தஞ்சையில் நடைபெற்று வருகின்ற பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் ”தமிழ் மொழி வார விழா”வாக கொண்டாடப்பட்டது!

viduthalai
4 Min Read

 

திராவிடர் கழகம்

தஞ்சை, ஏப். 30- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் 5 நாள் பழகு முகாமின் முதல் நாளில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராமச்சந்திரன் தலைமையில், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தி வரும் பெரியார் பிஞ்சுகளுக்கான 5 நாள் பயிற்சி முகாமான ”பழகு முகாம்” இந்த ஆண்டு ஏப்ரல் 29 முதல் மே 3ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள் 48, சிறுமிகள் 21 என மொத்தம் 69 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அன்றாட வாழ்வில் அறிவியல்!

காலை உணவுக்குப் பிறகு மாணவர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் வழிகாட்டுதலில் அனைவரும் அய்ன்ஸ்டீன் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதல் வகுப்பாக பெரியார் பண்பலையின் பொறுப்பாளர் கனிமொழி மாணவர்களுக்கு பெரியார் பண்பலை பற்றி அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பெரியார் பண்பலையில் மாணவர்களை பேச வைப்பதற்கான முன்னோட்டமாக கலந்துரையாடினார். இரண்டாம் வகுப்பில் முனைவர் பேராசிரியர் முருகன், “அன்றாட வாழ்க்கையில் அறிவியல் மனப்பான்மை” எனும் தலைப்பில் ஒளிப்படக் காட்சி விளக்கத்துடன் மாணவர்களிடையே கலந்துரையாடி விளக்கினார்.

புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா!

மூன்றாம் வகுப்பாக புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் இராமச்சந்திரன் தலைமையேற்றார். மொழிகள் துறை உதவி பேராசிரியர் ந.லெனின் அனைவரையும் வரவேற்றும் இணைப்புரை வழங்கியும் சிறப்பித்தார்.  பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் இரா. மல்லிகா, பதிவாளர் சிறீவித்யா, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, முனைவர் பேராசிரியர் முருகன், பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அனுசுயா, கி. சித்ரா ஆகியோர் முன்னிலை ஏற்க, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணைவேந்தர் தமது தலைமையுரையில், புரட்சிக் கவிஞர் பற்றிய கேள்விகள் கேட்டால் உடனடியாக பதிலகளை சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றிருந்த பெரியார் பிஞ்சுகளை பாராட்டினார். தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறப்புக்குரியவர் புரட்சிக் கவிஞர் என்றும், பெரியாரிடம் அன்பைப் பெற்றவர் புரட்சிக் கவிஞர் என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

தமிழ் மொழி வாரம்!

தொடர்ந்து கவிஞர் பேசினார். சுப்பிரமணிய துதி அமுதம் பாடிய பாரதிதாசன் தந்தை பெரியாரின் மயிலாடுதுறை பேச்சைக் கேட்டு, பழைமையைத் துறந்து, புரட்சிக் கவிஞராக மாறினார் என்று குறிப்பிட்டார். அதற்குப் பிறகு அவரது படைப்புகள் காலத்தால் அழியாததாக மாறியது என்பதை கோடிட்டுக் காட்டினார். மேலும் அவர், நமது கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கடந்த வாரம் புரட்சிக் கவிஞர் பிறந்த நாளை, ”தமிழ் மொழி நாளாக” அறிவிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தார் என்றும் அதனையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை புரட்சிக் கவிஞர் பிறந்த நாளை தமிழ் மொழி வாரமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். புரட்சிக் கவிஞர் மூடப்பழக்க வழக்கத்தை கடுமையாக தனது கவிதைகளில் சாடியவர் என்றும் பெரியாரின் உரைநடைதான் புரட்சிக்கவிஞர் கவிதை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

பெரியார் திரைப்படம் திரையிடல்!

மதிய உணவுக்குப் பிறகு பர்வீன் பேகம் மற்றும் டாக்டர் தினகரன் இருவரும் அடுத்தடுத்து மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் உதவி பேராசிரியர் சாம்ராஜ் தந்தை பெரியார் கொள்கைகளை படவிளக்கக் காட்சியுடன் விளக்கினார். இடையிடையே வினாடி வினா போட்டி நடத்தி சரியாக பதில் சொன்னவர்களுக்கு பரிசளித்தார். அடுத்த வகுப்பாக “பெரியார்” திரைப்படம் திரையிடப்பட்டது. மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து கண்டு களித்தனர். அதைத் தொடர்ந்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் “பெரியார்” திரைப்படத்தில் மாணவர்களுக்கு பிடித்த காட்சி எது என்று கேள்வி கேட்டு, ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு பிடித்த காட்சிகளை பட்டியலிட்டுச் சென்றனர். தொடர்ந்து பெரியாரின் கடவுள் மறுப்பு ஏன் என்பது பற்றி விளக்கினார். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார் என்று குறிப்பிட்டார். கடவுளின் பெயரால் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்பதை ’பஞ்சகவ்யம்’ என்றால் என்ன என்பதை விளக்கி, இதற்காகத்தான் பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்தார் என்றார். இறுதியாக பெரியாரின் ஜாதி ஒழிப்புக்கொள்கையைச் சொல்லி, இன்றைய முதலமைச்சர் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆவதற்கு ஆணையிட்டது வரை விளக்கினார்.

முன்னதாக காலையில் ஒரு வகுப்பாக பெண் குழந்தைகள் நீச்சல் பயிற்சிக்கு சென்று திரும்பினர். அதே போல் பிற்பகலில் ஆண் குழந்தைகள் சென்று திரும்பினர். அதன்பிறகு மாணவர்கள் குழு வாரியாக வரிசையாக உணவுக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, உணவு முடிந்ததும் அவரவர் அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வருகைப் பதிவேடு சரிப்பார்ப்பு பணிகள் நடைபெற்றன. காலையில் வந்தவுடனேயே உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று அழுது அடம் பிடித்த மாணவன், அந்த சுவடே தெரியாமல் மற்றவர்களை விட அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்றது குறிப்பிடத்தககது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *