தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில், அவரால் எழுதப்பட்டு வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து சிறு சிறு வெளியீடுகளாக வெளியிடவும், மற்றவர்கள் எழுதிய முக்கிய சிந்தனைப் புரட்சிக்கான கட்டுரைகளையும் வெளியிடவும் ‘குடிஅரசு’ப் பதிப்பகம் என்பதையும் தனது சொந்த பொருட் செலவினைப் பொருட்படுத்தாது நிறுவி, அவ்வெளியீடுகளை மக்கள் இயக்கமாக, சுயமரியாதை இயக்கக் கருத்துப் போருக்கான அறிவாயுதங்களாக பரப்பினார்.
இது ஒரு நல்ல முன்னோடியான எடுத்துக்காட்டு. ‘புத்தகப் புரட்சி’ மூலம் அவர் உருவாக்க நினைத்த கருத்து சமூகப் புரட்சி.
அடுத்து இதனை விரிவாக்க எண்ணி பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் என்ற ஒரு பதிப்பகத்தை நிறுவி, பலரும் அதில் பங்கு தாரர்களாகும் நோக்கத்தோடும், தனியே புத்தகங்கள் வெளியிட்டு – விற்பனை செய்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைத் தமிழிலும் தேவைப்படும் நிலையில் ஆங்கிலத்திலும் வெளியிட முனைந்தார்கள்.
1928இல் Revolt – ‘ரிவோல்ட்’ என்ற ஓர் ஆங்கில வார ஏட்டினையும் ஆங்கிலம் படித்துப் பட்டம் பெற்ற தோழர் எஸ். இராமநாதனை இணையாசிரியராகக் கொண்டு வெளியிட்டார்.
ஒரே ஆண்டில் அவர் பிரிந்து சென்ற பின்னர் தனது பெயரையே ஆசிரியர் E.V. Ramasamy என்று போட்டு, தனது கருத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடர்ந்து சில ஆண்டுகள் தோழர்களைக் கொண்டு (தோழர் எஸ். குருசாமி, கே.எம். பாலசுப்ரமணியம் – போன்றோரை வைத்து) நடத்தினார்.
அதன் மூலம் லண்டன் மாநகரப் பகுத்தறிவாளர் கழக (R.P.A.) வெளியீடுகளையும் வரவழைத்து, பல நூல்களைத் தமிழில் வெளியிட்டு, பரப்பவும் முனைந்தார்கள்.
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகச் செயலாளர் சாத்தான்குளம் திரு. அ. ராகவன் அவர்கள் அதனை சரியாக நடத்தாததோடு, சில ஆண்டுகளில் பண வரவு செலவுகளில் குளறுபடிகளையும் செய்து தந்தை பெரியாரின் நம்பிக்கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்!
அதனை அய்யாவே தானே நடத்தி ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’ நூற் பதிப்புக் கழகம் சார்பில் பல அரிய நூல்களை வெளியிட்டார் வெளிநாட்டுப் பகுத்தறிவாளர்களான வால்டேர், மேதை பெர்னாட்ஷா, பெர்ட்ரண்ட் ரசல், பொருளாதார மேதை கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்களைத் தமிழ் நாட்டில் பரவச் செய்தார்!
அந்த வரிசையில்தான் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் நூலை வெளியிட்டதுமாகும். பஞ்சாப் லாகூரில் ஜாட்பட்தோடக் மண்டல் அழைப்பை ஏற்று அண்ணல் அம்பேத்கர் ஆற்றவிருந்த உரைக்கு சில முட்டுக்கட்டைகளால் தடை ஏற்பட் டது. அவ்வுரையினையே தனி நூலாக அண்ணல் அம்பேத்கர் வெளியிட்டதை எப்படியோ அறிந்து, அதை வரவழைத்து முதன் முதலில் 1936இல் தமிழில் வெளியிட வைத்துப் பரப்பினார்கள். அது பிற மொழி ஒன்றில் முதலில் வெளி வந்த வரலாற்றுச் சிறப்பைத் தமிழ் பெற்றதும், தமிழர்கள் பெற்றதும் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சீரிய முயற்சியால் தான்.
வியப்பாக உள்ளது! வெளிநாட்டுப் பகுத்தறிவாளர் கர்னல் ராபர்ட் ஜி. இங்கர்சால் எழுதிய கருத்துகளை, கடவுள், மதம், மூடநம்பிக்கை, சம்சயவாதம் (Agnosticism) என்ற தலைப்புகளில் நாவலர் ச. சோமசுந்தரபாரதியாரின் மகன் வழக்குரைஞர் சோ. இலட்சுமிதரன் பாரதி அவர்களை வைத்தும், பிற எழுத்தாளர்களை பயன்படுத்தியும் பல வெளியீடுகளை அச்சிட்டு நாடு முழுவதும் பரப்பினார்கள்.
குழந்தைகளுக்கும், ஏன் பெண் பிள்ளை களுக்கும்கூட இங்கர்சால் என்று தமிழ்நாட்டில் பெயர் வைக்கும் அதிசயத்தைச் செய்து காட்டினார். அதேபோல் லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், ரஷ்யா, பிராட்லா, சமதர்மம் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து – இவர்களில் இன்று பலரும் 50 வயதைத் தாண்டியவர்கள் ஆவார்கள்.
இப்படி புத்தகங்கள் மூலம் அவர் நடத்திய அமைதியான சமூகப் புரட்சி – ஆரவாரமில்லாதது.
மார்க்ஸ் நூல்களும் – இப்படி பலப்பல!
துவக்க கால பகுத்தறிவு, குடிஅரசு பதிப்பக முன்னோட்டம் காரணமாக, திராவிடர் இயக்கம் பரவி வளரும் நிலையில் நமது வெளியீடுகளை அறிஞர்அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், பேராசிரியர் படங்களையும், நூல்களையும் 1940இல் வேலூர் திராவிடன் பதிப்பகம் (Long Bazaar, வேலூர் (North Arcot) சில பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. அறிஞர் அண்ணாவின் மேடைப் பேச்சுகளை முதன்முதலில் மறைந்த தோழர் நமச்சிவாயம் தான் முழுமையாக எழுதி திராவிடர் நிலை, நாடும் ஏடும் போன்றவைகளை வெளியிட்டார். வில்லிவாக்கம் தோழர் டி.எம். பார்த்தசாரதி ஒரு பதிப்பகம் துவக்கி வெளியிட்டதுதான் ‘தி.மு.க. வரலாறு’. அவர்தான் தி.மு.க. வரலாற்றை முதலில் எழுதியவர்!
முதன் முதலில், புதுவையில் புரட்சிக் கவிஞரின் முதல் சீடரான சுயமரியாதை வீரர் ‘புதுவை சிவம்’ என்ற புதுவை சிவப்பிரகாசம் அவர்கள் தான் அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஏட்டின் கட்டுரைகளைத் தொகுத்து, பாக்கெட் சைஸ் அரை ரூபாய் – 50 அணாவிற்குப் போட்டு (ஞாயிறு பதிப்பகம், அம்பலாத்தாடு அய்யர் மடத் தெரு, புதுவை) பிறகு பெரியார் ஈ.வெ.ரா. தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.
கலைஞரின் முதல் சிறு புதினம் ‘கிழவன் கனவு’ என்ற புத்தகம் டார்ப்பீடோ ஏ.பி. ஜெனார்த்தனம் மதிப்புரையுடன் (திருவாரூர் விஜயபுரம் அஜீஸ் பதிப்பகம்) வெளிவந்தது.
அடுத்து திருச்சி தோழர் முத்துக்கிருஷ்ணன் அறிஞர் அண்ணாவின் எழுத்துக்களை (‘திராவிட நாடு’ ஏட்டில் வந்தவை) திராவிடப் பண்ணை என்ற பதிப்பகம் சார்பில் வெளியிட்ட நூல்கள் ரோமாபுரி இராணிகளின் லீலா விநோதங்கள் தொடங்கி, பணத்தோட்டம், வர்ணாஸ்ரமம், கம்பரசம், இலட்சிய முழக்கம் – இப்படிப் பலப்பல!
துவக்க கால பதிப்பகங்கள் – இவை எனது நினைவில் உள்ளவை மட்டுமே! திராவிட இயக்க ஆய்வாளர் தோழர் திருநாவுக்கரசு ஆவணமாக, காப்பகமாக முழுப் பட்டியலைத் தருவார்.
இப்படி திராவிடர் இயக்கத்தின் அரிய சேவை அளப்பரியது.
(தொடரும்)