சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) கேள்வி நேரத்தின்போது கங்கவல்லி எம். எல்.ஏ. நல்லத்தம்பி, கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேட்டார்.
மேலும் நியாயவிலைக் கடையில் கைரேகை மூலம் பொருட்கள் பெறப்படுவதால் காலதாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளதால் அதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-
கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் விரைவில் அமைக்கப்படும். நியாயவிலைக் கடையில் கைரேகை பதிவு, ஒன்றிய அரசின் வலியுறுத்தலின் அடிப்படையில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. நகர பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் கட்டுனர் உள்ளதால் பொருட்கள் எளிதில் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் கட்டுனர் இல்லாத காரணத்தால், பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. கிராமப் பகுதியில் கட்டுனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.