சென்னை, ஏப். 26- இ-சேவை மற்றும் பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்ஆப் செயலியில் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பேரவையில் நேற்று (ஏப்.25) தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: “முன்பு 7,000 இ-சேவை மய்யங்கள் மட்டுமே இருந்தன. தற்போது தமிழ்நாடு முழுவதும் 25,000 இ-சேவை மய்யங்கள் இயங்கி வருகின்றன. இ-சேவை மய்யங்கள் வாயிலாக கடந்த ஆண்டு ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் பொதுமக்கள் பயன்பெற்றனர். கிராமப்புறமாக இருந்தால் 2 கிலோ மீட்டருக்கு ஒரு இ-சேவை மய்யமும், நகர்ப்புறமாக இருப்பினர் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு இ-சேவை மையமும் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு.
இ-சேவை மய்யங்கள் தொடங்க எளிதில் அனுமதி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இ-சேவை மய்யங்கள் வாயிலாக பேருந்துகளுக்கு டிக்கெட் பெறும் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசின் துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 41 லட்சம் கோப்புகள் டிஜிட் டல் மயமாக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து ஏறத்தாழ 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் காகித பயன்பாடு இல்லாமல் டிஜிட்டலில் கோப்புகளை கையாண்டு வருகின்றனர். தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் மூலம் மாநிலம் முழுவதும் 12,525 ஊராட்சிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய இணைப்பு வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று பேசிய அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
ஆதார் சேவைகளை பொதுமக்கள் எளிதில் வகையில் கூடுதலாக 50 புதிய ஆதார் பதிவு மய்யங்கள் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் மூலம் தொடங்கப்படும்.
பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில், இ-சேவை மற்றும் பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்ஆப் செயலியில் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக ரூ.3.85 கோடி செலவில் 50 சேவைகள் வழங்கப்படும்.
அரசு திட்டங்களில் வெளிப் படைத்தன்மையை மேம்படுத்தவும், பயனாளிகளின் அடையாளத்தை சரிபார்க்கவும், இ-கேஒய்சி கைப்பேசி செயலி மற்றும் இ-கேஒய்சி இணைய தளம் நிறுவப்படும். இ-கேஒய்சி இணையதள வசதியை முதியோர் ஓய்வூதிய திட்டம், கல்வி உதவித்தொகை திட்டங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த முடியும். தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ் இணையக்கல்வி கழகத்தின் வாயிலாக தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். ஆழ்நிலை தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு வடிவமைப்பு மேம்பாட்டுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தனியார்த்துறை பங்களிப்பு முறையின் கீழ் ஒரு புத்தொழில் நிறுவனத்துக்கு (ஸ்டார்ட்-அப்) 7.5 சதவீதம் மானியம் என்ற அளவில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் மானியம் வழங்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.