நாம் பல அறிவிப்புகள் வெளியிட்டும் இன்னும் நீண்ட செய்திகள் ஏராளமாக வந்து குவிகின்றன. காகிதமில்லாத நெருக்கடியான காலத்தில் இவ்வார “குடிஅரசு” செய்திகளுக்கு ஆகவே 16 பக்கங்களுடன் வெளியிட வேண்டிய அவசியம் நேரிட்டதிலிருந்தே நேயர்கள் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். இனி திராவிடர் கழகச் செய்தியும் அதுவும் சுருக்கமாக வரும் மேற்படி செய்திகளைத் தவிர இதர செய்திகளை சிறிது காலத்துக்கு வெளியிட முடியாதென்பதை நேயர்களுக்கு கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பர்களே “குடிஅரசு” வெறும் செய்திகளைத் தாங்கிவரும் ‘கேட்லாக்’காக மிளிர வேண்டுமா? அல்லது அறிஞூர் பொன் மொழிகளும், பெரியார் அவர்களின் அறிவு விளக்கந்தரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் கொண்டதாக மிளிர வேண்டாமா? என்பதை நேயர்களே எண்ணிப் பாருங்கள். ஆகையால் செய்திகளுக்கும் சாதாரண கட்டுரைகளுக்கும் இனி “குடிஅரசி”ல் இடம் ஒதுக்க முடியாமைக்கு நிருபர்கள் பொறுத்தருள வேண்டும்.
– ஆசிரியர்
குடிஅரசு – பெட்டிச் செய்தி – 07.10.1944