சென்னை,ஏப்.26– பொதுத்துறை நிறுவனங்களை விற்க ஒன்றிய அரசு முயற்சி செய்யும் சூழ்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக நிலைப்பாடு என்ன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (25.4.2025) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகிய மானிக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு வாணியம்பாடி செந்தில்குமார் (அதிமுக) பேசியதாவது:
காங்கிரஸ் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது, என்.எல்.சி. நெய்வேலி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றபோது, அந்த பங்கினை வாங்கி தமிழ்நாடு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்தது அதிமுக அரசு.
அமைச்சர் சி.வி.கணேசன்: நெய்வேலி பொதுத்துறை நிறுவனங்களுடைய பங்குகள் விற்கப்படுமேயானால், ஒன்றிய அரசாங்கத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஆதரவை விலக்கிக் கொள்வேன் என்று கலைஞர் சொன்னார். அந்த காரணத்தினால் தான், இன்றைக்கு நெய்வேலியில் அங்கு பணியாற்றுகிற பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: நீலகிரி மலை ரயில் உட்பட்டிருக்கக்கூடிய தனியார் களுக்கு ஒப்படைக்கக்கூடிய முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது. பொதுத் துறையினுடைய நிறுவனங்களை தனியார்வசமோ அல்லது வேறு வசமோ இன்றைக்கு அவர்கள் விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கக்கூடிய சூழ்நிலையில், ஒன்றிய பாஜ அரசின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.
காரணம் என்னவென்றால், அவர்கள் அந்த முடிவை எடுத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்போது ஒரு புது உறவில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த உறவினுடைய அடிப்படையில் உங்களுடைய நிலைப்பாடு என்னவென்பதை நான் அறிய விரும்புகிறேன்.
அதிமுக கொறடா எஸ்.பி.வேலு மணி: கூட்டணி வேறு, கொள்கை வேறு. எங்களுடைய கொள்கைப்படி, கண்டிப்பாக, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். விற்பதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: கூட்டணி வேறு, கொள்கை வேறு என்றால், கொள்கையை சமாதானம் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு கூட்டணி இதுதானா? என்று கேள்வி எழுப்பினார்.