‘‘சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து உரையாடல்களை நீக்க வலியுறுத்தியுள்ளது. இதனால், திரைப்படம் ஏப்ரல் 25ஆம் தேதிக்குத் திரையிட தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் ‘தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்கள், ‘மஹர், மாங், பேஷ்வா’ என ஜாதிப் பெயர்களை குறிப்பிடக்கூடாது, மூன்றாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடாது’ எனப் பல இடங்களில் உரையாடல்களை நீக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். படத்தின், முன்னோட்டக் காட்சிகளில் பார்ப்பன ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திரைப்பட வாரியத்தின் இந்தப் போக்கு குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் “இந்த ஜாதிய, இன வெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
“எது அவர்களைத் தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கோழைகள்” என்று குறிப்பிட்டுள்ள அவர், “முன்பு தாடக்- 2 படத்துக்குப் பிரச்சினை செய்து, இந்தியாவில் ஜாதி அமைப்பை மோடி ஒழித்து விட்டார் என்று கூறினார்கள், இங்கே ஜாதி அமைப்பு இல்லை என்றால், ஏன் பார்ப்பனர்கள் புலே திரைப்படத்தின் மீது கோபம் கொள்கிறார்கள்? ஜாதி அமைப்பு இல்லை என்றால், ஏன் ஜோதிராவ் புலே சாவித்திரிபாய் புலே இன்னும் பேசுபொருளாக இருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த விமர்சனத்துக்காக அனுராக் கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்களுக்குப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. உண்மையை எதிர்கொள்ளமுடியாத அரசு, மதவெறி கும்பல்களுக்கு எதிராகவும் அனுராக் காஷ்யப் மற்றும் ‘புலே’ திரைப்படத்துக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு நம்பிக்கை அளிக்கிறது.’’ (‘முரசொலி’ 23.4.2025).
இந்தத் திரைப்படத்தின்மீது ஏன் தணிக்கையாளர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்?
சத்யசோதக் சமாஜ் (Satyashodhak Samaj) என்பது 1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரால் மகாராட்டிராவில் நிறுவப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகும். “உண்மையைத் தேடுவோரின் சமூகம்” என்று பொருள்படும் இந்த அமைப்பு, ஜாதி அடக்குமுறை, பாலின ஏற்றத்தாழ்வு, மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றியது.
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஜாதி அமைப்பு, பார்ப்பன ஆதிக்கம், மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் ஆகியவை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தன. இந்தச் சூழலில், ஜோதிராவ் புலே, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி, சமத்துவம் மற்றும் உரிமைகளை வழங்குவதற்காக சத்யசோதக் சமாஜை நிறுவினார். இந்த அமைப்பு, மனுதர்மம் போன்ற பாரம்பரிய மத நூல்களால் விதிக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகவும், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்குவதற்காகவும் செயல்பட்டது.
ஜாதி அமைப்பை ஒழித்தல்: ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் எதிர்ப்பது. பெண் முன்னேற்றம்: பெண்களுக்கு கல்வி மற்றும் சம உரிமைகளை வழங்குவதற்கு வாதிடுதல்.
கல்வி பரவல்: ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி வழங்குவது.
மனிதநேயம் மற்றும் சமத்துவம்: மதம், ஜாதி, மற்றும் பாலின பாகுபாடுகளை ஒழித்து, அனைவருக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்ய முயல்வது.
பகுத்தறிவு சிந்தனை: மூடநம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய மதக் கோட்பாடுகளுக்கு எதிராக பகுத்தறிவு மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல்.
சத்யசோதக் சமாஜ்: ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்வி வழங்குவதற்காக பல பள்ளிகளை நிறுவியது. ஜோதிராவ் மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் தொடங்கிய பெண்கள் பள்ளி, இந்தியாவில் பெண் கல்வியின் மைல்கல்லாக அமைந்தது. இந்தப் பள்ளிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கியப் பங்காற்றின.
இந்த சமாஜ், கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையான இடத்தைப் பெற உதவியது. கைப்பெண்களுக்காக இல்லங்கள் தொடங்கப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சத்யசோதக் சமாஜ், பாரம்பரிய பார்ப்பன மதக் குருமார்களைச் சார்ந்திருக்காமல், பகுத்தறிவு அடிப்படையிலான திருமணங்கள் மற்றும் பிற சமூகச் சடங்குகளை அறிமுகப்படுத்தியது. இந்தச் சடங்குகள், ஜாதி மற்றும் மதப் பாகுபாடுகளை நீக்கி, எளிமையான முறையில் நடத்தப்பட்டன.
இந்த அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கைகள், புத்தகங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஜோதிராவ் புலேயின் “குலாம்கிரி” (1873) மற்றும் “ஷேத்காரியின் கச்சி” (1881) போன்ற புத்தகங்கள், சமூக அநீதிகளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்புவதற்கு உதவின.
1857ஆம் ஆண்டு நடைபெற்றது. சிப்பாய்க் கலகமல்ல; மதத்தின் அடிப்படையில் தூண்டப்பட்டது என்று தந்தை பெரியார் கூறியது போலவே புலேயும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவித்ரிபாய் புலே, சத்யசோதக் சமாஜின் முக்கிய உறுப்பினராக இருந்து, பெண் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்திற்காகப் பணியாற்றினார். அவர், பெண்களுக்காக பள்ளிகளை நிறுவியது மட்டுமல்லாமல், சமாஜின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்று, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். அவரது கவிதைகள் மற்றும் எழுத்துகள், சமாஜின் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு உதவின.
சத்யசோதக் சமாஜின் கருத்துகள் இன்றைய இந்தியாவில் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகைகள், மற்றும் சமூக நலத் திட்டங்கள் போன்றவை, சமாஜின் சமத்துவக் கோட்பாடுகளின் நீட்சியாகக் கருதப்படுகின்றன. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமூக நீதிக் கொள்கைகள், சத்யசோதக் சமாஜின் பங்களிப்புகளுடன் ஒத்துப்போகின்றன.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட அத்தனை அமைப்புகளையும் மோடி ஆட்சி தவிடுப் பொடியாக்கியது போல தணிக்கைத் துறையையும் தனது கைப்பிடிக்குள் வைத்திருப்பதில் ஆச்சரியம் என்ன?