‘1921ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறுமாத வேலை நிறுத்தம்! லார்டு வில்லிங்டன் நீலகிரியினின்றும் புறப்பட்டார். எற்றுக்கு? சென்னை என்ன பேசிற்று? தொழிலாளர் தலைவர்களை நாடு கடத்த லார்டு வில்லிங்டன் வந்திருக்கிறார் என்று பேசிற்று.
நாடு கடத்தல் செயலில் நடந்ததா? இல்லை. ஏன்? தியாகராயர் தலையீடு. மலையாளக் குழப்பம் – ஒத்துழையாமை இவைகளிடையே, நாடு கடத்தல் நிகழ்ந்தால் சென்னை என்ன ஆகும்? மாகாணம் என்ன ஆகும்? மந்திரிமார் பதவியினின்றும் விலகுதல் நேரினும் நேரும்’ என்று செட்டியார் எடுத்துரைத்தனரென்றும் அதனால் லார்டு வில்லிங்டன் மனமாற்றமடைந்து நாடு கடத்தலை எச்சரிக்கையளவில் நிறுத்தினாரென்றும் சொல்லப்பட்டன.
இவைகளை எனக்குத் தெரிவித்தவர் டாக்டர் நடேச முதலியார். தியாகராய செட்டியாரைக் கண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டேன். ‘நீர் நல்லவர். உமது கட்சி வேகமுடையது. வேகம் அந்தரங்கத்தை வெளியிடவும் தூண்டும். ஆதலின் அந்தரங்க சம்பாஷணையை வெளியிடுதல் நல்லதன்று’ என்று கூறினர். ‘144 பலருக்கு வழங்கப்படுகிறது; எனக்கு வழங்கப்படுவதில்லை.
காரணம் நாடு கடத்தும் நாட்டம் என்று சொல்லப்பட்டது. அந்நாட்டத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். நீங்கள் எனக்கு நன்மை செய்யவில்லை!’ என்றேன். ‘நாடு கடத்தலால் உமது வாழ்வே தொலையும். உமது எதிர்கால வாழ்க்கையைக் கருதியே யான் தடை செய்தேன்‘ என்று செட்டியார் அன்று உரைத்தது எனக்கு மகிழ்ச்சியூட்டவில்லை.
-திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் நூலிலிருந்து…