மன்னா உலகத்து
மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத்
தாம்மாய்ந்தனரே’ என்று
பொன்றாது நின்று புகழ்பேசும்
புறநானூற்று வரிகளுக்கு ஏற்பத்,
தாம்வாழ்ந்த காலத்திலேயே
தன்னேரிலாத் தகுதியும் தனிப்புகழும்
பெற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்து
மறைந்த வண்டமிழ்ப் புலவர்கள்
மிகச்சிலரே ஆவர்.
அவர்களுள் தகுபுகழ்கொண்ட
தன்மானப் பாவலர், மிகுபுகழோடு மின்னிச் சிறந்த பாவேந்தர்
பாரதிதாசனும் ஒருவர்.
எட்டயபுரத்துப் பாட்டரசர் பாரதியாரின் நேசமிகு நெஞ்சத்தின்
நிழற்சோலையில் தழைத்திருந்த
நெருப்பு விருட்சம் அவர்.
திசையெங்கும் மண்டிக் கிடந்த
மடமைக்குத் தீவைத்து, மங்கிக் கிடந்த தமிழுணர்வை எழவைத்து, பகுத்தறிவுப் போர்க்களத்தின் தந்தையாய் நின்ற தத்துவப் பெரியாரின் பிரியத்துக்குரிய பெருந்தொண்டர் அவர்.
அடுக்கிவரும் சொல்லழகில்
ஆர்த்துவரும் பொருளழகில்
எடுத்துவரும் குரலழகில்
தடுக்கிவிழாத் தமிழரில்லை எனுமாறு தமிழ்நாட்டு அரசியல் மேடைகளை அமுதத் தமிழால் அதிர்வித்த அறிவுப்பெருங்கடல் அண்ணாவின் நெஞ்சத் தடத்தில் நீங்காது நின்றிருந்த
நெடுங்குன்றம் அவர்.
தீச்சுடர் தெறிக்கும் பாச்சுடர் கொண்டு திராவிட இயக்கத் தீப்பந்தங்களை மேடைகள் தோறும் ஏற்றிவைத்த மின்சாரக் கவிஞர் அவர்.
‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும், விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்’ என்னும் காழ்ச்சிந்தையோடு கவிதை செய்து,
அற்றை நாள் நிலவிய ஆதிக்கச் சிந்தனைகளின் ஆணிவேரில் வெடிவைத்த ஆண்மைத் திலகம் அவர்!
‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால்-இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!’ என்று தண்டமிழ் காக்கத் தமிழையே படையாக ஏந்திப் போர்முரசு கொட்டிய இனமானக் கவியரசர் அவர்!
அவரது 134-ஆவது பிறந்தநாள் பரிசாக, முற்போக்குச் சிந்தனைகளில் மூழ்கித் திளைக்கும் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள அற்புதமான இரண்டு அறிவிப்புகள், அறிவாலயத்தின் மரபுவழி மாட்சிக்கு மகுடம் சூட்டி அறிஞர்களின் இதய ஓடையில் எழுச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சங்க காலம் தொட்டு இன்றுவரை மொழியையே பாடுபொருளாக வைத்துப் பாட்டிலக்கியம் படைத்து அதில் வியத்தகு வெற்றி கண்ட கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனைத் தவிர வேறு எவருமில்லை!
அவருக்குத்தான் அறிஞர்கள் கூடி அணிவிழா எடுத்து ஆயிரம் மலர்தூவி அழகு செய்வதற்கு ஆணையிட்டுள்ளார் நம் அருமை முதலமைச்சர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில், மதிப்பிட முடியாத மாத்தமிழ்க் கவிஞர்க்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற முதல் அறிவிப்பு
மூவாத் தமிழுக்கு மொழிமாலை கட்டி
முப்போதும் பணிசெய்த முத்தமிழ்க் கவிஞருக்கு, திசையெல்லாம் இசைகொண்ட திராவிட மாடல் நாயகரின் சரித்திர சமர்ப்பணமாய் ஆகியுள்ளது.
டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி
மேனாள் ஒன்றிய இணையமைச்சர்
‘நல்லுயிர்,உடம்பு, நற்றமிழ் மூன்றும் நான்.. நான்.. நான்!’ என்று நரம்புகள் புடைக்க நாவேந்தி நின்ற பாவேந்தருக்கு, மூவேந்தர் ஆற்றல் முற்றாகப் பெற்ற நம் முதலமைச்சர் படைக்கும் முத்திரைக் காணிக்கையாக
அந்த முதல் அறிவிப்பு மலர்ந்துள்ளது!
‘நாங்கள் ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம்செய்.. முழங்கு சங்கே!’ என்று வீரக்கனல் ஊற்றி வெண்ணிலவுத் தமிழ்நெய்த வீறுகவி அரசருக்கு வெற்றிப் பட்டயமாய் விளங்கப் போகிறது அம் மணிமண்டபம்!
பாட்டுக் குயிலான பாரதியின் கோட்டுப் புகழுக்குக் கோலம்செய்யும் முத்தான மூன்று படைப்புகளுள் ஒன்று குயில்பாட்டு. அந்தக் குயில்பாட்டுப் பிறந்த குயில்தோப்புக்கு அண்மையில் உள்ள கோட்டுக் குப்பத்தில் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியின் தாசனுக்கு மணிமண்டபம் எழுப்புவது அழகுக்கு அழகு சேர்க்கும் அற்புதம் அல்லவோ!
‘தமிழுக்கு நீ செய்யும் தொண்டு- நின்
பகைமீது பாய்ச்சிடும் குண்டு!’ என்று கொட்டி முழக்கி, பகைப்புலத்தை வேரறுக்கும் படைக்கலம் எது? என்பதை அழுத்தமாக அடையாளம் காட்டிய அறிவுப் பாவலர் பாவேந்தர்.
ஆய்ந்து நோக்கினால் ஆச்சரியமாய் இருக்கிறது நமக்கு!
‘ஆர்த்துவரும் தமிழ்ப்பகையை ஓட்ட வேண்டுமென்றால் அங்கங்கும் தமிழ்க்கனலை மூட்டவேண்டும்’ என்று பாடம் எடுத்த பாவேந்தர் வழியில் பயணத்தைத் தொடர்கிறார் நம் பண்பாட்டு மீட்பர் மாண்புமிகு முதலமைச்சர் என்பது, நம் கொள்கை எதிரிகளைக் குலைநடுங்கச்
செய்து வருகிறது.
‘அலைபாடும் தென்புதுவை அழகாடும் பட்டினத்தின்
கலைபாடும் குயிலான கவியரசர் பாவேந்தர்,
சிலையோடு மண்டபத்தைச் சீரோடு சமைக்கின்ற,
தலையாய பணிசெய்யும் தலைவரவர் வாழியவே’ என்று,
பொய்யா நாவின் புகழ்விளங்கும் புலவோர்கள் எல்லோரும் போற்றிப் புகழ்கின்றார்கள்- நம் முதல்வர் ஆற்றும் அருந்தமிழ்த் தொண்டை
அண்ணாந்து பார்த்து!
பாங்குறு ஆங்கிலமும் பச்சைப் பசுந்
தமிழும் ஓங்குறக் கற்று உணர்ச்சிமழை பெய்த ஒளிவீச்சான அண்ணாவின் மேடைப் பேச்சுக்கும்
அலங்காரத் தமிழ் தந்தவர் பாவேந்தர். அவருக்குப் பொற்கிழி வழங்கிப் புலவர்களைக் கூட்டிப் புகழ்குவித்துப் பூரிப்படைந்தவர் பேரறிஞர் அண்ணா.
அவரது நூல்களை அரசுடைமை ஆக்கி, ஏடுகள் தந்த எழுச்சிக்
கவிஞருக்குப் பீடுகள் கொடுத்துப்
பெருமை செய்தவர்
முத்தமிழறிஞர் கலைஞர்.
இயக்கக் களத்தில் ஈட்டிகள் தேவைப்படும்போது, பாவேந்தரின்
உலைக்களத்தில் இருந்து உணர்ச்சி தெறிக்கும் ஈட்டிகளை உருவி எடுத்துத்
தன் கந்தக வார்த்தைகளைக் கலந்து வீசிக் கந்தர்வ மொழிபேசிக்
களமதிரச் செய்தவர் கலைஞர்.
அந்த அறிஞரும் கலைஞரும் கற்பித்த வழியில் அடிபிறழாமல் நின்று,
ஆகாயப் புகழை அள்ளிக் குவித்து ஆரிய மாயையின் அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்
நம் திராவிட நாயகர் இன்று.
சட்டப் பேரவையின் 110-ஆவது விதியின் கீழ் அவர் அறிவித்திருக்கும் தமிழ் வாரவிழா அறிவிப்பு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை போலத் தமிழ் மனங்கள் யாவிலும் மகரந்தம் உதிர்விக்கும் மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பாக மலர்ச்சி பெற்றிருக்கிறது!
‘அன்றன்றும் வாழ்வில் புதுமை காணவேண்டும்’ என்ற அவாவை வெளிப்படுத்திப், புதுமைநலம் கமழும்
புத்துணர்ச்சிப் பாக்களைப்
பொழிந்து தள்ளிய புயல்மேகம்
அல்லவா பாவேந்தர்!
அவரது பிறப்புத் திருநாளைப்
புதுமணம் பூக்கப்
புகழ்ப்பரணி கேட்க
ஏழுநாள் கொண்டாட
ஏற்பாடு செய்துள்ள
எழின்மை கேட்டுத்
தமிழர் நெஞ்சங்கள்
தாமரைத் தடாகமாய்க்
குளிர்ந்து கிடக்கின்றன.
‘திராவிட உணர்வுகளின்
தலையூற்றாய்த் திகழும்
திருநாடு தமிழ்நாடு’ என்பதைத்
தன் ஒவ்வொரு அசைவிலும்
உணர்த்திக் கொண்டிருக்கும்
நம் முதலமைச்சர், திராவிட
சித்தாந்தத்தின் திருப்புகழை
உரக்க உரைத்த உணர்ச்சிப்
பாவலரை உச்சிமேல் வைத்து
மெச்சிப் போற்றுவோம் என்று
ஏழுநாள் விழா அறிவித்திருப்பது-
நம் ஏழிசைத் தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னுமோர் ஏற்றம்!
கவிதைத் தமிழுக்குக்
கவின்சேர்க்கப் போகும்
கம்பீரத் தோற்றம்!
‘நான்தான் திராவிடன் என்று
நவில்கையில்
தேன்தான் நாவெலாம்!
வான்தான் என்புகழ்!’ என்று
பெருமிதச் சிகரத்தில் ஏறி நின்று
எக்காளமிட்டவர் பாவேந்தர்.
அந்த வைரம் பாய்ந்த வார்த்தைகளை வரம்போல உள்வாங்கி
‘நான் திராவிடன்..நான் திராவிடன்’ என்று
மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நம் உன்னத முதலமைச்சர்,
சரியான நேரத்தில்
சரியான பாவலரை
உயர்வான இடத்தில் வைத்து
உணர்வென்னும் ஒளியூட்டி
உச்சிமோந்து பாராட்ட
உத்தரவிட்டிருக்கிறார்.
‘கெடலெங்கே தமிழின் நலம்,
அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்க!’ என்று
இளைத்துக் கிடந்த இளைஞர்களை
உசுப்பி எழுப்பி,
அவர்களின் குருதி அணுக்களில்
கோபத்தீ மூட்டிய
கோட்பாட்டுக் கவிஞரைக்
‘கொண்டாடுங்கள் ஒரு வாரம்’ என்று
கொள்கைப் பிரகடனம் செய்திருக்கிறார்.
பூவாரம் புனையுங்கள்!
புகழ்மாலை சூட்டுங்கள்!
நாவலரும் பாவலரும்
நாவாரப் போற்றுங்கள்!
திராவிடத் தேவாரம்
திசையெல்லாம் ஓதுங்கள்!
தேன்தமிழ் எடுத்துத்
திருப்பள்ளி எழுச்சி
தெருவெல்லாம் பாடுங்கள்- என்று
அரசாணை பிறப்பித்து அறிவுப் போரின்
அடுத்தடுத்த கட்டத்தை
அறிமுகம் செய்து கொண்டே
இருக்கிறார்!
‘தூங்கியதுண்டு தமிழர்கள்
முன்பு-பகை
தூளாகும் அன்றோ எழுந்த பின்பு!’
என்று தடந்தோள் உயர்த்தித்
தமிழ்வடித்தார் பாவேந்தர்.
அவர் அன்றுரைத்த சொற்கோலம்
அழியாது எக்காலும் என்பதை
நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது, நம் முதல்வரின் செயலாக்கம்
ஒவ்வொன்றும்!
‘எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி..?’ என்று இமயத்தின் செவிநோக்கி இன்பத் தமிழை ஏவுகணை ஆக்கினார் பாவேந்தர்.
அவர் அன்று எழுப்பிய அத்தனை கேள்விகளையும் இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறார் நம் ஏரார்ந்த
முதலமைச்சர்.
‘தாய்மொழிப் பாலுக்கு
வாய்திறக்கும் குழந்தைக்கு
இந்தியைப் புகட்டுவது கட்டாயமெனில், புட்டிப்பால் ஒழிக்கப்
போர்க்குரல் எழுப்புவதும் கட்டாயம்தானே’ என்று இந்தி எதிர்ப்புப் போரில் பாவேந்தர் கேட்ட கேள்வியைத்தான், தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் காக்கவே பிறந்த நம் தளபதியும்
கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சற்றொப்ப ஒருநூற்றாண்டுப் போர் இந்தித் திணிப்புக்கும் செந்தேன் தமிழுக்கும் இடையிலான
மொழிப்போர்.
இந்தியைத் திணிப்போர், தமிழுணர்வைச் சிதைப்போர், இவையறிந்து விழிப்போர், வடவரைப் புறங்கண்டு அழிப்போர் என்று அனுமார் வாலாய் நீண்டு கொண்டிருக்கிற வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற முரட்டு முயற்சியின் மற்றுமொரு மைல்கல்தான் நம் முதலமைச்சரின்
தமிழ் வாரவிழா!
‘தமிழர்க்குத் தொண்டுசெய்யும்
தமிழனுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றும்
தூளாய்ப் போகும்!’ என்று
துணிந்துரை செய்த பாவேந்தரின் அணிந்துரையை இன்று உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
‘அஞ்சும் வழக்கம் திராவிடர்க்கில்லை
ஆள்வலி தோள்வலிக்குப்
பஞ்சமில்லை’
என்றுரைத்த கவிஞரின்
தீர்க்க தரிசனம்தான் இன்று
திராவிட மாடலாய் எழுந்து நிற்கிறது!
இத்தனை காரணங்களின்
பூரண வடிவமாக நம் முதலமைச்சர்
பூத்துப் பொலிந்திருப்பதால்தான்,
புரட்சிப் பாவலரின்
புகழுக்குத் தனிமகுடம் புனைந்து
அளவற்ற மகிழ்ச்சி
அடைய முடிந்திருக்கிறது அவரால்!
இந்த மணிமண்டப முயற்சிக்கு
வித்திட்ட வகையில் நம்
விழித்திரையில் நிற்பவர்
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர்
என் அன்பு இளவல் அன்னியூர் சிவா என்று மயிலிறகு கொண்டு மனம் வருடிச் சொல்கிறது நினைவு.
தன் சட்டமன்ற நுழைவின் கன்னிப் பேச்சில் பாவேந்தரை எண்ணிப் பேசியவர் அவர்தான்!
புதுவைப் புல்லாங்குழலின் எல்லைப் பகுதியில், சொல்லாலே கோட்டை கட்டிய சுயமானக் கவிஞருக்கு
மணிமண்டபம் அமைக்கப்போகும், கலைஞரின் கைவண்ணக் கலையழகர் நம் முதலமைச்சர் தளபதியை
ஆயிரம் ஆயிரம் தலைமுறை
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பாடிப் பரவிப் பல்லியம் முழக்கிப்
பரவசக் கூத்தாடிக்
கொண்டாடத்தான் போகிறது!
பகுத்தறிவுக் கண்கொண்டு பாட்டும் செய்யுளும் பல்வேறு காவியமும்
நாடகமும் படைத்து நயத்தகு தமிழின்
நாயகராய் விளங்கும் பாவேந்தருக்கு,
அணிபூட்டி அழகுபார்க்கும் நம்
அன்னைமனத் தலைவரை அறிஞர் உலகம் ஆராத அன்போடும் தீராத உணர்வோடும் ஆராதித்து
மகிழத்தான் போகிறது!
‘எல்லார்க்கும் எல்லாம்என்று
இருப்பதான இடம்நோக்கி
நடக்கின்றது இந்த வையம்’
என்பது பாவேந்தரின்
பகுத்தறிவுக் கூர்நோக்குப் பிரகடனம்!
அதைத்தான் உறுதி செய்து கொண்டிருக்கிறது
நம் திராவிட மாடல் அரசு!
‘எல்லார்க்கும் எல்லாம் என்று
இருப்பதான இடம்நோக்கி
நடக்கின்றது தமிழ்நாடு’ என்று
பல்லோரும் போற்றப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்-நம் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
அவர்-
மூன்றாவது முறையும்
எதிரிகளைத் தோற்கடிப்பார்!
அவர்-
ஏழாவது முறையும்
ஆட்சி பீடத்தை அலங்கரிப்பார்!
எவரும் எட்டாத உயரத்தை
எட்டிப் பிடிப்பார்!
வரலாறு வணங்கும்
சோழ சாம்ராஜியத்தைப் போல-ஒரு
திராவிட சாம்ராஜியத்தைக்
கட்டியே முடிப்பார்!
பாவேந்தரின் மொழியில் சொன்னால்-
‘அவரின் விழியில்
மேதினிக்கு ஒளிசெய்வார்!
புதியதோர் உலகம்
பூக்க வழிசெய்வார்!’
நிறைவாய்ச் சொல்கிறேன்:
பகல் இருளாது!
பால் புளிக்காது!
தேன் கசக்காது!
திராவிட மாடல் தோற்காது!