எதிரிகளின் மனத்தையும் ஈர்த்த பெரியார் பேச்சு- புரட்சிக் கவிஞர்

viduthalai
2 Min Read

சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும் சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணி பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்கள். பெரியார் அவர்களும் வர ஒப்புக் கொண்டார். ஆனால், ஸநாதனிகளும், தீட்சதர்களும் எதிர்ப்பைப் பலமாக ஆரம்பித்து விட்டார்கள்.

அன்றைய தினம் கலகம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். ஒவ்வொருவனிடமும் கல், தடி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அன்று பெரியாரை ஓடவிடுவது என்றே திட்டமிட்டு விட்டனர். நிலைமை மிக பயங்கரமாக இருந்தது.

நாங்கள் பத்துப் பேர்கள் போயிருந்தோம். நிலைமையை பார்த்து விட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய் பெரியார் வந்ததும் திரும்பிப் போகச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டிக்கொண்டு ரயிலடிக்குப் போனோம். பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம்.

ஆனால், வருகிறேன் என்று கூறியிருந்த வண்டியில் வந்திறங்கினார். உள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக் கொண்டே ‘விடு, விடு’ என்று ஊருக்குப் போனார். ‘போக வேண்டாம். ஆபத்து, ஆபத்து’ என்று நாங்கள் கூறியதைக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய் ‘டக்’ என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக் கூடாது என்று பயந்தோமோ அதே இடம். போலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்துவிட்டது. போலீஸ்காரர்களின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்துவிட்டன. “இன்று என்ன செய்யப் போகிறோம்?” என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.

இந்த நிலையில் பேசவும் ஆரம்பித்துவிட்டார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக உள்ளம் கவரும் விதத்தில் பேசினார்.

உங்கள் பையன் ஒருவன் படித்திருக்கிறான். பார்ப்பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றுதானே? ஆனால் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக்குக் கிடைக்கும்? ‘இதைத்தானே கூறுகிறேன்’ என்றார். உயர்ந்த கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம்பித்தன. கடைசியில் ‘மூடநம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆலயத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப் போட்டு வேட்டி துவைப்பேன்’ என்றார். எதிர்த்த கரங்கள் திரும்பி தட்டுதலின் மூலம் ஓசையைக் கிளப்பின.

அன்று சாகடிக்கப்படவிருந்த பெரியார் நடராசன் கோவில் துவம்சமாக்கப்பட வேண்டும் என்றும் பெரியார் அன்று கட்டளை யிட்டிருப்பாரேயானால் நொடியிலே ஆகியிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம் நிலையானது. எந்த இயக்கம் மக்களுக்கு உண்மை யாகப் பாடுபடுவது – எந்த இயக்கம், சமுதாயம் முன்னேற உண்மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேர வேண்டும்.

தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக் கூடாது. எஞ்ஞான்றும் விழிப்போடு இருக்க வேண்டும். பெரியார் சொல்லுகின்ற அறிவுரைகளை அன்றாடம் கடைபிடிக்க வேண்டும்.

(‘விடுதலை’ இதழ் 21.4.1970)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *