கானாடுகாத்தான் வை.சு. சண்முகனார் அவர்களால் ‘ஞானசூரியன்’ நூல் 1927ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டவுடனேயே அதுகுறித்து வைதீகபுரி அலற ஆரம்பித்து விட்டது. அந்நூலின்மீது புகார் அளித்தது, அதன் பேரில் விசாரணை நடந்தது தொடர்பான செய்திகள் இதோ:
‘‘ராமநாதபுரம் ஜில்லாக் கலெக்டர் கனம் மாக்வீன் அவர்களிடமிருந்து ‘ஞானசூரியன்’ நூல்பற்றி தேவக் கோட்டை சப்டிவிஷனல் ஆபீசருக்கு ஒரு ரிப்போர்ட் வந்திருக்கிறது. அதாவது:–
Ref புத்தக விஷயமாக
சிவானந்த சரஸ்வதியால் எழுதப்பட்டு, காரைக்குடி ஊழியன் அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்ட ‘ஞானசூரியன்’ என்ற புத்தகம்.
மேற்குறித்த ‘ஞானசூரியன்’ புத்தகம் (கானாடு காத்தான் வயிசு. ஷண்முகஞ் செட்டியாரால் காரைக்குடி ஊழியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.) அதன் பிரதி ஒன்று இத்துடன் வருகிறது. ௸ புத்த கத்தைப் படித்துப் பார்த்ததில் விளக்கமில்லாத பாைஷ அதில் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. (குறிப்பிட்ட பக்கங்களுக்கு நகல் இத்துடன் வருகிறது). அதோடு அந்தப் புத்தகம் பொது ஜனங்களிடையில் அடிப்படையான பகைமையும் உண்டாக்கக் கூடியதாகவுமிருப்பதாகத் தெரிகிறது. அச்சிட்டோரிடமும் வெளியிட்டோரிடமும் காரணங் கேட்டு குறிப்புடன் (Remarks உடன்) அனுப்பி வைக்கவும்.
விளக்கமில்லாத பாஷைகள் கண்டுள்ள பக்கங்கள் 66, 67, 87, 88, 115, 116, 118, 119.
மேற்குறிப்பிட்ட ரிபோர்ட்டுக்குக் காரணம் கூறும்படி திருப்பத்தூர் மாஜிஸ்ட் ரேட்டிடமிருந்துவந்த சமனுக்கு ஆஜராகி திரு. வயிசு.ஷண்முகம் செட்டியாரவர்களால் எழுதிக்கொடுத்த (Explanation) சமாதானம் வருமாறு:-
தங்கள் முன் ஆஜராகும்படி நேற்று என க்கு கிடைத்த சமனுக்கு நான் தங்களிடம் நேற்று ஆஜராகி நேரில் தாங்கள் கூறியபடி சமனில்கண்ட “ஞான சூரியன்” என்ற புத்தக சம்மந்தமாக இந்த விபரம் தங்கட்கும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
புத்தகத்தினுடைய நோக்கம் எந்தவிதமான பகைமையும் வைத்ததில்லை. மலையாளத்தில் பிறந்து சமஸ்கிருத பயிற்சிபெற்ற சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ற ஒரு சந்நியாசியால் எழுதப்பட்ட தனியான ஆராய்ச்சி நூல் இது. அவர் சமஸ்கிருதத்திலும், மலையா ளத்திலும் மிக்க பழக்கமுள்ளவர், அவர் வடநாட்டில் படிப்பை அபிவிர்த்தி செய்து கொண்டவர், ஆகையால் தமிழ்பாஷையில் அவருக்கு சிறு பழக்கமே உண்டு
அப்புத்தகத்தின் எண் 67,68 ஆவது பக்கங்களில் கண்டுள்ள விஷயங்கள் ௸ ஆசிரியர் ராமாயணத்தை ஆராய்ச்சி செய்து அஃதினின்று கீழ்கண்ட தன்னுடைய அபிப்பிராயத்தை யெழுதியிருக்கிறார். அதாவது:
ஆரியர்கள், மதசம்மந்தமான ஆத்திரங் கொண்டு திராவிடர்களை வானரங்களென்றும், வானரப் படைகளென்றும் யாகம் முதலிய சடங்குகளை நடத்துவதற்கு விரோதமாகவும், நடத்தவொட்டாமல் தடுக்க வல்லமையுள்ளவர்களாகவுமி ருந்தவர்களை ராக்ஷசர்களென்றும், சொல்லி யிருக்கிறார்களென்று எழுதியிருக்கிறார். 87, 88, 115, 116, 117, 118, 119, பக்கங்களிலுள்ள விஷயங்கள் மற்றய ஸமஸ்கிருத புஸ்தகங்களிலுள்ள ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பு என்று ௸ ஆசிரியர் கூறி ஆங்காங்கு அந்ததந்தஸ்லோகங்களைத் தமிழ் எழுத்தால் எழுதியுமிருக்கிறார். அந்தப் பக்கங்களில் யாதொரு விதமான விளக்கமில்லா த வார்த்தையாவது சமாசாரமாவது கிைடயாது.
எந்த வகையிலும், மத சம்பந்தமாகவும், ஜனச்சார சீர்திருத்த சம்மந்தமாகவும் முன்னேற்றமடைய வேண்டுமென்ற தனி நோக்கத்துடனேதான் ஆக்கியோன் கோரிக்கை கிணங்க நான் அப்புத்தகம் வெளிவருவதற்கு உதவி செய்தேன். வேறெவ்விதமான விரோத உணர்ச்சியும் எனக்கில்லை.’’
(குடிஅரசு – 16.12.1928)
என்று தன்னிலை விளக்கத்தைத் தந்த பிறகே அந்நூல் வெளியீடாக்கப்பட்டு நாடு முழுவதும் பரப்பப்பட்டது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே சமூக மாற்றம் பற்றி பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆதாரங்களோடு எழுதினால் பார்ப்பனர் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். அதனை எப்படி சுயமரியாதை இயக்கம் எதிர் கொண்டு முறியடித்தது? என்பவை இளைய தலைமுறையும் புத்தக ஆய்வாளர்களும் அறிய வேண்டிய அரிய தகவல்கள் ஆகும்.
‘ஞானசூரியன்’ வெளிவந்தவுடன், குடிஅரசு இதழில் அதுபற்றி அறிமுகம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:
‘‘ஞானசூரியன் என்ற புத்தகம் கானாடுகாத்தான் திருவாளர் வயிசு சண்முகம் செட்டியார் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சுவாமி சிவாநந்த சரஸ் வதி அவர்களால் எழுதப்பட்டது. இது முழுதும் ஆரியர்களின் வேதம், சாஸ்திரம், புராணம், சாமி என்பவைகளின் புரட்டுகளை வெளியாக்கும் கருத்துக் கொண்டே எழுதப்பட்டதாகும். இதில், பெரும்பாலும் வேதத்திலும் மற்றும் பல ஆரிய ஆதாரங்களிலும் உள்ள சுலோகங்களை எடுத்து எழுதி அவைகளுக்கு ஏற்பட்ட பொருள்களையும் எழுதி அப்படி ஏன் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டு நம்மை நம்பச் செய்து வருகிறார்கள் என்பதற்கு உள்ள அவ்வாரியர்களின் சூழ்ச்சியும் கெட்ட எண்ணமும் சுயநலமும் பளிங்கு போல் வெளியாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வுரைகளை மெய்ப்பிக்க ஞான சூரியன் என்னும் இப்புத்தகத்திற்கு அபிப்பிராயம் கொடுத்த பல அறிஞர்களில் சிலராகிய திருவாளர்கள் சுவாமி வேதாசலம், கா. சுப்பிரமணிய பிள்ளை, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, முத்து நாடார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஆகியோர்களின் அபிப்பிரயங்களும் திருவாளர் கண்ணப்பர் அவர்களின் முகவுரையுமே போதுமானதாகும். எனவே சற்று தயவும் பொறுமையும் கூர்ந்து இவற்றை நோக்குவார்களானால் இப்புத்தகத்தின் தன்மையும் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பயனும் தானாகவே விளங்கும்.
‘ஞானசாகரம்’ பத்திராதிபர், சுவாமி வேதாசலம் அவர்கள்
எழுதுவதின் சாரம்:
வடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப்பார்ப்பனர் உயர்த் துரைக்கும் மயக்குரை களில் வீழ்ந்து அவற்றைக் குருட்டுதனமாய்ப் பாராட் டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் அம்மயக்க இருளை ஒட்டி வடநூல்களின் ஊழலும், அவற்றின் கண் தமிழ் மக்களைப் பாழாக்குதற்குப் பார்ப்பனர் எழுதி வைத் திருக்கும் பொய் மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந்திறத்தது, இஞ்ஞான சூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை. வட நூல்களிலிருந்து இதன் கண் எடுத்துக்காட்டியிருக்கும் மேற்கோள்களும் அவற்றிற் கெழுதியிருக்குந் தமிழு ரைகளும் முற்றிலும் உண்மையென்பதில் அய்யமில்லை. இந்நூல் உண்மைப் பொருள் வாய்ந்தது.
(பல்லாவரம், 7.10.1927).
திருவாளர் கா. சுப்பிரமணியபிள்ளை M.A., M.L. Advacate அவர்கள் எழுதுவதின் சுருக்கம்:
தமிழ் மக்கள் இப்பொ ழுதுள்ள வடமொழி வேதாகமங்கள் இன்ன தன்மையனவென அறிந்து கொள்ளுவதற்கு இந்நூல் பெரியதோர் ஒளிகாட்டியாக திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்மனோர்கள் விடுதலை அடைவதற்கு இந்நூல் தலை சிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ்கின்றேன்.
(சென்னை, 24.10.1927)
‘‘நாடார் குல மித்திரன் பத்திராதிபர்
திருவாளர் சு.ஆ. முத்துநாடார் அவர்கள் எழுதுவது:
பொல்லாப் புரோகிதர்கள் கொடுமை வாய்ப்பட்டு அடிமை வாழ்க்கையிலிருந்தும் நாட்டை விடுதலை மார்க்கத்திற்கு கொண்டு சேர்க்கக் கூடிய ஞான சூரியனை நம் தமிழ்நாடு நன்றியுடன் வரவேற்கும்.
இன்னும் இந்திய நாட்டைப் பற்றி மிக இழிவுபட ஓர் நூல் எழுதிய அமெரிக்க தேசத்து மேயோ என்ற மாது போன்ற பல ஆரியமேயோக்கள் எழுதி வைத்திருக்கும் குப்பை வேதங்களையும் சாக்கிடை சாஸ்திரங்களையும், சுட்டுப் பொசுக்கி மக்கள் மனமயக்கத்தைத் தீர்க்கும் வழி திறக்கப்படுவதற்கு பல ஞான சூரியர்கள் உதயமாக வேண்டும். வேதம், வேதம் என்று பன்னூற்றாண்டுகளாக மக்களை மோசம் பண்ணி வந்த – வருகிற பாதகத்தை பக்ஷபாதமின்றி, வெளியிட்ட சிவானந்த சுவாமிகளுக்கும் அச்சுவாகனமேற்ற அன்புடன் பொருளுதவி செய்த ஸ்ரீமான் வயிசு ஷண்முகஞ் செட்டியாரவர்களுக்கும் நம் மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறோம்.
ஈரோடு குடிஅரசு பத்திரிகை எழுதுவதாவது:
இப்புத்தகமானது தமிழ்நாட்டு மக்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டியவைகளில் ஒன்று என்றே சொல்வோம். இதைப் படித்துப் பார்த்தால் வேதம் என்று சொல்வதில் உள்ள ஆபாசங்கள் வெளியாவதுடன் வேதத்தை ஒரு வகுப்பார் தவிர மற்ற வகுப்பார் படிக்கக் கூடாது என்று ஆதியிலிருந்தே பார்ப்பனர்கள் ஏன் சூழ்ச்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமியவர்கள் வேதத்திலுள்ள சுலோகங்களையும், மற்றும் வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சமஸ்கிருத நீதி நூல்கள் என்பவைகளிலுள்ள சுலோகங்களையும் எடுத்து எழுதி அதற்கு அர்த்தம் எழுதியிருப்பதுடன், ஆரியர்களான பார்ப்பனர் களின் சுயநலத்தையும், அநாகரீகத்தையும் அவர் களது காட்டுமிராண்டித்தனத்தையும் நன்றாய் விளக்கி யிருக்கின்றார்.
இப்புத்தகத்தை ஒரு தடவை வாசித்துப் பார்த்தவன், நேருக்கு நேரே விமானம் வந்துதன்னைக் கூட்டோடு, மோக்ஷ லோகத்திற்கு அழைத்துக் கொண்டு போவதானாலும் தான் இந்து வென்றோ வேதத்தையும் ஸ்மிருதிகளையும் நம்புபவன் என்றோ சொல்லிக் கொள்ள கடுகளவும் சம்மதிக்கமாட்டான். எனவே உண்மையான தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை ஒரு தடவை படித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
(‘குடிஅரசு’ அநுபந்தம் 22.1.1928)
திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (வக்கீல்) அவர்கள் எழுதுவது
“ஞானசூரியன்” கூறும் பொருள்களை நோக் குங்கால் “ஞான சூரியன்” ஞானசூரியன் என ஆண்பாலாற் கூறுதல் தகுதியேயாம்.
அவன் வடமொழி வேதங்களிலும் மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியா கமம் முதலியவற்றி லுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக் கூறிப் பொரு ளுரைத்துப் பொருத்தமான கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும் சாதிக் கோட்பாடுகளையும், கொடுமை களையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலியவற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப் பாராயின், அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார்.
பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலிய வற்றிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான். தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர் மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.
பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமணரல்லாதார் களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர்களையும், பூசாரிகளை யும் விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.
“இந்து சமயம்” என்பதன் பொய்களையும், புரட்டுகளையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லாதார்கள் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கை களினின்றும், தாழ்வினின்றும், பிராம ணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்குகின்றான்.
வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும், ‘ஞான சூரியன்’ கிரணங் களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி ஆகமங் களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சில வற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.
சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ‘ஞான சூரியன்’ கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான் ‘ஞான சூரியன்’ – தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்ப பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
கோயிற்பட்டி, வ.உ.சிதம்பரம்பிள்ளை
7.10.1927
(வ.உ.சி.யின் அறிமுகம் ‘ஞானசூரியன்’ முதல் பதிப்பிலேயே வெளி வந்துள்ளது.)
(தொடரும்)