சென்னை, ஏப்.30 தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடிப்படைக் கோட்பாடு என்ன?
செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன எனச் சொல்லியிருக்கிறார். தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற அடிப்படைக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஅய் நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த, கூட்டணிக்கு சம்மதித்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற ‘கைராசி’க்காரர்தான், ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன என ‘ஜோசியம்’ சொல்கிறார்.
தொடர் தோல்விதான் புரட்சியா?
தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் எடப்பாடி பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?.
தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்-அமைச்சர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி அமைச்சரவையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?
எடப்பாடிக்கு அருகதை உண்டா?
எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது’ என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து, இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்-அமைச்சர் அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.
பேசாமல் இருப்பதுதான் நல்லது
எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்த எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சரவையை பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.