கேள்வி 1: பி.ஜே.பி.ஆளும் மராட்டியத்தில், கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பெற்றோர்கள் – மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அம்மாநில தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவை மராட்டிய அரசு நிறுத்தி வைத்திருப்பது மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாமா?
– க.செந்தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 1: நிச்சயமாக. வட மாநிலங்களே கூட அவரவர் தாய்மொழி உணர்வு -பண்பாட்டைக் காக்க ஆயத்தமாகிவிட்டதற்கு ‘லேட்டஸ்ட்’ உதாரணம் – மராத்தியத்தின் கட்டாய ஹிந்தித் திணிப்புக்கான எதிர்ப்பு – எனவே நிச்சயமாக வெற்றிதான்!
******
கேள்வி 2: ஹிந்தித் திணிப்பு விவகாரத்தில் ‘டில்லியின் ஆதிக்க மனோபாவம் மாறும்வரை நமது போராட்டம் ஓயாது – தொடரும்’ என்று திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது ஒன்றிய ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டுமா?
– செல்வி பாபு, மதுரை.
பதில் 2: செவிகளுக்கு எட்டித்தான் தீர வேண்டும். போக்கு மாறித்தான் ஆக வேண்டும் என்பது காலம் இடும் கட்டளையாகும்!
*****
கேள்வி 3: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம்பெற்ற நாடாளுமன்றமே உயர்ந்த அதிகாரம் கொண்டது. நாடாளுமன்றத்தை விட வேறு எதுவும் உயர்ந்த அதிகாரம் கொண்டதாக அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியிருப்பது ஏற்புடையதா?
– தா.இராஜன், கிழக்கு தாம்பரம்.
பதில் 3: அறியாமை + ஆணவம் கலந்த – அவர் எடுத்த அரசமைப்புச் சட்டப் பிரமாணத்திற்கும் முற்றிலும் எதிரானதும்கூட!
n n n n
கேள்வி 4: தி.மு.க. ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருப்பது திராவிடச் சிந்தனையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
– ஜெ. பாபு, பொத்தேரி.
பதில் 4: மகிழ்ச்சி மட்டுமல்ல; உண்மையின் ஒளிவீச்சு!
*****
கேள்வி 5: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை அறிந்த தமிழ் கூறும் நல்லுலகம், திராவிட மாடல் அரசை கையொலி எழுப்பிப் பாராட்டி மகிழ்வதை தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
– ச.சாந்தி, நாமக்கல்.
பதில் 5: தமிழ்மொழி பண்பாட்டுப் பாதுகாப்பு வரலாற்றில் இடம் பெறுகிறார் நமது ஒப்பற்ற முதலமைச்சர்! உலகத் தமிழர்கள் வாழ்த்துகிறார்கள்! தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆரின், “பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அமல் – ஆணை”, கலைஞரின், “செம்மொழிப் பிரகடனம் – ஆணை”, திராவிட மாடல் நாயகரின், “புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் – உலகத் தமிழ்மொழி வாரம் – ஆணை” ஆகியன ஒரே தன்மையில் ஒளிவீசும் சாதனை முத்துக்கள்!
*****
கேள்வி 6: ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தமிழ்நாட்டில் மூடநம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச் சட்டம் கொண்டுவருமா? என்று எழுப்பிய வினாவுக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? மேலும், கருநாடகாவில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கென தனிச் சட்டம் இருக்கும் நிலையில், இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியில் அதனைக் கொண்டுவர தயக்கம் காட்டுவது ஏன்?
– பா.பூங்கொடி, பூந்தமல்லி.
பதில் 6: விடுதலை (23.4.2025) காண்க!
****
கேள்வி 7: தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதி செய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கவேண்டியது இன்றியமையாதது என்று பேசியிருப்பதற்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு அவ்வளவு எளிதில் வளைந்து கொடுக்குமா என்ன?
– ச.இளையநிலா, இளையான்குடி.
பதில் 7: இன்றில்லாவிட்டாலும் நாளை என்பது பழைய வரலாறு.
*****
கேள்வி 8: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள உன்னதமான கலைஞர் கைவினைத் திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோருக்கும், கிராமப்புற மகளிருக்கும் கலங்கரை விளக்காகத் திகழும் என்று எதிர்பார்க்கலாமா?
– பா.அங்காளம்மாள், திருவொற்றியூர்.
பதில் 8: அதுதானே மறுக்க முடியாத உண்மை! நவீன குலக்கல்வி – விஸ்வகர்மா யோஜனாவுக்கு எதிர்ப்புக்குரிய மாற்று!
*****
கேள்வி 9: தமிழ்நாடு அரசு விண்வெளித் துறையில் கவனம் செலுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளித்துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்ப்பது தான் இதன் முதன்மை இலக்கு. மேலும், நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலே 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இதனால் விண்வெளித் துறைக்கு தேவையான தகுதியானவர்கள் உருவாக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருப்பது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையின் மணிமகுடம் அல்லவா?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 9: அதற்கும் வெவ்வேறு புதுப்புது கதைகள் உருவாக்கி திசை திருப்புகின்றது ஆரியக் கூட்டம்! பார்க்கவில்லையா?
*****
கேள்வி 10: ரயில்வேத் துறை அதிக வருவாய் ஈட்டி வருவதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கும் நிலையில், முதியோருக்கான கட்டண சலுகைகளை மறுபடியும் வழங்க ரயில்வே நிர்வாகம் ஆவன செய்யுமா?
– எஸ்.வீராசாமி, வில்லிவாக்கம்.
பதில் 10: தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்தக் குரல் எழுப்பி வெற்றிக்கனி பறிக்க வேண்டும்!