சென்னை, ஏப். 30- இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
5 இலட்சமாக உயர்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சேபனையற்ற இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த பட்டா பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பட்டா வழங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன.
அதற்கு ஏற்றபடி, தற்போது திருத்தம் செய்யப்பட்ட அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பட்டா நில அளவு 1 சென்டிலிருந்து 2 சென்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இலவச பட்டா பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் தமிழ்நாடு முழுவதற்கும் பொருந்தும்.
பழங்குடியினர்
சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக 2 சென்ட் மனை வழங்கப்படும்.
இதற்கு மேல் 1 சென்ட் நிலத்தை 25 சதவீத நில மதிப்பு செலுத்தி ஒழுங்கு முறைப்படுத்தலாம். ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 3 சென்ட் நிலத்தையும் 100 சதவீத நில மதிப்பு செலுத்தி பெற்று கொள்ளலாம்.
பழங்குடியினருக்கான சிறப்பு விதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத பழங்குடியினருக்கு, மாவட்ட அளவிலான குழு ஆய்வு செய்து மாநில குழுவிற்கு பரிந்துரைக்கும். மாநில குழு இறுதி முடிவை எடுக்கும். இது பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.
வருமானம்
அதேபோல் பட்டா வழங்குவதில் நில மதிப்பு செலுத்தும் சதவீதத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் கூடுதல் 1 சென்ட் நிலத்திற்கு 25 சதவீத மதிப்பு செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 2 சென்ட் நிலத்திற்கு 50 சதவீதமும், 1 சென்ட் நிலத்திற்கு 100 சதவீதமும் செலுத்த வேண்டும். ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 3 சென்ட் நிலத்திற்கும் 100 சதவீத மதிப்பு செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.