கி.வீரமணி
எதைக் கண்டித்திருக்கின்றேன், எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் – கண்டிக்கவும் – வையவும் – துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது.”
பெரியார் கண்டித்தார்
பயிற்சியாளர்களே! இப்போது யான் மேலே காட்டியிருக்கும் எழுத்துகள் பெரியார் 01.05.1927 இல் நமது பத்திரிகை என்ற தலைப்பிட்டுக் ‘குடிஅரசு’வில் எழுதிய ஆசிரிய உரையின் ஒரு பகுதி. இப்பகுதியில் பெரியார் தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் கண்டித்தவற்றின் பட்டியலைப் போட்டுக் காட்டுகின்றார். பெரியாரின் எல்லையற்ற கட்டுக்கடங்காத பகுத்தறிவின் ஆய்வு, மனித வாழ்வின் முழுமையிலுமாக எச்சம் சொச்சம் இல்லாமல் பாய்ந்து, ஒவ்வொன்றின் இயல்பையும் துருவித் துருவி, அவற்றின் உண்மை இயல்புகளைக் கண்டிக்கின்றது என்பது நன்கு புரிகின்றது. எவை எவற்றைப் பெரியார் கண்டித்தார் என்பதை நாம் சுருக்கமாக ஒரு பட்டியல் போட்டுப் பார்ப்போம்.
1) அரசியல் இயக்கம் 2) அரசியல் தலைவர்கள், 3) மதம், 4) மதத்தலைவர்கள், மற்றும் மதச்சடங்குகள், 5) குருக்கள், 6) கோவில், 7) சாமி, 8) வேதம், 9) சாத்திரம், 10) புராணம், 11) பார்ப்பனியம், 12) ஜாதி, 13) அரசாங்கம், 14) உத்தியோகம், 15) நீதிமன்றம், 16) நீதிமன்ற நடுவர், 17) ஆட்சிக்கு உதவும் அலுவலகங்கள் 18) மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறை, 19) தேர்தல், 20) கல்வி, 21) சுயராஜ்ஜியம், 22) காங்கிரசில் தன்னைப்போல வேலை செய்த உற்ற நண்பர்கள்.
மக்கள் வாழ்விற்கு நன்மை கொடுக்கக்கூடியவை
அன்புள்ள நண்பர்களே! இந்த இருபத்திரண்டு பிரிவுகளும் ஒன்றாகச் சேர்ந்தது தான் தமிழக வாழ்வு அல்லது இந்திய வாழ்வு. பெரியார் பட்டியல் போட்டுக் காட்டிய இருபத்திரண்டு கூறுகளைத் தவிரப் பிறிதொரு பிரிவை நீங்கள் சொல்லிவிட முடியாது. அப்படி ஏதாவதொன்றை நீங்கள் எண்ணினாலும் அது அவர் எடுத்துக்காட்டிய பிரிவுகள் ஒன்றில் அடங்குவதைக் காணலாம். ஆகப் பெரியாரின் ஆய்வுக்குப் பொருளாய் நின்றவை மனித வாழ்வின் முழுமை என்று சுருக்கமாகக் கூறலாம். இந்த இருபத்திரண்டு பிரிவுகளில் பெரும்பாலானவற்றின் நடைமுறைகள் மக்கள் வாழ்விற்கு நன்மை கொடுக்கக்கூடியவை என்று பெரியவர்களால் உறுதி செய்யப்பட்டு கோடானுகோடி மக்களால் நம்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளால் பல்லாயிரம் ஆண்டுகளாய் நடந்து வருபவை.
பழைமையானது என்று ஒன்றை எண்ணும்போதே நம்மவருக்கு வழி வழியாகத் தோன்றும் எண்ணம் என்ன? அது உயர்ந்தது – சிறந்ததாகத் தான் இருக்க முடியும். ஆகவே அது எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றுதான் தோன்றும். அவற்றில் கொஞ்சமும் மாற்றம் கூடாது என்பவர்களே மிகுதி. அவ்வப்போது பழைமையானவற்றில் சில பல மாற்றங்கள் வேண்டும் என்று வற்புறுத்தியவர்கள் உண்டு, அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். அவர்கள் சொல்லிப்போன கருத்துகள் ஒதுக்கப்பட்டன. அல்லது வேறு வகையில் விரிவுரைகள் செய்து மாற்றப்பட்டன. பழைமையானவை பற்றிய பெரியாருடைய எண்ணம், கருத்து புதுமையானது புரட்சியானது.
புதுமையானது – புரட்சியானது
“ஒரு பொருள் அல்லது ஒரு கருத்து எவ்வளவு பழைமை உடையது என்று சொல்கின்றோமோ, அந்த அளவுக்கு அது சீர்திருத்தப்பட வேண்டியதாக இருக்கும் என்பது அதனுடைய தத்துவமாகும்.”
இதுதான் பெரியார் சிந்தனை, தமிழ் மொழியினுடைய பழைமையைப் பற்றி எழுதும்போது இக்கருத்துப்பட பெரியார் தெளிவாக எழுதியுள்ளார். பெரியார் மேற்காட்டிய இருபத்திரண்டு பிரிவுகளையும் ஆய்வு செய்த முறையும் புதுமையானது – புரட்சியானது. மேற்காட்டிய இருபத்திரண்டைப் பற்றிக் காலம் காலமாக எழுதப்பட்ட நூல்களையோ, அவற்றின் விரிவுரைகளையோ அடிப்படையாகக் கொண்டு பெரியார் ஆய்வு செய்யவில்லை. அப்படி ஆய்வு செய்தால் ஒரு மனிதனுடைய ஆய்வு போதாது. மேலும் எந்தத் தவறான கருத்துக்கும், பழக்கத்துக்கும் நல்லவைப் போல அவற்றுக்கு விரிவுரை செய்து குழப்பியிருப்பார்கள். அருமையான ஒரு நடைமுறை உவமையைச் சொல்லித் தம் கருத்தைப் பெரியார் விளக்குவார்.
“ஒரு கடுதாசியில் சர்க்கரை என்று எழுதிவிட்டு
அதனை நக்கினால் இனிக்குமா?”
என்று பளிச்சென – யாருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ள செய்திகளை முழுமையாக நம்பமுடியாது என்று பெரியார் எடுத்துக்காட்டியுள்ளார். ஆதலால் எழுதி இருப்பவைகளைப் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளாமல் அவற்றின் நடைமுறையில் உள்ள தன்மைகள், அல்லது அவற்றால் நடைமுறையில் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ற அளவில் தம்முடைய ஆய்வை அமைத்துக் கொண்டு அதே வேலையாக பேசினார் – எழுதினார்.
சீர்திருத்த முயன்றவர்கள்
ஏன் தோற்றார்கள்?
ஏன் தோற்றார்கள்?
இந்நாட்டில் பெரும்பாலான மக்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி நடத்தப்பட்டு வந்த நடைமுறைகள் அவ்வளவும் மக்களைப் பலவகையில் பிளவுப்படுத்தி, மிகப்பெரும்பான்மையான மக்களை மிகச் சிறுபான்மையினரான பார்ப்பன இனத்தவருக்கு வழி வழி அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள கொடுமைகளைக் கண்டார். இதற்கான அடித்தளங்கள் அவ்வளவும் சீர்திருத்த முடியாத அளவுக்கு மதம் என்றும், கடவுள் என்றும், சாத்திரம் என்றும், புராணம் என்றும், பழக்கம் என்றும், வழக்கம் என்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக வலுப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். இவற்றைப் பல காலங்களில் சீர்திருத்த முயன்றவர்கள் ஏன் தோற்றார்கள் என்பதையும் கண்டார். முழுமையாக இவற்றின் புரட்டுக்களை ஒழிக்க வேண்டுமெனப் பேசினார், எழுதினார்.
நீண்ட காலக் கொடுமைகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று எழுதுவதற்கும், பேசுவதற்கும் வேண்டிய வாய்ப்பு வசதிகள் தந்தை பெரியாரிடம் இயல்பாக அமைந்திருந்தன. முதலில் அவர் படித்தவராக இல்லை. படித்தவராக இருந்திருந்தால் தாம் படித்தவற்றைத் திறம்படத் திருப்பிச் சொல்லும் இயல்பைப் பெற்றிருப்பார். இந்த நாட்டில் படித்தவர்கள் தங்கள் பேச்சு நடைமுறைகள் இவற்றைப் பெரும்பாலான மக்களினின்றும் பிரித்துக் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். படித்தவர்கள் பாமர மக்களினின்றும் விலகினர். இந்த நாட்டில் படிப்பு என்பது உண்மை ஆகிய வாழ்வியல்புகளைப் பற்றியதாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இல்லை. உலகியலுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளையே படிப்பாக்கிப் பாட்டாக்கி – இலக்கியமாக்கி அவற்றைப் பயிலுவதையே தமக்கு வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
தந்தை பெரியார் முழுக்க முழுக்க
உலகியலைப் பேசினார்
உலகியலைப் பேசினார்
தந்தை பெரியார் முழுக்க முழுக்க உலகியலைப் பேசினார். உலகியலையே எழுதினார். கடவுளையோ – மதத்தையோ – சாத்திரத்தையோ எதைப் பேசினாலும், எழுதினாலும் உலகியலுக்குக் கொண்டு வந்து பேசினார். இவர் பேச்சு பாமர மக்கள் மொழியில் அவர்களுக்குப் புரியும் தன்மையில் அமைந்திருந்தது. இத்தகைய பேச்சு வன்மையும், எழுத்துவன்மையும் எல்லோரையும் கவர்ந்தது. அவர் தன்முனைப்போடு எதையும் சொல்லவோ – எழுதவோ மாட்டார். தாம் சொல்லும் கருத்துக்கு அல்லது வழி முறைகளுக்கு மாற்றாகப் பொருந்தும் வகையில் யார் சொன்னாலும், எழுதினாலும் தலை வணங்கி ஏற்றுக் கொள்வதாகக் கூறுவார். ‘நான் கூறுவதையோ – எழுதுவதையோ நீங்களெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் அறிவிருக்கின்றது. பகுத்தறியும் ஆற்றல் இருக்கின்றது. சிந்தித்துப் பார்த்து நல்லவையாகப் பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; நல்லவையாகப் படவில்லையானால் தள்ளிவிடுங்கள்’ என்று தான் பேசுவார் அல்லது எழுதுவார்.
இன்னொரு செருப்பையும் போடு
எதிர்ப்பு என்றால் யாருக்கும் அச்சம் தான் வரும். பெரியாருக்கு அச்சமே வராது. எவ்வளவு எதிர்ப்பு இருக்கின்றதோ, அந்த எதிர்ப்பு முழுவதையும் தம் கருத்துக்கு உரமாக்கிக் கொள்ளுவார். ஒரு நிகழ்ச்சியைக் கூறுகின்றேன். கடலூரில் பெரியார் பேசிவிட்டு விரைவாகத் தொடர் வண்டி நிலையத்துக்கு ஆள் இழுக்கும் ஒரு ரிக்ஷாவில் ஏறிச் சென்றார். செல்லும் வழியில் ஒருவன் மறைந்து நின்று கொண்டு கால் செருப்பொன்றை எடுத்துப் பெரியார் மீது வீசுகின்றான். செருப்பு வண்டியில் வந்து வேகமாக விழுகின்றது. இச்சூழ்நிலையில் பொதுவாக மனிதர்கள் யாராக இருந்தாலும் என்ன எண்ணுவார்கள். உடனே அந்த இடத்தை விட்டு வேகமாகச் செல்லுவதையே விரும்புவார்கள். இங்குத் தாமதித்தால் மேலும் என்னென்னவெல்லாம் நிகழுமோ? என்று தான் எண்ணத் தோன்றும். இது தான் உலகியல். பெரியார் என்ன செய்தார்? முன்னோக்கிச் சென்ற வண்டியைப் பின்நோக்கித் தள்ளச் செய்தார். அவர் சொன்னார், “அடே! ஒரு செருப்பை என் மீது எறிந்து விட்டாய்! இந்த ஒரு செருப்பால் எனக்குப் பயனில்லை”. இன்னொரு செருப்பையும் போடு என்று கேட்பதுபோல! கடலூரில் பெரியார் மீது செருப்பு வீசிய அதே இடத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துள்ளார்கள். கவிஞர் கருணானந்தம் ‘செருப்பொன்று வீசினால், சிலையொன்று முளைக்கும்’ என்று கவிதையும் எழுதி உள்ளார்.
தந்தை பெரியாருடைய கண்டனத்துக்கு ஆட்படாத தமிழரின் வாழ்வு முறைகள் ஒன்று கூட இல்லை. இக்கருத்தைப் பெரியார் எவ்வளவு நகைச்சுவைப்பட எழுதுகிறார் பாருங்கள்.
யாரை வையவில்லை என்பது
ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது
ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது
“எதைக் கண்டித்திருக்கின்றேன். யாரை வையவில்லை என்பது ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது. இன்னும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கின்றது.”
இவ்வளவையும் பெரியார் கண்டிப்பானேன்? இதில் அவருக்கு எந்த வகையான சுயநலமும் இல்லை. இவற்றைக் கண்டிப்பதன் வாயிலாகப் பணம் – பதவி முதலியன சம்பாதிக்கவா? இல்லை. பணமும், பதவிகளும் அக்கால நிலையில் போதுமான அளவுக்குப் பெரியாரிடம் இருந்தன.
விஜயராகவாச்சாரியார்
பணமே குறி என்றால் ஆண்டுக்கு இருபது ஆயிரம் வருமானம் வரும் வணிகத்தை விட்டிருப்பாரா? காங்கிரசில் கோர்ட்டுக்குப் போகக் கூடாது என்ற கொள்கைக்காகத் தமக்கு வரவேண்டிய அய்ம்பதாயிரம் ரூபாய்களை இழக்கத் துணிவாரா? பெரியார் இழக்க இருந்த பெரிய தொகையைக் கண்டு வியந்து நின்ற சேலம் விஜயராகவாச்சாரியார் ஒன்று சொன்னார். இவர் அக்காலத்தில் காங்கிரசில் தென்னாட்டில் இருந்த பெரிய தலைவர்கள் சிலரில் (அவரும்) ஒருவர். வழக்குரைஞர். காங்கிரசின் கொள்கைப்படி நீங்கள் கோர்ட்டுக்குப் போக வேண்டாம். அந்தப் பெரிய தொகையை நான் பெற்றுக் கொள்ளும் வகையில் எனக்கு மாற்றிக் கொடுங்கள் (Made Over) நான் கோர்ட்டில் வழக்காடி அந்தத் தொகையைப் பெற்றுக் காங்கிரசில் சேர்த்து விடுகின்றேன் என்று சொன்னார். இதற்குப் பெரியார் என்ன சொன்னார் தெரியுமா?
“எனக்கு வரவேண்டிய தொகைக்காக நான் கோர்ட்டுக்குப் போய் வாதிட்டு வாங்கிக் கொள்வதும், எனக்காக நீங்கள் கோர்ட்டுக்குப் போய் வாதாடி வாங்கிக் கொள்வதும் இரண்டும் ஒன்று தான். வேறுபாடில்லை. ஆகவே இது கூடாது”.
என்ற கருத்துபடச் சொல்லி மறுத்துவிட்டார் என்று அறிகின்றோம். இது அக்காலத்தில் பெரிய பரபரப்புக்குரிய செய்தி. இந்தத் தொகை என்பது அக்காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். இச்செய்தி பெரியதாகப் பேசப்பட்ட அக்காலத்தில், இலால்குடியில் உள்ள பரமசிவம் என்பவர் இது உண்மைதானா? என்று சேலம் விஜயராகவாச்சாரியாருக்கே எழுதிக் கேட்டார். அவர் பதில் எழுதினார். என்ன எழுதினார், ‘உண்மைதான்’ என்று மட்டும் எழுதவில்லை. ஆனால் என்ன எழுதினார்.
“நாயக்கர் சம்பந்தமாக நீங்கள் இப்படிக் கேட்டது வியப்பாக இருக்கின்றது”.
என்னும் கருத்துப்பட எழுதினார். இது எதைக் காட்டுகின்றது? பெரியாருடைய உண்மையோடு கூடிய பொது வாழ்வின் மேன்மையைக் காட்டுகின்றது, பொது வாழ்வென்றால் இக்காலத்தில் – பொதுப் பணத்தைப் பல வகையில் கொள்ளையடிப்பவரைத் தான் நம்மால் காண முடிகின்றது.
ஆனால், பெரியார் இக்காலத்தார் போலப் பதவி பெறவும், பணம் சேர்க்கவும், புகழ் பெறவும் ஆசை வைக்காமல் நூற்றுக்கு நூறு பங்கும் தன்னலத்தை அறவே மறந்து, இந்த நாட்டில் வாழும் கோடானு கோடி மக்களின் அறியாமையும் – வறுமையும் – மூடப்பழக்கவழக்கங்களும் நிறைந்த வாழ்வியலைக் கண்டு இவற்றை அடியோடு போக்கிவிட வேண்டுமென்ற தம்முடைய உள்ளத்தில் எழுந்த வேக உணர்வால் உந்தப்பட்டு, வாழ்வுத் துறைகள் முழுவதையுமே கண்டித்தார் என்ற உண்மையை நாம் நன்குணர வேண்டும்“ என்று கூறுகிறார்.
(பெரியாரியல் தொகுதி-2)
(தொடரும்)