பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார்
மே 23ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
மே 23ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
மகளிர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப்.30- தியாகராயர் நகரை சேர்ந்தவர் வெங்கட சரவணன் என்கிற பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி. இவர், சிறீ ராமானுஜ மிஷன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்தார். இவர் மீது கடந்த 2004ஆம் ஆண்டு ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் புகார் மனு அளித்தார். அதில் சதுர் வேதி தன்னுடைய மனைவி, மகளை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். நேபாள நாட்டில் வைத்து தொழில் அதிபரின் மனைவி, மகளை மீட்டு சதுர்வேதியை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சதுர்வேதி தலைமறைவானார். இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2016ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் மீதான பாலியல் வழக்கு விசாரணை எழும்பூர் அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் அவருக்கு எதிராககேட்டு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் சதுர்வேதி வருகிற மே 23ஆம் தேதிக்குள் அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்றும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.