சென்னை, ஏப். 28- அரசியல் லாப, நட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சார்பு அணிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.
இந்துத்துவக் கும்பல் வேரறுக்கப்பட வேண்டும்
மதிமுக 32ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளைக் கடந்து 32ஆவது ஆண்டில் மே 6ஆம் தேதி அடியெடுத்து வைக்கிறது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்துத்துவ கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என்று தான் மதிமுக உறுதியாக முடிவெடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் அரசியல் லாப நட்டங்களை பார்க்காமல் பயணத்தை தொடர்கிறது.
இந்த சூழலில் 2026ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியை பெறும். அதேநேரம், கடந்த 31 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த ஏப்.20ஆம் தேதி மதிமுக நிர்வாகக் குழுவில் உணர்ச்சி பிரவாகமாக நிகழ்வுகள் நடந்தேறின.
நீரடித்து நீர் விலகாது என்பதை கட்சியின் நிர்வாகக் குழு திட்டவட்டமாக பிரகடனம் செய்திருக்கிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதிமுகவின் 32ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வீடுகளில், நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்று விழாவை நடத்த வேண்டும். மேலும், நலத்திட்ட உதவி வழங்குதல், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் என சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மாநாடு
மறைந்த அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்தலாம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியின் அனைத்து சார்பு அமைப்புகளும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோடை வெப்பத்தைக் கணக்கில் கொண்டு
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 28- கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிறப்பு வார்டுகள்
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சைதை மேற்கு பகுதி 140ஆவது வார்டில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்கா ரூ.3.64 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்காவில் புதிய நுழைவுவாயில், கழிவறைகள், முதியோருக்கான சிறப்பு வழித்தடம், குழந்தைகள் விளையாடும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் 3 மாதத்தில் முழுமையாக நிறைவடையும்.
கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும், நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.