தென்னாட்டு கேம்பிரிட்ஜ் என்னும் கும்பகோணத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் பல்கலைக்கழகம்” அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேனாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் பாராட்டு!
ஆலயங்கள் நகரம், தென்னாட்டு கேம்பிரிட்ஜ் எனும் கும்பகோணம் மாநகரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கும் தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது!
கலைஞர் பெயரில் பல நினைவுக் கூடங்கள் இருப்பினும் அவர் பெயரில் பல்கலைக்கழகம் என்பது பல தலைமுறைகளுக்கு அவர் புகழை பறைசாற்றும். மேலும் கும்பகோணம் திராவிட முன்னேற்றக் கழக மாணவர் இயக்கத்திற்கு வித்திட்ட பூமி.
கும்பகோணத்தை உள்ளடக்கிய ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தின் திருக்குவளையில் தோன்றி திராவிட, திராவிட முன்னேற்றக் கழகஇயக்கத்திற்காகவே தன் 75 ஆண்டுகள் அரசியல் வாழ்வினை சோர்வின்றி அர்ப்பணித்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக தமிழ்நாட்டின் நலத்திற்காக அயராது உழைத்த செயலாற்றல் மிக்கத தலைவரின் பெயரில் பல்கலைக்கழகம் என்பது திராவிட இனத்தவர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
நான் குடந்தை தாலுக்காவில் பிறந்தவன், பள்ளிக் கல்விபயின்றவன், கலைஞரோடு அரசியலில் பயணித்தவன் என்ற முறையில் தமிழுக்கு செம்மொழி உயர்வு கண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் மாபெரும் கல்வி ஆலயம் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டினையும் வாழ்த்தினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.