கேரளம் என்பது மலையாள நாட்டைக் குறிப்பிடுவதாகும். மலையாளநாடு என்பது திருவாங்கூர் ராஜ்யத்தையும், கொச்சி ராஜ்யத்தை பிரிட்டிஷில் மலையாள ஜில்லாவையும் சேர்த்து குறிப்பிடுவதாகும். இவற்றுள் நமது சுயமரியாதை இயக்கமானது எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றது என்பதை விளக்கவே இதை எழுதுகின்றோம்.
சுதேச சமஸ்தானங்கள்
கொச்சி, திருவாங்கூர் ஆகிய இரு ராஜ்யங்களும் ‘‘சுதேச சமஸ்தானங்கள்’’ ஆகும். இந்த இரு நாடும் சுதேச ராஜாக்கள் என்பவர்களால் இந்துமத சம்பிரதாயங்களைப் பிரதானமாய் கருதி ஆட்சி புரியப்படுவதாகும். இந்து மதத்தை அதன் உண்மைத் தத்துவமான வருணாசிரம தரும முறைப்படி ஜாதி வித்தியாசங்களைக் கடுமையாய் அனுஷ்டித்து வந்ததின் பயனாகவே மேல் ஜாதிக் கொடுமைகள் தாங்காமல் அந்த இரு நாடுகளிலும் மொத்த ஜனத் தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி ஜனங்கள் இந்து மதத்தைவிட்டு இந்துக்கள் அல்லாதவர்களாய் விட்டார்கள்.
அதாவது, அவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லா மானவர்களும், யூதர்களும், புத்தர்களுமாய் இருந்து வருகிறார்கள். பாக்கியுள்ள பகுதியில் அரையே அரைக்கால் வாசிபேர்கள் இன்றும் தாழ்ந்த ஜாதிமக்களாய் கருதப்பட்டு தீண்டப்படக் கூடாதவர்களாய்க் கருதப்பட்டு வருகின்றார்கள்.
இதன் பயனாய் இந்த தீண்டப்படக்கூடாத மக்கள் என்பவர்களில் இப்போது சுயமரியாதை உணர்ச்சி பெற்று சகல வித கட்டுப்பாடுகளையும் உடைத் தெரியத் துணிந்து முன்னணியில் நிற்பவர்கள் ஈழவ சமுகத்தார் என்று சொல்லப்படும் வகுப்பார்களே யாவார்கள். இவர்களின் எண்ணிக்கை அந்த இரண்டு சமஸ்தானங்களிலும் மொத்தம் சுமார் 15 லட்சம் ஆகும். பிரிட்டிஷின் தீயர் சமுகம் என்னும் ஈழவர்களையும் சேர்த்தால் 25 லட்சம் ஆகும்.
வைக்கம் சத்தியாக்கிரகம்
இந்த 25 லட்சம் ஈழவத்தோழர்களும் வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலம் தொட்டு தங்களைக் கட்டுப்படுத்தியுள்ள ஒவ்வொரு கட்டுப்பாடுகளையும் உடைத்தெறியக் கருதி, பல முயற்சிகள் செய்து அவற்றில் பெரிதும் வெற்றிபெற்று இப்போது அவர்கள் அத்தனை பேரும் அதாவது 25 லட்சம் பேரும் ஒருமித்து ஒரே அபிப்பிராயமாக தங்களுக்கு இனி மதமே வேண்டியதில்லை என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால், மற்றபடி அந்த ராஜ்ய தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை. எப்படியெனில் கேரள நாட்டு ஈழவ சமுகங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான தான சமுதாய ஸ்தாபனம் ஒன்று உண்டு. அதன் பெயர் சிறீநாராயண குரு தர்மபரிபாலன யோகம் என்று சொல்லப்படும். இது அவர்களது சீர்திருத்தத் தலைவரான சிறீநாராயண குரு சுவாமி பேரால் ஏற்பட்டதாகும். இவர்களது ஒவ்வொரு வருடாந்திர மகாநாட்டிலும் மதத்தைப்பற்றி வாக்கு வாதங்கள் நடந்து வந்து, இந்த வருஷத்தில் கூட்டப்பட்ட வருடாந்தர மகாநாட்டில் இந்தப்படிக்கு அதாவது, ஈழவ சமுக மக்கள் மதத்தில் நம்பிக்கை அற்றவர்கள் என்றும் அவர்களுக்கு மதம் தேவை யில்லை என்றும், எந்த ஈழவரும் இனி தங்களை இந்து என்றோ அல்லது வேறு எந்த மதஸ்தர் என்றோ சொல்லிக் கொள்ளக் கூடாதென்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.
தோழர் சி. கிருஷ்ணன்
இந்த மகாநாட்டுக்கு சென்னை சட்டசபை மெம்பரும், பி.ஏ.பி.எல்லும், பெரிய பாங்கிக்காரரும், மிதவாதி என்னும் பத்திரிகையின் ஆசிரியருமாகிய கள்ளிக் கோட்டை தோழர் சி. கிருஷ்ணன் (பி.ஏ.பி.எல், எம்.எல்.சி.) அவர்கள் தலைமை வகித்து இருக்கிறார். இவரது தலைமையில் பல ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கூடி பெருத்த கரகோஷத்துக்கு இடையில் அளவுக்கு மீறிய உற்சாகத்துடனும், ஆர்வத்துடனுமே இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இந்தத்தீர்மானமானது முதலில் கேரள யுவர் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டு அந்த யுவர்களால் கிராமம் கிராமமாய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு பிறகு இந்த சமுக மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சுமார் 4,5 வருஷங்களுக்கு முன் இதே (ளு.சூ.னு.ஞூ) மகாநாடானது முதுகுளம் என்னும் ஊரில் நடந்த பொழுது அங்கு ஈழவர்கள் எல்லோரும் இந்துமதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய்விடுவது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெருத்த கலவரம் நடந்து, அந்த மகாநாட்டில் ஆரிய சமாஜக்காரர்கள் தங்கள் மதத்துக்கு வரும்படி அழைத்தும், கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்துக்கு வரும்படி அழைத்தும், புத்தர்கள் தங்கள் மதத்துக்கு வரும்படி அழைத்தும், கடைசியாக ஒரு முடிவும் ஏற்படாமல் மதத்தை வெறுப்பதாக மாத்திரம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குடிஅரசில் படித்திருக்கலாம். அது புகைந்து கொண்டே இருந்து இப்போது தைரியமாக மதமே வேண்டியதில்லை என்கின்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் கேரள ஈழவ சமுதாயத்திலகம் போல் விளங்கும் தோழர் கே.அய்யப்பன் பி.ஏ., எம்.எல்.சி. அவர்களுடைய சுயமரியாதை பிரச்சார முயற்சியும், அவரது பத்திரிகையாகிய சகோதரன் பத்திரிகையின் பிரச்சாரமும், கள்ளிக்கோட்டை தோழர் சி.கிருஷ்ணன் பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., அவர்கள் பிரச்சாரமும் அவரது மிதவாதி பத்திரிகையும் ஆகும்.
தோழர் கே.அய்யப்பன்
தோழர் கே. அய்யப்பன் அவர்களால் மற்றும் ஒரு பத்திரிகை நடத்தப்படுகின்றது. அதாவது நமது ரிவோல்ட் பத்திரிகையைப் போல் ஒரு மாதப்பத்திரிகையானது மதமறுப்பையும், கடவுள் மறுப்பையும், பிரதானமாய்க் கொண்டு யுக்திவாதி என்னும் பேரால் நடத்தப்படுகின்றது. இந்த யுக்திவாதிப் பத்திரிகைக்கு தோழர் ராமவர்மதம்பான் முதலிய சில படித்த மேதாவியான இந்துக்கள் என்பவர்களும், தோழர்கள் ஜோசப் பி.ஏ., பி.எல்., டாக்டர் அந்தோணி எம்.பி., பி.எஸ்., முதலிய கிறிஸ்தவர்களும், தோழர் எம்.கே.இப்ராஹிம் பி.ஏ., எம்.எல்.சி., முதலிய முகமதியர்களும் உபபத்தி ராதிபர்களாகவும், விஷயதானம் செய்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள். தோழர் அய்யப்பன் அவர் களுக்கு மத உணர்ச்சியைப் பற்றியும், கடவுள் உணர்ச்சியைப் பற்றியும் உள்ள வெறுப்பானது சுமார் 10, 15 வருஷகாலமாகவே இருந்துவருவதைக் கேரள மக்கள் நன்றாய் உணர்வார்கள். ஈழவ சமுதாயத்தில் இன்று உள்ள கடவுள், மத வெறுப்புணர்ச்சிக்கு வித்து ஊன்றியவர் நமது தோழர் அய்யப்பன் அவர்களே ஆகும் என்பதாகத் தாராளமாய்ச் சொல்லலாம். இன்று கேரளத்தில் கிறிஸ்தவ சமுதாயம் என்பதிலும் பல ஆயிரக்கணக்கான பேர்களை கடவுள் பற்றில்லாதவர்களாகவும், மதப்பற்றில் லாதவர்களாகவும் காணலாம், அங்கு பாதிரிமார்கள் ஏழைக் கிறிஸ்தவர்களைத்தான் மதமறுப்புக்காகத் தண்டிக்கிறார்கள்.
சற்று செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்களாய் இருந்தால் கெஞ்சவும், பெண்கள் மூலமாகச் செல்வாக்குப் பிடித்துப் கேட்டுக் கொள்ளவுந்தான் செய்கிறார்கள்.
யுக்திவாதி
உதாரணமாக, யுக்திவாதி பத்திரிகைக்கு ஒரு லோயர்கிரேட் உபாத்தியாயர் ஒரு வியாசம் எழுதிய தற்காக அவரை டிஸ்மிஸ் செய்து மதப்பிரஷ்டம் செய்துவிட்டார்கள். அதைவிட வேகமான மற்றொரு வியாசத்தை ஒரு பணக்கார கிறிஸ்தவர் எழுதியதற்கு அந்த ஊர் சாமியார் அந்தப் பணக்காரர் வீட்டுக்குச் சென்று இனிமேல் நீங்கள் யுக்திவாதிக்கு வியாசம் எழுதுவதாய் இருந்தால் தயவுசெய்து உங்கள் பெயரைப் போடாதீர்கள் என்று மாத்திரம் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக் கொண்டுவந்தாராம்.
பார்வதி பி.ஏ., எல்.டி.,
இதுபோலவே முகம்மதியர்களி லும் தோழர் எம்.கே. இப்ரா ஹிம் பி.ஏ.,எம்.எல்.சி அவர்களைப் பின்பற்றும் முஸ்லீம் வாலிபர்கள் பலரைக்காணலாம். அதுபோலவே எல்லா சமய சமுகப் பெண் மக்களையும் நமது கொள்கையில் தீவிரமாய் ஈடுபடச் செய்தது தோழர் அய்யப்பன் அவர்களின் துணைவி தோழர் பார்வதி பி.ஏ., எல்.டி., அவர்களாவர். இந்த மாதிரியாகக் கேரள நாட்டில் சுயமரியாதை இயக்கம் எல்லா மத மக்களிடத்திலும், எல்லாச் சமுகத்தாரிடத்திலும் கூத்தாடுகின்றதை யாரும் பார்க்கலாம். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் அந்நாட்டு வாலிப மக்களுக்கிடையில் பொது உடைமைக் கொள்கையானது வீறுகொண்டு நிற்கிறது என்பதே யாகும். இந்தப் பொது உடைமைக் கிளர்ச்சிக்கு, கேரளத்தில் பல வாலிப வக்கீல்களும் 2,3 தடவை சிறைச் சென்றுவந்த பல நாயர் வாலிபர்களும் தங்கள் முழு ஆதரவையும் கொடுத்து வருவ தைப் பார்க்கின்றோம். ஆகவே கேரளத்தில் உள்ள 25 லட்சம் ஈழவத் தோழர்களும் மத உணர்ச்சியைவிட்டும் கடவுள் உணர்ச்சியைவிட்டும் பொது உடைமைக் கொள்கையை கைக்கொண்டும் எவ்வித தியாகத்துக்கும் தயாராய் இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
புரட்சி நிலை
இதன் பயனாக இன்று கேரள ஈழவர்கள் நிலை இந்தப் பத்து வருஷங்களுக்கு முன் இருந்ததைவிட இப்போது ஒரு பெரிய புரட்சி நிலை என்று சொல்லும்படியான மாதிரியிலேயே தலை கீழாகமாறி இருக்கின்றது.
இதன் காரணம் என்ன என்று பார்ப்போமேயானால் இந்த சமுகமானது மேல் ஜாதியார் என்கின்ற பார்ப்பனர்களாலும், அவர்களுடைய விந்துக்குப் பிள்ளையாய்ப் பிறப்பதே மேன்மை என்று கருதிக் கொண்டிருந்த நாயர் சமுகத்தாலும் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்த கொடுமையே, இன்று அந்த ஈழவ சகோதரர்களைக் கண்விழிக்கச் செய்து தயவு தாட்சண்ணியமின்றியும், தங்கு தடையின்றியும் முன்னேறுவதற்கு தூண்டுகிறது.
ஈழவத் தோழர்கள்
இந்த ஈழவதோழர்கள் தோழர் காந்தியாரின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சீறி விழுவார்கள். காதுகளை பொத்திக்கொள்ளுவார்கள். ஈழவர் அகராதியில் காந்தியென்றால் பார்ப்பனர்களின் ஒற்றர், பணக்காரர்களின் லைசென்சு பெற்ற சேவகர் என்றே குறித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்திய வாலிபர்களில் அநேகர் உள்ளங்களில் இந்தப்படியான ஒரு உணர்ச்சி ஏன் இல்லை என்று கேட்கலாம்.
இந்தியாவில் காங்கிரஸ் என்னும் ஒரு இயக்கம் பணக்காரர்களுக்காகவும், பார்ப்பனர்களுக்காகவும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடைபெறுவதால் அவ்வியக்கம் அனேக வாலிபர்களின் உள்ளக் கிளர்ச்சியையும், ஊக்கத்தையும் தியாகத்தையும் வீரத்தையும் விலைக்கு வாங்கிக் கொள்ளுகின்றது. ஆதலால்தான் இந்தியாவில் கேரளத்தைப் போல காணமுடியவில்லை. கேரளத்தில் பணத் தினாலோ, பணம் வைத்தோ இயக்கம் நடத்துகின்ற வர்களுமில்லை.
ஈழவசமுதாய பெண்மக்களின் நிலைமையை நாம் குறிப்பிட்டோமேயானால், அதை ஒரு தமிழ் நாட்டு தோழர் நம்புவதே கஷ்டமாய் இருக்கலாம். எல்லாத் துறையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமானமானவர்களாயிருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்கள் ஒரு மணி நேரம், இரண்டுமணி நேரம் பேசும்போது அவர்கள் மதத்தை மறுப்பதும், அவர்களது வார்த்தைகளில் கடவுள், கடவுள் செயல் என்பது போன்ற வார்த்தைகளை கண்டனம் செய்வதும் தவிர வேறு எவைகளையும் காணவே முடியாததுமாகும்.
கேரள நாட்டுப் பெண்மணிகள் அதிதீவிரமாக சுயமரியாதைக் கொள்கைகளை மேற்கொண்டு தொண்டாற்றி வருவதற்கு காரணமாயிருப்பவர் தோழர் அய்யப்பன் பி.எ., எம்.எல்.சி. (கொச்சி) அவர்களின் அருமைத் துணைவியார் தோழர் பார்வதி பி.எ.எல்.டி. அவர்களாகும் என்று கூறினோம். அவர்களால் பெண்கள் விடுதலைக்கென்று மலையாளத்தில் ‘ஸ்ரீ’ என்று ஒரு பத்திரிகையும் வெளியிடப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட ஈழவ சமுகம் திருவிதாங்கூர் ராஜ்ய அரசியலில் ஒத்துழையாமையை அனுஷ்டிக்கக்கூடிய தைரியத்துடனும் பலத்துடனும் இன்றையதினம் இருக்கிறார்கள்.
சட்டசபை தேர்தலில்…
அதாவது திருவாங்கூர் சமஸ்தான பிரஜை களில் மூன்றில் ஒருபங்குக்கு மேற்பட்ட தங்கள் சமுகத்திற்கு அரசியலில் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவமும், தேர்தல்களில் தனித்தொகுதி முறையும் கொடுக்கவேண்டும் என்றும் ஜனத்தொகைக்குத் தகுந்த விகிதாச்சாரம் கொடுக்கப் படவேண்டும் என்றும் கேட்டு, அந்த பார்ப்பனிய அரசாங்க மாகிய திருவாங்கூர் அரசாங்கத்தால் கவனிக்கப்படாததால் இவ்வருஷம் நடந்த சட்டசபை தேர்தலில் ஒத்துழை யாமையை அனுஷ்டித்து விலகி நின்றிருக்கிறார்கள். ஏதோ இரண்டு மூன்று பெயர்கள் மாத்திரம் தங்களது சுயநலத்தைக்கருதி அரசாங்க தயவுக்கு கருதி கட்டுப்பட்டுப்போய் தீரவேண்டியதாய் விட்டது என்றாலும், சமுதாயத் தலைவர்களும் சுலபமாய் போகக் கூடியவர்களுமான அனேகர் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுகம் என்பது அரசாங்கத் தோடு ஒத்துழையாமை செய்து சட்டசபையை வெறுப்பதென்றால் அச்சமுகத்துக்கு எவ்வளவு தூரம் முற்போக்குணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.
சுயமரியாதைத் தோழர்கள்
ஆகவே இன்று கேரளமானது தனது ஜனத் தொகையில் கிட்டத்தட்ட பகுதியை மத உணர்ச்சி யையும், கடவுள் உணர்ச்சியையும் வெறுக்கும்படியும், பொதுவுடைமைக் கொள்கையையே தங்கள் கொள்கையாய் கொள்ளும்படியும் சர்க்காரோடு ஒத்துழை யாமையும் செய்யும்படியான நிலை மைக்கும் வைத்துக் கொண்டிருக்கின்றது என்ப தைக் கேட்க நமது சுயமரியாதைத் தோழர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றே கருதுகிறேன்.
குடிஅரசு – தலையங்கம் – 24.09.1933