சென்னை, மே 2- தேவையற்ற சூழலில் 3 ஆவது மொழியைப் படிப்பது நேர விரயம் என ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் அறிவியல் ஆய்வுத் துறையில் பணியாற்றும் கணேஷ் ஏழுமலை குறிப்பிட்டார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2546 ஆவது நிகழ்வு 01.05.2025 அன்று மாலை பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் நோக்கவுரை ஆற்றினார். ஜப்பானிய தொழிலாளர்கள் எனும் தலைப்பில் ஜப்பான் வாழ் தமிழர் கணேஷ் ஏழுமலை சிறப்புரையாற்றினார்.
ஆசிரியரின் நிறைவான ஜப்பான் பயணம்!
“திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஜப்பான் வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை, உற்சாகத்தைத் தந்தது. அவர்களுடன் பயணம் செய்கிற போதும், அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வேளையில் ஏராளமான வரலாற்றுத் தகவல்களை மிகுந்த நினைவுகளோடு கூறினார்கள். ஒரு சிறிய உரை ஆற்ற வேண்டும் என்றாலும் அதற்குத் தயார் செய்து, குறிப்பு வைத்துக் கொண்டு பேசும் நிலையில் நாம் இருக்கிறோம்.
ஆனால் ஆசிரியரின் அந்த நினைவாற்றல், அணுகுமுறை, சுறுசுறுப்பு இவற்றையெல்லாம் பார்த்து நான் வியந்து போனேன். குறுகிய காலப் பயணத்தில் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம். அதேபோல பெரியார், அண்ணா பிறந்தநாள் விழாக்களில் ஜப்பான் வாழ் தமிழர்களும் குடும்பம், குடும்பமாகப் பங் கேற்றனர். இந்தச் சந்தர்ப் பத்தில் அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து ஆசிரியர் அய்யாவிற்கு எனது வணக்கத்தையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
100 விழுக்காடு மகளிர் உழைப்பு!
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை நாம் சிறப்பாகக் கொண்டாடுவோம். அதேபோல அறுவடைத் திருநாள் ஜப்பான் நாட்டிலும் உண்டு. இதற்கு இணையாக மே 1 ஆம் தேதி, தொழிலாளர் தினத்தையும் கொண்டாடுவார்கள். குறிப்பாக காவல்துறை, தீயணைப்புத் துறை, கல்வித்துறை போன்ற முதன்மைத் துறை சார்ந்தவர்களுக்கு மாண வர்கள் நன்றி தெரிவித்தும், வாழ்த் துகள் கூறியும் கடிதம் எழுதுவர்.
1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொழிலாளர் சட்டங்கள் மேம்படுத்தப்பட்டன. அதன் விளைவாகத் தொழிற் கூடங் களும் நல்ல வளர்ச்சி பெற்றன. ஜப்பான் உற்பத்தியில் சற்றொப்ப 55 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. மீதம் 45 விழுக்காடு பகுதி நேரமாக இருக் கிறது. ஆக மொத்தம் பெண்கள் தங்களின் 100 விழுக்காட்டு உழைப் பைக் கொடுத்து வருகின்றனர்.
இருபது வயது தொடங்கி 60 வயது ஒரே நிறுவனத்தில் பணிபுரிவோரும் ஏராளம் உள்ளனர். ஓய்விற்குப் பிறகும் அங்கு வேலை வாய்ப்பு இருக்கும். ஆனால் ஊதியம் குறைவாகத் தருவார்கள். அதேநேரம் உடலு ழைப்பு மற்றும் நிர்வாகத் துறைகளில் மகளிர் அதிகம் பணிபுரிகின்றனர். ஆனால் பேராசிரியர், அறிவியல் துறை போன்றவற்றில் மிக, மிகக் குறைவாக இருப்பார்கள். இதுபோன்றவற்றில் தமிழ்நாட்டை விடவும், ஜப்பானிய சதவிகிதம் குறைவே!
கூட்டு உழைப்பு!
பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு என்பது உச்சபட் சமாக இருக்கும். அதேபோல அனைத்திலும் குழுவாக இயங் குவதே அதிகம். அனைவரின் சிந்த னைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். ஒருமித்த கருத்து வந்தவுடன் கூட்டு உழைப்பின் மூலம் தங்கள் இலக்கை அடைவார்கள். இந்த கூட்டு உழைப்பில் சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படலாம். ஆனால் தோல்வி தவிர்க்கப்படும். முக்கியமாக பெரியவர், சிறியவர் என்கிற பாகுபாடு அங்கு கிடையாது.
வயது, அனுபவம் இவற்றையே ஜப்பானில் மதிப்பாகக் கருது வார்கள். படிப்பை மட்டுமே வைத்து ஒருவரை உயர்ந்த பொறுப்பிலோ அல்லது மதிக்கத்தகுந்த மனிதராகவோ கருதமாட்டார்கள். இன்னும் சொன்னால் மேலாளர் போன்ற பொறுப்புகளுக்கு வருவதற்கே குறிப்பிட்ட வயதைக் கடந்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தின் முக்கியத்துவம்!
அங்கு அனைவருமே மதச் சார்பற்ற மனிதர்கள் தான். இன்னும் தீர்க்கமாகச் சொன்னால் அங்கு மத ஈடுபாடு என்பதே மிக அரிது. மூதாதையர் வழிபாடு எப்போதாவது உண்டு. ஒழுக்கம், பொது சுகாதாரம், மனிதர்களிடம் பழகும் முறை, நேர்மை உள்ளிட்ட எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக இருப்பார்கள். தோழர் வில்வம் சொன்னதைப் போல, பெரியார் காண விரும்பிய சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் ஜப்பானை உதாரணமாகக் கொள்ளலாம்.
ஒரு காலத்தில் ஜப்பானிய மொழி மட்டுமே படித்தவர்கள் 2010 க்குப் பிறகு ஆங்கிலம் கற்கத் தொடங்கினர். அதேபோல வெளிநாடுகள் சென்று படிப்பதும் அதிகரித்துள்ளது. ஜப்பானிய நிறுவனங்களும் ஆங்கிலம் படிக்க வலியுறுத்தி வருகின்றன. இப்போதைய நிலையில் ஜப்பானியர்கள் கணிசமான அளவில் எழுதவும், பேசவும் தொடங்கிவிட்டனர். ஆங்கிலம் அவர்கள் முன்பே படித்திருந்தால், இன்றைய வளர்ச்சியை இன்னும் இருபது ஆண்டிற்கு முன்னரே எட்டியிருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. சீனா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளும் ஆங்கிலம் பயில்வதில் அக்கறை காட்டி வருகின்றனர்.
எனது மூன்றாவது மொழி ஜப்பானிஷ்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் நான் தமிழ் வழியில் படித்தவன். பின்னர் ஆங்கிலமும் கற்றுக் கொண்டேன். உயர்கல்வியில் ஆய்வுப் படிப்புப் பயில ஜப்பான் சென்றேன். ஆக எனக்கு மூன்றாவது மொழியாக ஜப்பானிஷ் தேவைப் பட்டது. அங்கு சென்று கற்றுக் கொண்டேன். அதேநேரம் தமிழ்நாட்டிலேயே இருக்க நேர்ந்தால் தமிழும், ஆங்கிலமும் போதுமானதாக இருந்திருக்கும். ஆக மூன்றாவது மொழி எனது வசிப்பிடத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அப்படி இல்லாமல் நானே வலிய சென்று மூன்றாவது ஒரு மொழியைப் படித்து, அது எனக்குப் பயன் படாமல் போனால் எனது நேரம், பொருள், காலம் அனைத்தும் வீணாகிவிடும்.
பெரியார் என்கிற பேராசான்!
ஜப்பானில் அறிவியல் துறையில், ஒரு ஆய்வு நோக்கிய பணியில் இருக்கிறேன். இந்த இடத்தில் நான் தந்தை பெரியாரை நினைத்துப் பார்க்கிறேன். அந்தக் காலத்திலேயே ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என விடாமல் பேசிப் பேசி இந்த மண்ணில் அறிவை விதைத்தவர். அதனையொட்டி அறிஞர் அண்ணா இருமொழிக் கொள் கையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இதன் விளைவாகவே நம் தமிழ்நாடு இன்று உயர்ந்த இடத்தில் உள்ளது. தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் பரவி வாழவும் இதுவே காரணம்.
உலகில் வாழும் உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கி றேன்”, என கணேஷ் ஏழுமலை பேசினார். நிகழ்ச்சியில் பார் வையாளராகக் கலந்து கொண்ட இளைஞர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.