மே திங்கள் இரண்டாம் நாள் நமது சமுதாய வரலாற்றிலே மறக்கப்படவே முடியாத ஒரு திருப்புமுனை நாள்! 1925ஆம் ஆண்டு இந்த நாளில்தான் ‘குடிஅரசு’ என்னும் வார இதழ் தந்தை பெரியாரால் ஈரோட்டில் தொடங்கப்பட்டது; 1949ஆம் ஆண்டு வரை பல வகை இடையூறுகளுக்கும் தடைகளுக்கும், ஜாமீன் கட்டுத் தொகைக்கும் ஆனானாலும் புறமுதுகு காட்டாமல் பார்வையை நிமிர்த்திக் காட்டி, பழைமை என்னும் வருணாசிரம பாசிசத்தால் மூளையையும், நிமிர்ந்த முதுகையும் பறி கொடுத்த – நான்காவது வருணமாக்கப்பட்ட சூத்திர மக்களிடத்திலும், வருண அமைப்புக்குள்கூட வரக் கூடாத மக்களாக ஆக்கப்பட்ட பஞ்சமர் என்று விளிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலும், எல்லா வருணத்திலும் பிறவி அடிமைகளாகக்கப்பட்ட பெண்கள் மத்தியிலும் புரட்சிகரமான தமது எழுச்சியூட்டிய சிந்தனைகளைப் பரப்பும் தந்தை பெரியாரின் போர் வாளாகக் ‘குடிஅரசு’ வீ(ர)று நடைபோட்டு வந்துள்ளது!
இதழியல் உலகில் அதற்குமுன் ‘குடிஅரசு’ போன்ற முற்போக்கு புரட்சி ஏடு வந்ததி்லலை என்று கூறும் அளவுக்கு வரலாற்றில் தனி மணிமகுடமாய் ஒளி வீசிய ஏடு, இதழ் இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்குப் பெருமை – சாதனை படைத்ததாகும்!
அவர் நடத்திய குடிஅரசு இதழ் (2.5.1925 – 5.11.1949) திராவிடன் (நீதிக்கட்சியால் நடத்தப்பட்டு பிறகு தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தது – ‘குடிஅரசு’ துணைத் தலையங்கம் – 14.8.1927) ரிவோல்ட் ஆங்கில மாத இதழ் (7.11.1928 – சோவியத்துப் புரட்சி நாள் முதல் 19.1.1930 வரை)
‘திராவிடன்’ (1917இல் பக்தவத்சலம்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு நீதிக்கட்சி இதழாக நடத்தப்பட்டு பிறகு தந்தை பெரியார் கைக்கு வந்து சேர்ந்தது (‘குடிஅரசு’ துணைத் தலையங்கம் 14.8.1927) புரட்சி வார ஏடு (20.11.1933 முதல் 17.6.1934 வரை) பகுத்தறிவு (15.4.1934) முதல் மே 27 வரை நாளேடாகவும் பின்னர் வார இதழாகவும் (26.8.1934 முதல் 1.1.1935 வரை) ‘விடுதலை’ (1935 ஜூன் முதல் தேதி முதல் நீதிக்கட்சியால் வாரம் இரு முறை இதழாகவும் நடத்தப்பட்டு பின்னர் தந்தை பெரியாரால் நாளேடாக இன்று வரை தொடர்கிறது) ‘உண்மை’ 1970 ஜனவரி 14) ‘தி மாடர்ன் ரேசனாலிஸ்ட்’ 1971) ‘பெரியார் பிஞ்சு’ (1998). இவை எல்லாம் திராவிட இயக்கத்தின் படைக்கலன்களாகும்.
‘குடிஅரசின் முதல் ஆண்டின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும், இரண்டாவது ஆண்டு 7000 சந்தாதாரர்களையும் கொண்டது. அந்தக் கால கட்டத்தில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட ஏடாக கருத்து மழை பொழிந்தது.
‘குடிஅரசு’ இதழில் (23.10.1933) ‘இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?’ என்று தலையங்கம் தீட்டியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ பிரிவின்படி தந்தை பெரியாருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் ரூ.300 அபராதமும் விதிக்கப்பட்டது. இதழின் வெளியீட்டாளர் என்ற முறையில் தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாளுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 1933 டிசம்பர் 30 அன்று ‘ராஜ துரோகக் குற்றம்’ என்ற பெயரில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
‘‘ஒரு கொள்கையைப் பரப்பும்போது, இதற்கு இடையூறு விளைவிப்பவர்களால் அடக்கு முறைக்கு உள்ளாக வேண்டியது அவசியம்தான்!’’ என்று கூறும் தந்தை பெரியாரின் கொள்கை உறுதியையும் மனத் திட்பத்தையும் வேறு யாரிடம் தான் காண முடியும்?’
திருப்பாதிரிப்புலியூர் சிவசண்முக மெஞ்ஞான சிவாச்சாரியார் 18.4.1925 அன்று ‘குடிஅரசு’ இதழைத் தொடங்கி வைத்தார். குடிஅரசைத் தொடங்கும் போது தந்தை பெரியார் கூறுகிறார்.
‘தாய்த்திரு நாட்டிற்கு யாம் இது காறும் இயற்றி வரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும், எம்மால் இயன்றளவு ஆற்றி வர வேண்டுமென இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறியது. ஒரு சிறு பத்திரிகையேனும் செவ்வனே நடத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்கு உணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே நடத்துவதற்குரியவர். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கைக் கடைப்பிடித்தே இம்முயற்சியில் தலைப்பட லாயினோம்’’ என்று எவ்வளவுத் தன்னடக்கமாக எழுதுகிறார் தந்தை பெரியார். (‘குடிஅரசு’ 2.5.1925)
இது தன்னடக்கமேயன்றி, உண்மையைச் சொல்லப் போனால் ‘குடிஅரசில்’ தந்தை பெரியார் எழுதிய தலையங்கமும் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப் பெயரால் எழுதப்பட்ட கட்டுரைகளும் இதழில் வெளியான கருத்துக் கருவூலங்களான பல்வேறு சிந்தனையாளர்களின் கட்டுரைகளும் என்றும் நின்று வலிமையாக வளமையாகப் பேசக் கூடியவை!
13.1.1935 முதல் எழுத்துச் சீர்திருத்தம் குடிஅரசில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தனி மனிதராகப் புறப்பட்டு, தனி இயக்கம் கண்டு, தனியிதழையும் உருவாக்கி, அதுவரை மக்கள் மனத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற அகங்கார ஆரியத்தின் அடி வயிற்றைக் கலங்கச் செய்தும், மூடநம்பிக்கை முட்காடுகளை எரித்தும் பெண்ணடிமைத்தனத்தைப் புரட்டி மண் மூடச் செய்தும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தாங்கள் மட்டுமே ஆதிக்கம் செய்ய முடியும் என்று இறுமாப்புச் செய்து கொண்டிருந்த ஆரியத்தின் விலா எலும்பை நொறுக்கி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தி, அக்கொள்கையில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்த நீதிக்கட்சியைத் தூக்கி நிறுத்தும் தூணாகவும் நின்று வென்று காட்டியவர் தந்தை பெரியார்.
இதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காரண கர்த்தாவாகவும் விளங்கியவரும் அய்யா பெரியாரே!
‘குடிஅரசு’ என்ற பெயர் இன்று இல்லா விட்டாலும் அ்நதக் ‘குடிஅரசின் நீட்சியே ‘விடுதலை’ என்னும் பேராசான்.
‘குடிஅரசின்’ இந்த நூற்றாண்டு நாளில், அதன் ‘நீட்சி’யான ‘விடுதலை’யை வீடெல்லாம் கொண்டு செல்ல உறுதி எடுப்போம்.
ஓர் ஏட்டின் 63 ஆண்டு கால ஆசிரியர் என்ற ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர் நமது தமிழர் தலைவர் மானமிகு
கி. வீரமணி அவர்கள்.
நான்கு பக்கமாக இருந்த ‘விடுதலை’யை எட்டுப் பக்க வண்ண ஏடாகவும், சென்னையில் மட்டும் ஒரே பதிப்பாக இருந்த ‘விடுதலை’யை இரண்டாம் பதிப்பாக திருச்சியிலிருந்தும் வெளி வரக் காரணமாக இருக்கும் நமது ஆசிரியர் பெரு மகனாருக்கு இயக்கத் தோழர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டு மக்களே பாராட்டி நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். உலகப் பகுத்தறிவாளர்களும் இதற்காகப் பெருமைப்படுவர் என்பதில் அய்யமில்லை. ‘குடிஅரசு’ நூற்றாண்டு நாளில் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்! வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!