திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும் ஆகச்சிறந்த தமிழ் இலக்கிய ஆளுமையாகவும் விளங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப். 29ஆம் நாளை உலகத் தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ்மன்றம்-அமெரிக்கா இலெமுரியா அறக்கட்டளை-மும்பை, கருநாடக மாநில தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம்-சென்னை உள்ளிட்ட உலகத் தமிழ் அமைப்புகள் மற்றும் உலகத் தமிழரின் விழைவுக்கு வலுசேர்க்கும் வகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியரும் அறிக்கை மூலம் வேண்டுகோளாக தெரிவித்திருந்தார். மேலும், நேரிலும் இந்த கோரிக்கையை முன் வைத்தீர்கள் என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். தமிழர் தலைவர் ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க, திராவிட மாடல் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் புரட்சிக்கவிஞரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ஆம் நாள் வரையில் தமிழ் வாரமாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முதற்காரணமாக இருந்த தமிழர் தலைவர் ஆசிரியரை உலகத்தமிழர்களின் சார்பில் வாழ்த்துகிறோம். மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
திராவிட இயக்கத்தின் சமத்துவ, பகுத்தறிவு, சமூகநீதி பெண்ணுரிமை சிந்தனைகளை வாழையடி வாழையாக இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்ப்பதற்கு புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் கவிதைகளை பரவலாக்க வேண்டியது அவசியமாகும். நமது நாட்டை ஆட்டிப்படைத்து வரும் பிற்போக்குத்தனமான பித்தலாட்ட சக்திகளிடம் இருந்து அனைத்து மக்களையும் தற்காத்துக்கொள்வதற்கு தந்தை பெரியாரின் கொள்கைகள் அவசியம் பெரியாரின் கொள்கைகளை முழங்கும் புரட்சிக்கவிஞரின் இலக்கியங்கள் வழியாக இளைஞர்களை எளிதில் ஈர்க்க முடியும். அதற்கு தமிழ் வாரக் கொண்டாட்டம் தொடர் பயனை அளிக்கும் – சமத்துவ சிந்தனைகளைப் பரப்பும் நமது இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் வலுசேர்க்கும். பெரியாரை உலகமயமாக்குவதற்கு புரட்சிக்கவிஞரின் இலக்கியங்கள் படைக்கலனாகவும் விளங்கும்.
எனவே. தமிழ் வாரம் கொண்டாட்ட அறிவிப்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் பங்களிப்பை எண்ணி மகிழ்வதோடு, உலகத்தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் கொள்கை உறவு.
– சு. துரைக்கண்ணன்,
தலைவர்,
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்.
டெலவர், அமெரிக்கா