‘சன்நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் குறும்பேட்டி

3 Min Read

ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும்,
மாநில உரிமைகளையும் காப்பாற்றுகின்ற ஒன்றாகும்

சென்னை, ஏப்.25 ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்க ணித்திருப்பதன்மூலம் தமிழ்நாடு அரசினுடைய நிலைப்பாடு சரியானது என்பதை உணர்ந்து, சட்டப்படி நடந்துகொண்டுள்ள அந்தப் பல்கலைக் கழகங்களின்  துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் நிலைப்பாடுதான், அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் காப்பாற்று கின்ற ஒன்றாகும். அது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியிருக்கக் கூடிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்கணித்தி ருக்கிறார்கள்.

32  துணைவேந்தர்களும் இந்த மாநாட்டினைப் புறக்கணித்திருப்பது என்பதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்துவிட முடியாது.

ஆளுநருக்கு, எந்தவொரு அதிகாரமும் துணை வேந்தர்கள் நியமனத்தில் கிடையாது என்பதை அண்மையில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கின்ற சூழலில், அந்தத் தீர்ப்பிற்கு வலு சேர்க்கும் விதமாக 32 துணைவேந்தர்கள் சட்டப்படியான முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக பேட்டியளித்தார்.

நெறியாளர்: துணைவேந்தர்கள் மாநாட்டினை கடும் எதிர்ப்பினையும் மீறி, ஆளுநர் ஆர்.என்.இரவி நடத்துவதை அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்; கல்வியாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். உச்சநீதிமன்றமே சரியான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

துணைவேந்தர்கள் நியமனத்தில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மட்டும்தான் முழு அதிகாரம் இருக்கிறது; ஆளுநருக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்கூட, இதை எதையுமே பொருட்படுத்தாமல், ஆளுநர், தன்னிச்சையாக சட்டத்தை மீறி, ஒரு மாநாட்டினை நடத்திக் கொண்டிருக்கின்றார். அந்த மாநாட்டினை 32 துணைவேந்தர்களும் புறக்கணித்திருக்கிறார்கள்; இதுகுறித்து உங்களுடைய பார்வை என்ன?

துணைவேந்தர்களை அழைத்ததே
சட்ட விரோதம்

தமிழர் தலைவர்: ஒரு போட்டி அரசாங்கத்தைத் தொடர்ந்து இந்த ஆளுநர் ஆர்.என்.இரவி, தமிழ்நாடு அரசுக்கு விரோதமாக, தான் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்ல, அதற்காக அவர் பதவி விலகவேண்டிய நேரத்தில், குடியரசுத் துணைத் தலைவரைப் பார்த்திருக்கிறார்; அவரும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைப்பற்றிக் கவலைப்படாமல், சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அது கண்டனத்திற்குரியது என்பதை ஏற்கெனவே நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.

உதகமண்டலத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு துணைவேந்தர்களை அழைத்ததே சட்ட விரோதமாகும். அம்மாநாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொள்வது என்பது இருக்கிறதே, இதைவிட மோசமானதாகும்.

மாநாட்டினைப்
புறக்கணித்தவர்களுக்குப்
பாராட்டு!

ஆனால், நல்ல அளவிற்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், வேந்தர் என்ற முறையில் ஆளுநரின் அழைப்பு இருந்தாலும், ஆளுநர் அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால், அது போட்டிக் கூட்டம்; உள்நோக்கத்தோடு நடத்தப்படக் கூடிய கூட்டம்; நல்ல நோக்கத்தோடு நடத்தப்படக் கூடியது அல்ல என்பதைப் புரிந்து, அம்மாநாட்டினைப் புறக்கணித்தவர்களுக்குப் பாராட்டு. அவர்கள் புறக்கணித்ததுதான் சரியான சட்ட நிலையாகும்.

நிகர்நிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களுக்கும்கூட அழைப்பிதழ்!

இன்னொன்றையும் கூடுதல் தகவலாகச் சொல்ல வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும், ஆளுநருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடை யாது தமிழ்நாட்டில். இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், மாநாட்டில் கூட்டம் இருக்கவேண்டும் என்பதற்காக, நிகர்நிலைப்  பல்கலைக் கழகத் துணைவேந்தர்களுக்குக்கூட அம்மாநாட்டிற்கான அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார். இதுவரையில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களுக்கு அழைப்பிதழ் வந்ததே இல்லை.

தமிழ்நாடு அரசினுடைய
நிலைப்பாடு சரியானது

ஆகவே, ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்கணித்திருப்பது என்பது, தமிழ்நாடு அரசினுடைய நிலைப்பாடு சரியானது என்பதை உணர்ந்து, சட்டப்படி நடந்துகொண்டுள்ள அந்தத் துணைவேந்தர்களின் நிலைப்பாடுதான், அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் காப்பாற்றுகின்ற ஒன்றாகும். அது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சன் நியூஸ்‘ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *