‘முரசொலி’ செல்வம் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை, ஏப்.25 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, ‘முரசொலி’ வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் ‘முரசொலி’ செல்வத்தின் சிலையை திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (24.4.2025) சென்னை, முரசொலி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் ‘முரசொலி’ செல்வத்தின் சிலையை திறந்து வைத்தார்.
நூல் வெளியீடு
‘முரசொலி’ செல்வத்தின் ‘சிலந்தி’ கட்டுரைகள் நூலை, தி.மு.க. பொதுச்செயலாளர் மூத்த அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். முதல் நூலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றிகூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், மேயர்கள், துணைமேயர்கள், நாடாளுமன்ற – சட்டப்பேரவை உறுப்பினர்கள், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அணிந்துரை
‘முரசொலி’ செல்வம் எழுதிய ‘சிலந்தி’ கட்டுரைகள் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘‘சிலந்தி’ என்ற பெயரால் அண்ணன் முரசொலி செல்வம் எழுதிய கட்டுரைகள் – அன்று முதல் இன்று வரை நமக்கு மட்டுமல்ல, அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் பாடமாக அமைந்தவை.
பொதுவாகச் சிலந்தி வலையைத் தொட்டால் அறுத்துவிடலாம். ஆனால் செல்வம் அண்ணனின் வாதங்கள் நைலான் நரம்பு வலை போலத்தான் இருக்கும். யாராலும் மறுத்து அறுத்துவிட முடியாது. அந்தளவுக்கு வலிமையான வாதங்கள் வன்மையான எழுத்துகளால் வைத்து வந்தார்.
தி.மு.க.வைப் பற்றியோ – தலைவர் கலைஞரைப் பற்றியோ – என்னைப் பற்றியோ – ஏதாவது சிறு விமர்சனம் வந்தாலும் உடனடியாக செல்வம் அண்ணன் பேனாவைத் தீட்டி விடுவார். எங்கள் மீது சிறுதுரும்பு விழவும் விடமாட்டார். அந்தளவுக்குக் கழகத்தையும் – எங்களையும் போற்றிப் பாதுகாத்தவர் செல்வம் அண்ணன் அவர்கள். அவர் எழுதிய கட்டுரைகள் அவரைப் போலவே கம்பீரமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள், தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சான்றோர் பெருமக்கள், முரசொலி செல்வத்தின் குடும்பத்தினர், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் முரசொலி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முரசொலி செல்வத்தின் ‘சிலந்தி’ கட்டுரைகள் நூலினை தி.மு.க. பொதுச்செயலாளர் மூத்த அமைச்சர் துரைமுருகன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் உள்ளனர். மறைந்த ‘முரசொலி’ செல்வத்தின் இணையர் செல்வியிடம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவுகளையும், ஆறுதலையும் தெரிவித்தார் (சென்னை, 24.4.2025)