தந்தை பெரியாரின் இலக்கிய வடிவமாக விளங்கி, திராவிட இயக்கத்தின் கண்ணாடியாக விளங்கிய புரட்சிக்கவிஞரின் பிறந்தநாளான ஏப்.29அய் உலகத் தமிழ்நாளாகவும், அதன் தொடர்நாட்களை தமிழ்வாரமாகவும் அறிவிக்க வேண்டும் என்று உலகத் தமிழ் அமைப்புகளின் விருப்பத்தை தாங்கள் தமிழ்நாட்டரசுக்கு அறிக்கை வாயிலாக (‘விடுதலை’ 4.4.2025) எடுத்துரைத்திருந்தீர்கள். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் எடுத்துக்கூறியிருந்தீர்கள்.
அதன் விளைவாக, புரட்சிக்கவிஞர் பிறந்த ஏப்.29ஆம் நாள் முதல் மே 5ஆம் நாள் வரை தமிழ் வாரமாக கொண்டாடப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் கொண்டாடி மகிழத் தொடங்கியுள்ளனர். இந்த அறிவிப்பின் ஆணிவேராக விளங்கிய தமிழர் தலைவர் ஆசிரியரின் முயற்சியை உலகத் தமிழர்களின் சார்பில் உளமார பாராட்டி, நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறோம். புரட்சிக்கவிஞரின் பகுத்தறிவு, பெண்கல்வி, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், தொழிலாளர் நலன், விடுதலை, உலக நோக்கு ஆகியவற்றை இளம் தலைமுறை அறிந்துகொள்ள வகையேற்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்காக தாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்ட பெருமுயற்சிகளுக்கு மீண்டுமொரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈன்று புறந்தருதல்
தாயின்கடன்! உழைத்தல்
எல்லார்க்கும் கடனென்று
கொட்டுமுரசே! – வாழ்வில்
தேன்மழை பெய்ததென்று
கொட்டு முரசே!
என்ற புரட்சிக்கவிஞரின் வார்த்தைகளில் எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டு, தங்களுடைய உலகப்பெரியாரின் பணி வெற்றிகரமாக தொடர நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறோம்.
எனினும், ஏப்.29ஆம் நாளை உலகத் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளதை தாங்கள் அறியாததல்ல. அந்த கோரிக்கையையும் நிறைவேற்றித்தர தமிழ்நாட்டரசை தொடர்ந்து வலியுறுத்துமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
– முத்துமணி நன்னன்,
தலைவர்,
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்