சென்னை, ஏப்.26- வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் களுக்கு சென்னையில் நாளை (27ஆம் தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருந்தது சட்ட விரோதமானது. அந்த சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும், எனும் உச்சநீதிமன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்ததன் காரணமாக 10 மசோதாக்கள் அமலுக்கு வந்தன, அவை:
- தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 2. சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, 3. பெரியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 4. அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 5. தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 6. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 7. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 8. தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 9. தமிழ்நாடு தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, 10. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா ஆகும்.
பாராட்டு விழா
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெறுவதற்கு வழக்காடிய உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோஹத்கி, டாக்டர். அபிஷேக் சிங்வி, எம்.பி., ராகேஷ் திவேதி, பி.வில்சன், எம்.பி, ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டுவிழா நாளை (27.04.2025) மாலை 5 மணிக்கு சென்னை, கிண்டி, அய்.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெறுகிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அறிஞர் பெருமக்கள், மூத்த வழக்குரைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக் கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.