரவேற்கத்தக்கதுதான்’’ என்பதற்கேற்ப இந்த அறிவிப்பு வந்துள்ளது.
முதலமைச்சர் உள்ளிட்ட
இந்தியா கூட்டணியினரின் வெற்றி!
இந்தியா கூட்டணியினரின் வெற்றி!
ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்களுக்கு வெற்றி என்று உரிமை கொண்டாடும் நிலை – இயல்புதான்; என்றாலும் உள்ளபடி இந்த வெற்றிக்கு உரியவர்கள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும், குறிப்பாக ராகுல்காந்தி அவர்களும் அதன் வழிகாட்டும் தலைவர் திருமிகு. சோனியா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணியினரும்தான். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்பதைக் கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் தொடர்ந்து முழங்கி வந்ததோடு நாடாளு மன்றத்திலும் வற்புறுத்தி வந்தனர்.
இப்போது அந்த கோரிக்கை, பி.ஜே.பி. அரசால் ஏற்கப்பட்டிருக்கிறது. இந்த கோரிக்கையை வைத்த பல அரசியல் கட்சிகளும் இதனை வெற்றியாகப் பார்ப்பதை நாம் விவாதப் பொருளாக ஆக்க விரும்பவில்லை.
இந்த அறிவிப்பினைச் செயல்வடிவமாக்கிட இதனைத் தொடங்குவதையும், கால அறிவிப்பினையும் அதற்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டையும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையின்படி உடனடியாக அறிவித்தல் அவசரம்; அவசியமாகும்
அரசியல் காரணங்களுக்கான
பா.ஜ.க. போட்ட ‘யு-டர்ன்’!
பா.ஜ.க. போட்ட ‘யு-டர்ன்’!
பா.ஜ.க. தனது முந்தைய நிலைப்பாட்டில் நேர் எதிரிடையாக இப்படி ஓர் அறிவிப்பை, முடிவை அமைச்சரவை மூலம் எடுப்பது, ‘அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் உ.பி.க்கு அடுத்த பெரிய மாநிலமான பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை மனதிற் கொண்டே’ என்று அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்துக் கூறுவதை நாம் கோடிட்டு காட்டத்தான் வேண்டும்.
இப்படி ஒரு சமூகநீதிப் பாதுகாப்புக்கான திட்டத்தின் அறிவிப்பு, சரிந்த தன் செல்வாக்கையும், வாக்கு வங்கியையும் கட்டமைக்க இப்போது தேவைப்படு கிறது என்பதைப் பிரதமர் மோடியும், பி.ஜே.பி.யும் மாநிலங்களில் களநிலவரம் கண்டபிறகு, இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருகிறார்கள் என்பது கண்கூடான யதார்த்தம் ஆகும்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது Urban Naxal–களின் எண்ணம் என்று குறிப்பிட்ட வர்தான் பிரதமர் மோடி.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு நடத்தவேண்டியதே கடமை!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246 இன் கீழ், ஏழாவது அட்டவணைப்படி ஒன்றிய அரசின் தனி அதிகாரங்களில் 69ஆம் அம்சமாக, 10 ஆண்டு களுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்வது குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசுக்கான அதிகாரம் ஆகும்.
2021 ஆம் ஆண்டே நடைபெற்றிருக்க வேண்டிய இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு – சென்சஸ் (Census) ‘கோவிட்’ தொற்று நோயைக் காரணம் காட்டி பா.ஜ.க. ஒன்றிய அரசால் தள்ளிப்போடப்பட்டே வந்தது.
காலதாமதம் கூடாது
அதனால்தான் மோடி அரசின் இந்த திடீர் முடிவை வரவேற்கிற கட்சிகள் கூட, அதன் பணி தொடங்கவிருக்கும் காலம், அதற்கான நிதி ஒதுக்கீடு முதலியன அறிவிக்கப்பட மேலும் காலம் தாமதிக்காமல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வர்களை அடையாளப்படுத்தும் தகுதிக் கூறுகளாக, தெளிவாக Socially and Educationally Backward class என்று முதலாவது சட்டத்திருத்தம் மூலம் டாக்டர் அம்பேத்கர் (சட்ட அமைச்சராக இருந்து) கொண்டு வந்த திருத்தத்தை, திட்டமிட்டே உயர்ஜாதி பார்ப்பன ஏடுகள் ஆங்கிலச் சுருக்கமாக (Acronym) SEBC என்று குறிப்பிட்டு, பின்னர் educationally என்ற வார்த்தையைத் திட்டமிட்டே தவிர்த்துவிட்டு Socially and economically என்று திரித்து வெளியிட்டது அறிவு நாணயமற்ற ஆரிய விஷமம் ஆகும்.
தற்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது பெரியார் மண்ணுக்கும், மக்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி! இதற்கு முழு காரணம், நமது முதலமைச்சர், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி, தனித் தீர்மானமே சட்டப் பேரவையில் நிறைவேற்றியதும், தலைநகர் டில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தனி மனு ஒன்றையே ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தந்து திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[50 சதம் (செயற்கை) உச்சவரம்பு பற்றி தனியே விளக்குவோம். இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒடுக்கப்பட்டோருக்கு உரிய பங்களிப்பு கிடைக்க வாய்ப்பு அதிகம் ஏற்படும்.]
நமது முதலமைச்சரின் முன்னோக்கும்,
தமிழ்நாட்டின் நிலைப்பாடும் சரியே!
தமிழ்நாட்டின் நிலைப்பாடும் சரியே!
மக்கள் கவனத்திற்குத் தப்பிவிடக்கூடாத மற்றொரு முக்கியச் செய்தி என்னவென்றால்,
தி.மு.க. அரசு, தனியே தமிழ்நாட்டிற்கென ஜாதி வாரிக் கணக்கெடுப்பை எடுக்க முன்வராததைப் பெரிய ‘குற்றம்’ போல் பிரச்சாரம் செய்து, சமூகநீதி வித்தைக்காரர்கள் சிலர் வர்ணித்தார்கள்.
அவர்களுக்கு ஒன்றிய அரசின் அமைச்சர் இந்த அமைச்சவரையின் முடிவை அறிவித்துவிட்டு, ‘‘தனித்தனியே மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை; அவை வெறும் ‘சர்வேயாகத் தான்’ கருதப்படும்; மத்திய சென்சஸ் மூலம் வருவதே சரியான அதிகாரப்பூர்வமாக அமையும்” என்றும் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நமது முதலமைச்சரின் முன்னோக்கு இதில் எவ்வளவு கூர்மையானது என்பதும் புரிந்துகொள்ள வேண்டியது ஆகும்.
சிலருக்கு சமூகநீதி – வெறும் அரசியல் பேரம்; ஆனால் திராவிடர் இயக்கத்தவர்களுக்கோ உயிர்மூச்சுக் கொள்கையாகும்.
அது இப்போது களங்களில் பெறும் வெற்றிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலந்தாழ்ந்தாலும், ஒன்றிய அரசின் முடிவை வரவேற்கிறோம். உடனடியாகச் செயல்பட வைக்க, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர அனைவரும் ஆயத்த மாவோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.5.2025