சென்னை, ஏப்.26- சட்டப் பேரவை நடவடிக்கை குறிப்பு புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள் பேரவையில் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், ஒளிப்படங்கள். செய்தி துணுக்குகள், வீடியோ துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யும் பணி மின் ஆளுமை முகமை மேற்பார்வையில் சட்டப் பேரவை செயலகத்தில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக, 1962 முதல் 2024ஆம் ஆண்டு வரை. சட்டப் பேரவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட tnlasdigital.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தியாகராஜன், சட்டப் பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, அரசு கொறடா ராமச்சந்திரன், சட்டப் பேரவை செயலர் சீனிவாசன் பங்கேற்றனர். இது தொடர்பாக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு சட்டப் பேரவையில் கூறியதாவது.
கடந்த 2021 ஆகஸ்ட் 21இல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி முதல் கட்டமாக, 1952 முதல் 2024 வரை சட்டப் பேரவை, மேல்சபை நிகழ்வுகளின் பதிவுகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1921 முதல் 1952 வரையிலான சட்டப் பேரவை நிகழ்வுகளை கணினிமயமாக்குவதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இப்பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.