சென்னை, ஏப்.28- சட்டமன்ற மசோதா தொடர்பான வழக்கின் தீர்ப்பு மக்களாட்சிக்கும், சட்டமன்றங்களின் உரி மைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி என மூத்த வழக்குரைஞர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களில் துணைவேந்தர்களை ஆளுநர் மூலம் நியமனம் செய்யாமல் மாநில அரசே நியமிப்பது உள்ளிட்ட 10 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது.
மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம், மசோதாக்களை பரிசீலித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தது.
பாராட்டு விழா
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்காக ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எம்.பி. ஆகியோருக்கு பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று (27.4.2025) நடந்தது.
விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-
இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வ துதான் பொருத்தமாக இருக்கும். இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத வெற்றியை பெற்றுள்ளோம்.
மிக முக்கியமான தீர்ப்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமன பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில், மிக முக்கியமான இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும், மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி.
என்றென்றும் நிலைத்திருக்கும்
ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக் கூடிய அதிகார பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு, நீதிமன்றம் மூலம் பெற்று தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை.
இந்த அரசியல் உரிமையை சட்டப்பூர்வமான வாதங்களின் மூலர்வமான வத்தந்து மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத் தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பி.வில்சன் ஆகி யோரை பாராட்டுகிறேன்.
முகுல் ரோத்தகி, விழாவிற்கு வர இயலவில்லை என்றாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களாட்சிக்கு கிடைத்த வெற்றி
உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர் கள். வெற்றியும் பெற்றிருப்பீர் கள். தனிநபர்கள் அமைப்புகள் ஏன், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் மக்களாட்சிக்கும் கிடைத்திருக் கும் வெற்றி.
இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும் வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுகொண்டே இருப்பீர்கள்.
மாநில சுயாட்சியை பெறுவோம்
வழக்கு தாக்கல் செய்த தமிழ்நாடும் – வாதிட்ட நீங்களும் -தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி.
இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசேர்க்க, அறிஞர் அண்ணா வலியுறுத்தி, கலைஞரின் முழக்கமாக வடித்து கொடுத்ததுதான் ‘மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி’ என்ற இலக்கு.
அந்த இலக்கை வென்றெடுக்க இந்த தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியை பெறுவோம். கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
நினைவுப்பரிசு
முன்னதாக மூத்த வழக்குரைஞர் களுக்கு, மு.க.ஸ்டாலின் பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திருந்தார்.