திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் – விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று திறந்து வைத்தனர்
திருச்சி, ஏப். 26 திருச்சி காட்டூர் காவேரி நகர் பகுதியில் கல்பாக்கம் ராமச்சந்திரன், வசந்தி ஆகியோரது இல்லத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டு 25.4.2025 அன்று காலை 11:30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, கல்பாக்கம் ராமச்சந்திரன் – வசந்தி இணையர்களின் 44 ஆவது ஆண்டு இணையேற்பு நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக காட்டூர் கடைவீதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக துணை தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்கள். தந்தை பெரியார் சிலையில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக காவேரி நகர் வரை அழைத்துவரப்பட்டனர்.
சிலை திறப்பு
முதலாவதாக மார்பளவு அமைக்கப் பட்டிருந்த தந்தை பெரியார் சிலையினை தொல். திருமாவளவன் அவர்களும், அம்பேத்கர் சிலையினை கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து கல்வெட்டினையும் திறந்து வைத்தார்கள்.
இவ்விழாவிற்கு மாவட்ட தி.க. தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் ஆல் பர்ட், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி.சி. வில்வம், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மாவட்ட ப.க தலைவர் மதிவாணன், மாவட்ட ப.க. செயலாளர் மலர்மன்னன், தி.க. மாவட்ட செயலாளர் மகாமணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, மு.சேகர், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச்சுடர், மாநகர தலைவர் ராமதாஸ், மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கல்பாக்கம் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றி ஏற்புரை நிகழ்த்தினார். ராமச்சந்திரன் பெயர்த்தி பெரியார் பிஞ்சு மென்னிலா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய தொண்டு செய்த பழுத்த பழம் பாடலை பாடினார்.
தாலி அகற்றல்
தொடர்ந்து ராமச்சந்திரன் – வசந்தி இணையரின் 44 ஆம் ஆண்டு இணை யேற்பு நாளையொட்டி அவர்கள் அணிந்திருந்த அடிமை சின்னமான தாலியினை அகற்றிக் கொண்டு இருவருடைய பெயர் பொறிக்கப்பட்ட பொன் அணிகலன்களை தலைவர்கள் முன்னிலையில் மாற்றிக்கொண்டனர். அதன் நினைவாக திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ரூ 20,000/- நன்கொடையாக கழகத் துணை தலைவரிடம் வழங்கினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.
லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி பெயர்த்தி யாழினி எழுதிய “எங்கேயோ கேட்டவை” கவிதை நூலினை கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரிடம் வழங்கினார், திமுக மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன்
இந்நிகழ்ச்சியில் திராவிடர் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பேசுகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கல்பாக்கம் ராமச்சந்திரன் கல்பாக்கத்தில் பணி யாற்றும் பொழுது கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மய்யம். அது ஒரு பார்ப்பன கோட்டை அந்த வளாகத்திலேயே தந்தை பெரியார் சிலையினை திறந்து இருக்கிறார் என்று சொன்னால் அது சாதாரணமானது ஒன்று அல்ல. தோழர் வேம்பையன், நண்பர் ராமச்சந்தின் ஆகியோர் பங்கு முக்கியமானது. இரு வரும் இணைந்து பணியாற்றக்கூடிய சகோ தரர்களாக நண்பர்களாக வாழ்ந்தார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலை அமையும் இடங்களில் தந்தை பெரியார் சிலையும் அமையும் என்று கூறினார். அந்த வகையில் இரு பெரும் தலைவர்களின் சிலைகள் இங்கே அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி சிறப்புடன் அமைந்துள்ளது திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்வதுண்டு. ஆனால் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்த்து மூன்று குழல் துப்பாக்கி என்று கூறினார்கள்.
திராவிட இயக்கம் நூற்றாண்டு விழாவில் எத்தனையோ நினைவுகளை நாம் கூற முடியும் குறிப்பாக ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் அருகாமை யில் இருக்கக்கூடிய லால்குடி மாவட் டத்தில் அதிக அளவில் தோழர்கள் பங்கேற்றார்கள். அதே போன்று நாகை பகுதியில் கீழ்வேளூர் பகுதியில் பெரும்பகுதி பங்கேற்றார்கள். அதனால் கீழ்வேளூர் பிரதேசம் என்று பத்திரிகையில் எழுதினார்கள். தோழர்கள் தந்தை பெரியாருடைய போராட்டம் அறிவிப்பு அந்த அளவிற்கு வீரியம் நிறைந்தது. அதன் பயனாக இன்று நாம் பயன் பெற்றிருக்கிறோம் என்று கூறினார்.
தொல். திருமாவளவன்
வி.சி.க. தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி. பேசும் போது, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலையினை நிறுவி இருக்கிற ராமச் சந்திரன் குடும்பத்தினரை பாராட்டி மகிழ்கிறேன். இன்றைக்கு வர்ணாசிரம தர்மம் அல்லது ஸநாதன தர்மம் அந்த சிந்தனைகளும் இங்கே பலவீனம் அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. இந்தியாவிலேயே அது மீண்டும் வலிமை பெற்று ஆட்சி பீடத்திலும் அமர்ந்திருக்கிறது. அவர்களும் இப்பொழுது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டை கொண்டாடுகிறார்கள். இந்த இருமுனை கருத்தியல். இரு துருவ அரசியல் இன்றைக்கு கூர்மை அடைந்து வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. இத்தகைய சூழலில் திராவிடம் என்கிற கருத்தே தவறு. அது தமிழ் தேசியத்தின் பகை என்று சொல்லுகிற போக்கும் தலை தூக்கி இருக்கிறது. இன்னும் குறிப்பாக பெரியார் என்கிற அடையாளத்தை அழித்து ஒழித்தால் தான் தமிழ் தேசியத்தை இங்கு வளர்க்க முடியும் என்று திரித்து கற்பிக்கப்படுகிறது.
திராவிடம் என்ற சொல்லை பெரியார் மிகப் பெரிய அளவிற்கு அரசியல் புழக்கத்திற்கும் கொண்டு வந்தார். ஒரு இயக்கமாக அதை மாற்றினார் இது ஒரு வரலாறு பண்டிதர் அயோத்திதாசர் அவர்களும் இதே சொல்லாடலை தமிழ் சமூகத்தில் அனைத்து தளங்களிலும் பயன்படுத்திருக்கிறார். தந்தை பெரியாரை பொறுத்தவரை பார்ப்பனியம் எனப்படுகிற ஆரியம் எனப்படுகிற வருணாசிரம தர்மம் எனப்படுகிற ஸநாதன தர்மத்தை எதிர்ப்பதற்காக தான் இதனை ஆயுதமாக கையில் எடுத்தார். ஏன் அதை எதிர்க்க வேண்டும்? அது மக்களை ஜாதியின் பெயரால் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்பதனை நிழலே நிலைப்படுத்தி உள்ளது கல்வியை பறித் திருக்கிறது. அதிகாரத்தை மறுத்திருக்கிறது. சுதந்திரத்தை தடுத்திருக்கிறது. வாழ்வாதார உரிமையை பறித்து இருக்கிறது. விலங்குகளை விட மூன்றாம் தர நான்காம் தர குடிமக்களாக ஆக்கி மூடநம்பிக்கையில் உழல வைத்திருக்கிறது. இவற்றில் இருந்து அவர்களை மீட்க வேண்டுமானால் அந்த கருத்தியல் பகையை வீழ்த்த வேண்டும் என்று முன் உணர்ந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதை வெகுமக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார். அதை பண்பாட்டு இயக்கமாகவும், சமூக புரட்சி இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார். அதை ஒரு அரசியல் இயக்கமாகவும் மாற்றியவர் தந்தை பெரியார். அவர் தேர்தல் அரசியல் இயக்கத்தில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் களத்திலேயே அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் சுயமரியாதை இயக்கம் அரசியல் இயக்கமாக தான் அறியப்படும் என்பது உண்மை என்ற பேசினார்.