முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் பாராட்டு!

viduthalai
4 Min Read
* 36 நாள்களாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 
இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியான எடுத்துக்காட்டு! 
* 110 விதியின்கீழ் வெளியிட்ட முதலமைச்சரின் அறிவிப்புகள் காலத்தை வென்றவை!
கொள்கை எதிரிகளுக்கு அன்றாடம் திகைப்பையும், மக்களுக்கு இனிப்பையும் தருவதே தமது உயிராக, கடமையாகக் கொண்டுள்ளார்!

36 நாள்களாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், இந்தியாவின் இதர மாநிலங்க ளுக்கெல்லாம் முன்னோடியான எடுத்துக்காட்டாகும். 110 விதியின்கீழ் வெளியிட்ட முதலமைச்சரின் அறிவிப்புகள் காலத்தை வென்றவை! கொள்கை எதிரிகளுக்கு அன்றாடம் திகைப்பையும், மக்களுக்கு இனிப்பையும் தருவதே தமது உயிராக, கடமையாகக் கொண்டுள்ள நமது முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் பாராட்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் – பல துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து,  14.3.2025 அன்று தொடங்கி 36 நாள்களாக நடைபெற்று வந்த நிகழ்வுகள், நேற்றோடு (29.4.2025) முடிவடைந்துள்ளது – வெற்றிகரமான வகையில்!

அரசியல் ஆரோக்கியத்துடன்  உரையாடல்கள், எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் – இவையெல்லாம் மிகச் சிறப்புடன் நடைபெற்றுள்ளன. கொஞ்சம் சூடேறிய சில சமயங்களில்கூட, மாண்புமிகு ‘திரா விட மாடல்’ ஆட்சி நாயகரான முதலமைச்சரின் தலை யீட்டால், எல்லாம் சுமூகமாகவே ஆக்கங்கள் உருவாகி நடந்தன.

110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் காலத்தை வென்றவை!

110 விதியின்கீழ் வெளியிட்ட முதலமைச்சரின் அறிவிப்புகள் காலத்தை வென்றவைகளாக, வருங்கால வரலாற்றின் பாதையை ஒளியூட்டுபவையாக, இந்தி யாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியான எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தன.

மாநில சுயாட்சி உரிமைத் தீர்மானம், புரட்சிக்கவிஞர் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்கி, மே 5 ஆம் தேதிவரை (ஒரு வாரம்) தமிழ் மொழி வார நாளாகக் கொண்டாடப்படவேண்டிய ஆணை மற்றும் பல அடுக்கடுக்கான முற்போக்குத் திட்ட அறிவிப்புகள், அரசு ஊழியர் பெருமக்களுக்கு 9 சுவையான அறிவிப்புகள் – மக்கள் மகிழ்ச்சி ஊற்றைப் பெருக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக முத்திரைப் பதித்தவை, காவல்துறை மானியத்தில் சட்டம் – ஒழுங்குபற்றியும், இன்னோரன்ன பல கருத்துகளைப் பகிர்வதற்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சுமார் ஒரு மணிநேரத்திற்குமேல் பேரவைத் தலைவர் அளித்தமை, ஜனநாயகத்தின் – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், விழுமியங்களையும் மதித்து நடக்கும் ‘எடுத்துக்காட்டான’ (Exemplary) ஆட்சி தி.மு.க. ஆட்சி என்று சாட்சியம் பகருவதாகவே அமைந்துள்ளது!

வரலாறு படைத்து வரும்
நமது முதலமைச்சர்!

நமது முதலமைச்சர் அவர்கள், தான் ஒரு சராசரி அரசியல்வாதி அல்ல; முதிர்ந்த அரசியல் ஞானி, அனுபவக் களஞ்சியம், ஆர அமர யோசித்து, யோசித்து, நிதானம் தவறாது நடந்துகொள்ளும் ஒப்பற்ற ஆட்சித் தலைவர். அனைத்துத் தரப்பினரையும் தமது அன்பா லும், ஆளுமையாலும் கட்டிப் போடும் காந்த சக்தியு டனும் நடந்துகொண்டு வரலாறு படைத்து வருகிறார்!

தனக்குள்ள தடைக்கற்கள், இவ்வாட்சியைச் செயல்பட முடியாமற் செய்ய, கொள்கை எதிரிகளும், பாசிஸ்ட்டுகளும் எப்படித் தொல்லையை செயற்கையாக ஏற்படுத்தி, ஆட்சிக்கு நெருக்கடி தருகின்ற நிலைமை உள்ளது என்பதை ஒரு ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ போல, சட்டப்பேரவையில் நிகழ்த்திய, சரித்திர உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்!

‘‘மேலே பாம்பு, கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர் – இத்தடைகளைத் தாண்டித்தான் ‘திராவிட மாடல்’  ஆட்சியாக, தனது தலைமையில் இயங்கும் ‘திராவிட மாடல்’  ஆட்சி வேக நடை போட்டு, வெற்றித் தளத்தில் தகத்தகாய ஒளியுடன் வென்று, நின்று வருகிறது; இவ்வெற்றி 2026 தேர்தலிலும் 200 சட்டப்பேரவை இடங்களை இலக்காக மட்டுமல்ல; மக்கள் தரும் மகத்தான பரிசாக தமிழ் மண் – பகுத்தறிவு சுயமரியாதை மண்ணான இப்பெரியார் மண் வென்று காட்டும்’’ என்ற நம்பிக்கையின் உச்சத்தில் நின்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

முன்பு ஆண்ட அறிஞர் அண்ணா ஆட்சிக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்கும்கூட இவர் சந்திக்கும் பாம்பு, நரிக்கூட்டம், குதிக்க முடியாத அகழிகள், தடுக்கும் தடுப்புச் சுவர்கள் – இவ்வளவு கொடுமையான சோதனைகள், நிதி நெருக்கடிகள் – ஆளுநர் என்ற  அரசமைப்புச் சட்டத்தை அன்றாடம் கொச்சைப்படுத்தத் தயங்காத ஓர் ஒத்துழையாமை இயக்க எதிர்க்கட்சித் தலைவர் போன்ற கீழிறக்க செயல்வாதி!

கொள்கை எதிரிகளுக்கு அன்றாடம் திகைப்பையும், மக்களுக்கு இனிப்பையும் தருகிறார்!

இவ்வளவுக்கிடையேயும், சளைக்காமல் களமாடி வென்றுவரும் ஒரு லட்சிய வெற்றி வீரர்தான் நமது ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சாதனைகளையே தினசரி நாள்களாக மக்களை எண்ண வைக்கவும், கொள்கை எதிரிகளுக்கு அன்றாடம் திகைப்பையும், மக்களுக்கு இனிப்பையும் தருவதே தமது உயிராக, கடமையாகக் கொண்டுள்ளார்.

அவருக்குப் பேராதரவு தரும் தி.மு.க. கூட்டணித் தோழமைக் கட்சியினரையும், கட்டுப்பாடு காக்கும் அவரது இயக்கத் தொண்டர்களையும், அவரது அமைச்சரவையினரையும் இன்முகத்தோடு முதலமைச்சரைப் புரிந்து செயல்படும் அதிகாரிகளையும் பாராட்டி மகிழ்கிறோம்!

‘‘திராவிடம் வெல்லும் –

வரலாறு என்றும் அதைச் சொல்லும்!’’

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
30.4.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *