சோவியத் ரஷ்யாவில் இருந்ததுபோன்று, மதத்தை எதிர்த்துப் பேச உரிமையில்லை!
வலதுசாரிகள் மதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள்
தென் அமெரிக்க நாடுகளில், வலதுசாரிகள் வீழ்த்தப்பட்டு, இடதுசாரிகள் வருகிறார்கள்!
ஆஸ்திரேலியா, ஏப்.28 சோவியத் ரஷ்யாவில் இருந்தது போன்று, மதத்தை எதிர்த்துப் பேச உரிமையில்லை! வலதுசாரிகள் மதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள்; தென் அமெரிக்கா போன்ற நாடுகளில், இப்போது வலதுசாரிகள் வீழ்த்தப்பட்டு, இடதுசாரிகள் வருகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆஸ்திரேலிய
தமிழ்த் தொலைக்காட்சிக்குத்
தமிழர் தலைவரின் நேர்காணல்
தமிழ்த் தொலைக்காட்சிக்குத்
தமிழர் தலைவரின் நேர்காணல்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய தமிழ்த் தொலைக்காட்சியின் நெறியாளர் திருமதி.ராதிகா நேர்காணல் கண்டார்.
அந்நேர்காணலின் விவரம் வருமாறு:
நெறியாளர் ராதிகா பந்த்லி: ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இங்கே வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினருக்கு அறிமுகமே தேவையில்லை.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய தொண்டை தவிர்த்து தமிழ்நாட்டு வரலாற்றை எழுத முடியாது!
இந்திய வரலாறு, குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை எழுத ஆரம்பித்தோம் என்றால், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய தொண்டைத் தவிர்த்து நாம் எழுதவே முடியாது.
ஏனென்றால், கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சுயமரியாதை மற்றும் சமூகநீதிக்கான போராட்டங்களை இன்றும் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்.
தந்தை பெரியாருடைய கொள்கை வாரிசும், திராவிடர் கழகத்தின் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இங்கே (ஆஸ்திரேலியா) வந்திருக்கின்றார்.
பெரியார் – அம்பேத்கர்
சிந்தனை வட்டம்!
சிந்தனை வட்டம்!
சுயமரியாதை இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழாவிற்காக பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பாக ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து கொண்டிருக்கின்றார். அவரை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வணக்கம் அய்யா!
தமிழர் தலைவர்: வணக்கம்!
வலது சாரி கருத்துகளோடு இருப்பதற்கு
என்ன காரணம்?
என்ன காரணம்?
நெறியாளர்: என்னுடைய முதல் கேள்வி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் முழுவதுமாக ஓர் இடதுசாரி அரசியல் வலுவாக இருந்தது. அய்க்கிய நாடுகள், உலக வங்கி என பல அமைப்புகளை ஆரம்பித்தார்கள்.
ஆனால், சமீப காலமாக அரசியல் வலதுசாரிக்கு சார்பாக மாறிக்கொண்டே வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கான நாட்டம் வலது சாரி கருத்துகளோடு இருப்பதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
நீங்கள், ஒரு வழக்குரைஞர், பொருளாதார நிபு ணர், அரசியல் அனுபவம் உடையவர். இந்தப் பன்முகத்தன்மையோடு இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மிகப்பெரிய அளவிலே திட்டங்களை வகுத்தார்கள்!
தமிழர் தலைவர்: அடிப்படையில் ஆதிக்கவாதிகள், ஏற்கெனவே தாங்கள் பிடிமானமாக, எதை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினார்களோ, அந்த ஆதிக்கத்திற்கு, இடதுசாரிகள் பலம் பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், இடையில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டது அதை வீழ்த்தவேண்டும் என்பதற்காக, மிகப்பெரிய அளவிலே திட்டங்களை வகுத்தார்கள்.
பளிச்சென்று சொல்லவேண்டுமானால், முதன்முத லில் அவர்களுடைய குறி, பனிப்போர் நடந்த காலத்தில், மிக முக்கியமான அளவிற்குக் கவனம் பதித்த நாடு சோவியத் ரஷ்யா.
முதலாளித்துவ நாடுகள், வலதுசாரி கருத்துள்ளவர்கள் ஒன்றுதிரண்டு திட்டமிட்டார்கள்!
யூனின் ஆஃப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் என்று சொல்லக்கூடிய யுஎஸ்எஸ்ஆர் – நாட்டினுடைய வரலாறு – அந்த மக்கள் – குறிப்பாக லெனின் தொடங்கி, ஸ்டாலின் அதை வலுப்படுத்தி, உலகம் முழு வதும் அந்தக் கருத்துகள் பரவத் தொடங்கியவுடன், எங்கே ஆங்காங்கு ஆட்சிகளை அமைத்துவிடுமோ என்பதற்காக – ஒரு பெரிய கூட்டு முயற்சியோடு – முதலாளித்துவ நாடுகள், வலதுசாரி கருத்துள்ளவர்கள் ஒன்றுதிரண்டு திட்டமிட்டார்கள்.
இடதுசாரிகள் அல்லாத நிலையை உருவாக்குவதற்கு போப் அவர்களைத்தான் பயன்படுத்தினார்கள்!
அதில் குறிப்பாக, சோவியத் ரஷ்யாவை வீழ்த்த வேண்டும். அதன்மூலமாக, முக்கியமான கல்லை நகர்த்தினால், வலதுசாரிகளுடைய ஆதிக்கம் ஏற்படு வதற்கோ அல்லது ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டு, இடதுசாரிகள் அல்லாத நிலையை உருவாக்குவதற்கோ வாய்ப்பு ஏற்படும் என்று அவர்கள் நினைத்து, யாரை இதற்குத் துணை கொண்டார்கள் என்ற வரலாற்றை நான் சொல்கிறேன், அதற்கு ஆதாரமான நூலையும் பின்னால் சொல்கிறேன். அங்கே முக்கியமாக பழைய போப் அவர்களைத்தான் பயன்படுத்தினார்கள்.
அதுவரையில், கிறித்துவக் கோவிலுக்கு மக்கள் போவதற்குத் தயாராக இல்லை. அப்படி இருந்த காலகட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மதத்தைப் பரப்புவது என்ற வகையில், மக்களிடையே ஊடுருவல் மூலமாக அதை அவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதிருப்தியோ, மனக்குறைவோ ஏற்படுவது இயல்பு!
அடுத்தகட்டமாக கோர்ப்பச்சேவ் போன்றவர்களைத் தயார் செய்தார்கள்.
எந்த ஆட்சியும் நீண்ட காலமாக இருந்தால், அங்கே அதிருப்தியோ, மனக்குறைவோ ஏற்படுவது இயல்பு, அன்றாட வாழ்க்கையில்.
சில நேரங்களில் மாறுகின்ற பொருளாதார விதிகளினால் விலைவாசி ஏற்றம் இருக்கும்; வேலை வாய்ப்புக் குறைவு இருக்கும். இப்படி பல விஷயங்கள் இருக்கும்.
அப்படி வருகையில், அதை அடிப்படையாக வைத்து கொஞ்சம் கொஞ்சமாக, அதிருப்தி கிரகங்களை ஒன்று திரட்டினார்கள்.
அதற்கடுத்ததாக, நேரிடையாக போப் அவர்களை அழைத்து, கோர்ப்பச்சேவைச் சந்திக்கச் செய்து, அந்த இரட்டையர்களைக் கொண்டு சில ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
மிகப்பெரிய ஆயுதமாக மதத்தைத்தான் கையாண்டார்கள்!
அதற்கு மிகப்பெரிய ஆயுதமாக மதத்தைத்தான் அவர்கள் கையாண்டார்கள். அவதிப்படக் கூடிய வர்களுக்கு மதம்தான் ஒரு மருந்து என்று அவர்கள் சொன்னார்கள்.
ஆனால், அது சாதாரண மருந்தல்ல; அது மயக்க மருந்து.
அந்த மயக்க மருந்தை, உருண்டையில் தடவிக் கொடுப்பது போன்று கொடுத்தார்கள்.
அய்.நா.வில் வாடிகனுக்கு
ஓர் அங்கீகாரம் கொடுத்திருந்தார்கள்
ஓர் அங்கீகாரம் கொடுத்திருந்தார்கள்
போப், ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல; வாடிகன் சிட்டியை ஒரு சிறிய நாடாக ஆக்கி, அய்.நா.வில் அதற்கு ஓர் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.
அதுவரையில் வலதுசாரிகளுக்கு வாய்ப்பே இல்லா மல் இருந்தது; மதத்தின்மூலம் அந்த வாய்ப்பைப் பெற்றனர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், ‘‘ஜாதியை ஒழிக்க வழி’’ என்ற புத்தகத்தை எழுதினார். பெரியார் அவர்கள்தான் முதன்முதலில் 1936 ஆம் ஆண்டு இந்திய நாட்டிலேயே அந்நூலை தமிழில் மொழி பெயர்க்கச் செய்து வெளியிட்டவர்.
‘‘புரட்சியாளன் போப் ஆக முடியாது; போப் ஆனவன், புரட்சி செய்ய முடியாது!’’
அந்தப் புத்தகத்தில் ஒரு வார்த்தையை அழகாகச் சொல்லியிருப்பார். ‘‘புரட்சியாளன் போப் ஆக முடியாது; போப் ஆனவன், புரட்சி செய்ய முடியாது’’ என்று.
அந்த வாக்கியத்தினுடைய அடிப்படையை, அரசி யலுக்கு விளக்குவதற்காகப் பயன்படுத்தினார்.
எப்படி என்றால், போப் என்பவர், அரசியல் ரீதியாகப் போகாமல், மதத்தைப் பரப்புவதன்மூலமாக ஊடுவலைச் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற அடிப்படையில் மென்மேலும் ஊடுருவிப் போகக்கூடிய அளவிற்கு வருவார்கள் என்பதைப் புரிய வைத்தார்கள்.
போப் அவர்களைப்பற்றி,
800 பக்கங்களுக்கு மேல் ஒரு புத்தகம்
800 பக்கங்களுக்கு மேல் ஒரு புத்தகம்
இதற்கு முன்னால் இருந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்களைப்பற்றி, சுமார் 800 பக்கங்களுக்கு மேல் ஒரு புத்தகம் வெளிவந்தது.
அதில், எவ்வப்பொழுதெல்லாம் யார், யார் சந்தித்தார்கள்? எப்படியெல்லாம் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவது என்று திட்டமிட்டார்கள்? என்பதை ஓர் அமெரிக்கரே தெளிவாக எழுதியிருக்கிறார்.
எனவே, இடதுசாரியாக இருந்த, புரட்சிக்கு அடை யாளமாக இருந்த ஒரு நல்ல ஆட்சி, மக்களாட்சியாக இருந்தது.
தொடக்கத்தில், கோளாறு நடந்த நேரத்தில், சர்வாதிகாரம் என்பது தேவை என்று நினைத்தார்கள். கட்டுக்கோப்போடு இருந்தார்கள்.
ஒரு சுதந்திர உணர்ச்சி அவர்களுக்கு இருந்தது. யூனியன் ஆஃப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் கூட்டாட்சியினுடைய அரசியல் சட்டத்தில் மிகப்பெரிய வாய்ப்பு இருந்தது.
‘‘மதம் மக்களுக்கு அபின்’’: லெனின்!
லெனினுடைய தத்துவமே ‘‘மதம் மக்களுக்கு அபின்’’ என்பதுதான். அதிலேயிருந்து கொஞ்சம் நகர்ந்து சென்றார்கள்.
ஸ்டாலின் காலத்தில் நகரவில்லை. கோர்ப்பச்சேவும், போப்பும் இரண்டு பேருமே நகர்த்தி, மத உரிமை கொடுக்கிறோம் என்றனர்.
எப்போதுமே வலதுசாரிகள், தங்களுடைய மதத்தை, நம்பிக்கையை அழுத்தமாகப் பயன்படுத்துபவர்கள்தான். அப்படி, நம்பிக்கையைப் பயன்படுத்தி, மதத்தை ஓர் ஆயுதமாக ஆக்கிக்கொண்டுதான் உலகம் முழுவதும் வருகிறார்கள்.
வேறு காரணங்களால், மக்களிடையே கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்ற அதிருப்தி மேகங்களை ஒன்றாக்கி, அதற்கு மதத்தைப் பயன்படுத்தி, ‘‘எல்லாம் கடவுள் செயல்’’, ‘‘எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக் கொள்வான்,’’ நீங்கள் ‘‘பிரேயருக்கு வாருங்கள்’’ என்று சொல்லி, எல்லா இடங்களிலும், இந்தியா உள்பட அதனைச் செய்தனர்.
அதன்மூலம்தான், ஜாதிக்கு அடிப்படையே மதம்தான். இந்தியாவில் ஜாதி என்பது எப்படி வந்தது என்றால், மதம்தான் அதற்கு மிகப்பெரிய அரண்.
மதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள்
ஆகவேதான், எல்லா இடங்களிலும் மதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி, பக்தி போன்ற கருவி களை அதற்கு மூலாதாரணமாக ஆக்கிக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வேறு சில பொருளாதாரப் பிரச்சினைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு இவை போன்றவற்றால் மக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது.
இன்னொரு பக்கத்தில், பெரு முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள் மிகப்பெரிய அளவிற்கு வருகிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரையில், ஜாதி, மூட நம்பிக்கையை, கடவுள் நம்பிக்கை என்று இப்படி எல்லாவற்றையுமே பயன்படுத்தினார்கள்.
இந்தியாவில்கூட மிகப்பெரிய அளவிற்கு வெளிப்படையாக ஒரு மதம்; அந்த மதத்தினுடைய ஆட்சி என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
ஒரு பக்கத்தில் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற என்று இருக்கக்கூடியதற்கு, ஒரு புது விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
சோவியத் ரஷ்யாவில் இருந்ததுபோன்று, மதத்தை எதிர்த்துப் பேச உரிமையில்லை!
அது என்னவென்றால், எல்லா மதங்களையும் சமமாகக் கருதலாம் என்கிறார்கள். ஆனால், மதத்தை எதிர்த்துப் பேசுகின்ற உரிமை உண்டா? என்றால், சோவியத் ரஷ்யாவில் இருந்ததுபோன்று, மதத்தை எதிர்த்துப் பேச உரிமையில்லை என்று சொல்லி, ஒரு சார்பு நிலைக்குத் தள்ளிக் கொண்டு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக வந்து, ஜனநாயக வாசல் வழியாக வந்து, சர்வாதிகார நாற்காலியில் அமர்ந்துவிட்ட கொடுமை பல இடங்களில் நடந்து இருக்கிறது.
தென் அமெரிக்கா போன்ற நாடுகளில், வலதுசாரிகள் வீழ்த்தப்பட்டு, இடதுசாரிகள் வருகிறார்கள்!
ஆனால், இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து கொண்டு வருகிறது. தென் அமெரிக்க நாடு களில், இப்போது வலதுசாரிகள் வீழ்த்தப்பட்டு, இடதுசாரிகள் வருகிறார்கள்.
அது மாறி மாறி வரக்கூடிய அளவிற்கு, பல நேரங்களில் மக்கள் பிரச்சினையிலிருந்து, கவனத்தை வேறு வகையில் இடதுசாரிகள் திருப்பும்போது, வலதுசாரிகள் வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம். தனிப்பட்ட சூழல் ஏற்படலாம்.
ஆனால், இறுதி வெற்றி இருக்கிறதே அது – ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
The war is not over until the final battle is won என்பதுதான்.
இப்போது, இரண்டு களங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, சீசா போன்று மேலே போகும்; கீழே வரும் என்றாலும், அது கடைசி வரையில் நிலைக்காது.
ஒரு காலத்தில் ஹிட்லர்தான் உலகத்திலேயே சாம்ராஜ்ஜியத்தை நடத்தலாம் என்று நினைத்தார். இப்போது ஹிட்லருடைய தலைமுறையே தெரியாத அளவிற்கு ஆகிவிட்டது.
சுழல்தான் கடல் என்று நினைக்க முடியாது; கடலில் சுழல் ஒரு பகுதி
ஆகவேதான், அரசியலில் ஒரு சுழல் வரலாம். ஆனால்,அந்த சுழல்தான் கடல் என்று நினைக்க முடியாது. கடலில் சுழல் என்பது ஒரு பகுதி மட்டுமே!
(தொடரும்)