கழகத் தோழர்களுக்குப் புரட்சிக்கவிஞர் வேண்டுகோள்!

1 Min Read

பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன். அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு; மற்றவர்கட்கு இல்லை.

தி.க. தொண்டன்தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழ்த் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டுவரும் தமிழ்த் தன்மைகளைக் கறைநீக்கி, நிலைநிறுத்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றான்.

தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன் வேறு எவன்? தமிழ்மொழி வாழ வேண்டும். இந்தி தொலைய வேண்டும் என்ற உயிரைப் பணயம் வைத்துப் போரில் இறங்க எவன் முன் வருகின்றான்?

ஜாதி ஒழிய வேண்டும்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இறப்பு வரும் நேரத்தும் இன்னா நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க. தொண்டனைவிட வேறு எவன் உள்ளான்? எங்கே பார்க்க முடிகின்றது?

பொங்கற் புதுநாளைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில்தான் விழுந்துள்ளது. தமிழர் திருநாளைத் தமிழன் சிறப்பிப்பது என்றால் என்ன? தமிழர் எண்ணத்தை, தமிழர் செயல்களை, தமிழர் ஆசைகளைச் சிறப்புறச் செய்வதே அன்றோ?

இனி தி.க. தோழர்களை, தி.க. தலைவர்களை நான் கேட்கின்றேன்; பொங்கல் நாளில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று?

நேற்று தி.க. கொள்கைகளை ஆய்ந்தீர்கள்; நேற்றுச் சொற்பெருக்காற்றினீர்கள்; நேற்றுப் பாடினீர்கள் நாட்டுப்பாட்டு, பொங்கல் புதுநாளில்  உங்கள் திருநாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் சிறப்பாக?

மாவட்டத் தலைவர்கட்குக் கூறுகின்றேன். ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் கழகக் கொடி ஏற்றப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் ‘விடுதலை’ பரப்பப்படுதல் வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கப்படுதல் வேண்டும்.

இவ்வாறு செய்க!

சோம்பல் என்னும் பள்ளத்தைத் தூர்க்க, உள்ளத்திற் காண்க தமிழர் திருநாள் தரும் பேரின்பத்தை.

– புரட்சிக்கவிஞர் (‘குயில்’ கிழமை இதழ் 30.12.1958)

(‘விடுதலை’ 13.1.1974)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *