அன்பு நெறி, அறநெறி, பகுத்தறிவு நெறி அடிப்படை யில் மானுட உரிமைகளைப் போற்றுவது தான் பவுத்தம். உண்மை எது? உண்மை அல்லாதது எது? என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்!
அரசர் பதவியைத் துறந்தார் சித்தார்த்தர்.
மக்களிடம் சென்றார். மக்கள் மொழியிலேயே பேசினார்.
இதனால் தான் வரலாற்று அறிஞர் அர்னால்ட் டாயின்பீ புத்தரை ‘உலகின் முதல் குடியரசுக் கொள்கை யாளர்’ என்று புகழ்ந்தார்.
கடவுள், மத நம்பிக்கை அற்றவர்கள் அதிகம்
பல நாடுகளில் குறிப்பாக ஆசிய நாடுகளில் பவுத்தம் மக்களால் ஏற்கப்பட்டுப் போற்றப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வியட்நாம் நாட்டில் பயணம் மேற்கொண்டபோது சோசலிச வியட்நாம் அரசு, சுற்றுலாத் தலங்களில் பெரும்பாலான இடங்களில் புத்தரின் புன்னகை நிறைந்த சிலைகளை வைத்துப் போற்றுவதைக் கண்டேன்.
மலைகள், குகைகள், நீரோடைகள் போன்ற பல இடங்களில் புத்த ஆலயங்களை வரலாற்றுத் தலங் களாகப் போற்றி, உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பதற்குச் சிறந்த முறையில் நடவடிக்கைகளை வியட்நாம் அரசு மேற்கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி
10 கோடி மக்கள் தொகையில் 78 விழுக்காடு மக்கள் கடவுள், மத நம்பிக்கைகள் அற்றவர்கள்.
புத்த நெறியைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை
4 விழுக்காடு அளவிற்குத் தான் உள்ளது. மற்ற மதத்தினர் அளவும் இதே நிலையில் தான் உள்ளன.
மதச்சண்டைகள் இல்லை! கொலைவெறிச் செயல் களும் இல்லை.
அமைதியும் மகிழ்ச்சியும் கைகோர்த்து நடை போடுகின்றன.
1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு வியட்நாம், இரண்டு ஏகாதிபத்திய நாடுகளான
பிரான்ஸ் நாட்டையும், அமெரிக்க நாட்டையும் போரில் வென்றது.
இன்று ஆசிய நாடுகளில் அதிக வளர்ச்சியைக் காணும் நாடாக வியட்நாம் உயர்ந்து நிற்கிறது.
அறிஞர் அண்ணா ஹோம் லேண்ட் ஏட்டில் (16.2.1958), பவுத்த நெறி வியட்நாம் நாட்டில் எவ்வாறு பொதுவுடைமை மலர, குறிப்பாக ஹோசிமின் கம்யூனிஸ்ட் போராளியாக மாறுவதற்கு வித்திட்டது என்பதை விளக்கியுள்ளார்.
பவுத்தம் மத, இன வெறியில் முழ்கியது
ஆனால் இலங்கையில் பவுத்தம் தலைகீழாக மாற்றப் பட்டது.
பொதுமைப் பரப்ப வந்த நெறி, மதவெறி கொண்டு இன வெறியில் முடிந்து நிற்கிறது.
பவுத்த நாடு என்று கூறிக் கொண்டே தொல்குடி மக்களான தமிழர்களையும், மற்ற மதப் பிரிவினரையும் கொடுமை செய்வதை உலகமே கண்டது.
மன்னர் அசோகரின் காலத்தில் தான் பவுத்தம் இலங்கைக்குச் சென்றது.
அசோகரின் மகன் மகிந்த, மகள் சங்கமித்ரா இலங்கை பயணம் மேற்கொண்டு பவுத்தம் நிலை பெறுவதற்கு வழிகோலினர் என்று குறிப்பிடப்படுவது உண்டு.
கலிங்கப் போர்
இந்திய மன்னர்களில் அசோகரின் கலிங்கப் போர்தான் மிகவும் கொடூரமானது.
அசோகரின் கல்வெட்டுகளில் போரைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன.
35 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா சென்று கலிங்கப் போர் நினைவுச் சின்னங்களைக் கண்டேன். கலிங்கப் போரில் 1 இலட்சம் வீரர்கள் இறந்து போனார்கள். 1 இலட்சத்து அய்ம்பதாயிரம் பேர் காயம் அடைந்தனர். பல ஆயிரம் பேர் காணாமல் போயினர்.
குருதி குளியலில் பிணத்தின் குவியலில் அசோகர் பவுத்தம் தழுவினார் என்பதை யாரும் மறுக்க இயலாது.
ஆனால் இலங்கையில் பவுத்தம் பல்வேறு மூடநம்பிக்கைகளை இணைத்துக் கொண்டது. கடந்த 77 ஆண்டுகளாக இலங்கை அரசின் அரசியல் பின்னணியில் பவுத்த இனவாதம் செழித்தது.
கலிங்கப் போரின் அசோகரைத்தான் இலங்கையில் ஆட்சி செய்த தலைவர்களிடம் காண முடிந்தது.
அதிபர் திசநாயகாவின் முரண்பாடு
2020ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 22,000 தமிழ் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பவுத்தப் பேரினவாத அரசியல் இலங்கையில் இன்றும் வேரூன்றி நிற்கின்றது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் பவுத்த மத அரசு என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் இருக்கும் இலங்கை அதிபர் திசநாயாகா மதச் சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுவேன் என்று பொது மேடைகளில் கூறுகிறார். ஆனால் பதவியேற்றவுடன் பவுத்தப் பிக்குகளைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.
ஆனால், இலங்கை தன்னை ஒரு பவுத்த அரசு என்று அறிவித்துக் கொண்டு முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது.
அதுவும் அசோகரின் மகன் பெயர் தாங்கிய மகிந்த ராஜபக்ச இந்த இன அழிப்பிற்குக் காரணமானார்.
சிங்கள இன வாதப் புத்த பிக்குகளும் துணை நின்றனர்.
இலங்கையில் புத்தரையும் போற்றவில்லை. கலிங்கப் போருக்குப் பின்பு பவுத்தம் தழுவிய அசோகரையும் பின்பற்றவில்லை.
மூன்று கேள்விகள்
2008 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புத்தமத துறவி தலாய் லாமா ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.
கேள்விகள் கேட்கக் கூடாது என்று கூட்ட அமைப்பாளர் குறிப்பிட்டார்.
அன்றைய துணைவேந்தர் நண்பர் பேராசிரியர் இராமச்சந்திரனின் அனுமதி பெற்று மூன்று கேள்விகளை எழுப்பினேன்.
இனவாதத்திற்கு இன அழிப்பிற்கு பவுத்தம் துணை போகலாமா?
இலங்கையின் தொல் குடியினரான தமிழர்களைக் கொடுமையான முறையில் கொன்று குவித்தபோது புத்த பிக்குகள் ராஜபக்சவிற்கு ஆதரவாகச் செயல்பட்டது புத்த நெறியா?
இந்த இனப்படுகொலையைப் பற்றி பவுத்த அறிஞர் துறவி என்ற முறையில் உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விகளை எழுப்பினேன்.
“இலங்கையில் நடந்ததை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.
சிங்கள இன வாதப் புத்த பிக்குகள் பற்றி அடுத்த புத்த பிக்குகள் மாநாட்டில் உறுதியாக கேள்வி எழுப்புவேன்” என்று புத்தமத துறவி தலாய் லாமா குறிப்பிட்டார்.
புத்த பிக்குகள் யார்?
திசநாயகா ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிங்கள ஊடகவியலாளர் டாக்டர் விபுலா வநிகசேகரா ‘கொழும்பு தந்தி’ என்ற ஏட்டில் (8,அக்டோபர் 2024) ஒரு கட்டுரையில், “புத்தப் பிக்குகள் ஏழை எளிய மக்களின் துயர்களைக் கண்டு கொள்வதே இல்லை. அரசியல்வாதிகளின் பினாமிகளாகச் செயல்படுகின்றனர். அரசியல்வாதிகள் கொடுக்கும் எல்லா வசதிகளையும் பெற்று வருகின்றனர். ஒரு புத்தப் பிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுகளை மட்டுமே பெற்றார். இது போன்ற பல கருத்துகளைப் பட்டியலிட்டு செம்மஞ்சள் நிறத்தின் மகிமையும் மரியாதையும் சரிந்துவிட்டது.” என எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி காலில் விழலாமா?
இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இலங்கை அதிபர் திசநாயகாவுடன் மோடி கலந்துரையாடினார். இப்பயணத்தின் போது புத்த மடங்களுக்குச் சென்று புத்தத் துறவிகளைச் சந்தித்தார். ஒரு புத்தத் துறவியின் காலில் விழுந்து வணங்கினார். அவர் அருகே திசநாயகாவும் நின்று கொண்டிருந்தார். திசநாயகா புத்த பிக்குகளின் நிறம் மாறிய செயல்களை நன்றாகவே புரிந்திருக்கிறார். அதனால் காலைத் தொட்டு வணங்கவில்லை.
உலக மக்கள் தொகையில் முதல் நாடாக மாறிய இந்தியாவின் பிரதமர் மதிப்பும் மரியாதையும் இழந்த இனவாத பவுத்தத் துறவியின் காலில் விழலாமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஒரு நாட்டின் பிரதமர் பின்பற்ற வேண்டிய நடை முறை விதிகள் என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பிரதமர் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை வெளிநாட்டுப் பயணங்களின் போது யார் காலிலும் விழுந்தது இல்லை.
நினைவுக்கு வருகின்ற வள்ளுவர்
“கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா…
பொய்யான சிலபேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்”
மேற்கூறிய கவிஞர் வாலியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன அல்லவா?
அப்படி என்ன முன்னோர்கள் சொன்னார்கள் என்று வாலி நினைத்திருப்பார்?
வள்ளுவர்தான் நினைவுக்கு வருகிறார்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (குறள் – 965)
(மலைபோன்று உயர்ந்தவர்களாக இருந்தாலும், குன்றிமணி அளவுக்குத் தாழ்வான செயல்களைச் செய்வார்களேயானால் அவர்கள் அந்த அளவிலேயே தாழ்ந்து போய்விடுவார்கள் – நாவலர் உரை).