வாழ்க்கை ஒப்பந்த விழாவினை முடித்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையின் சாரமாவது:-
மணமக்களே, பெற்றோர்களே, தோழர்களே! நாம் சமீபகாலம் வரை காட்டுமிராண்டிகளின் ஆட்சியிலிருந்தோம். காட்டுமிராண்டிகளின் ஆட்சி என்றால், மூட நம்பிக்கைக் காரர்கள் ஆட்சியிலே, ஆத்திகர்கள் ஆட்சியிலே இருந்தோம். இப்போது (5.11.1967) பகுத்தறிவாளர்கள் ஆட்சியிலே இருக்கிறோம். இதை நாத்திகர் ஆட்சியென்றும் சொல்லுவார்கள்.
இதை ஏன் சொல்கிறேனென்றால், இதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் சட்டப்படி செல்லாததாக இருந்தது. இப்போது அதைச் சட்டப்படியாக்க ஆட்சியானது முற்பட்டிருக்கிறது. இப்போது நமது நல்வாய்ப்பு காரணமாகப் பகுத்தறிவாளர் ஆட்சி அமைந்த காரணத்தாலே இதுவரை நடைபெற்ற இனி நடைபெறப் போகிற சுயமரியாதைத் திருமணங்கள் யாவும் சட்டப்படி செல்லத்தக்கதாகப் போகிறது.
சாஸ்திரப்படி – சட்டப்படி இந்துமத வழக்கப்படி நடந்து வருகிற நடந்து வந்த முறைப்படி பெண்கள் ஆண்களுக்கு அடிமை. “ஆண்கள் எஜமானார்கள், பெண்கள் பிள்ளை பெறுவதும் தனது புருஷனுக்கு அடிமையாக இருப்பதும் அவனைக் காப்பாற்றுவதுமே பெண்களுக்கு தர்மம்; அதன்படி நடப்பவள்தான் சொர்க்கத்துக்குப் போவாள்” என்று எழுதி வைத்து விட்டான். அதுபோலவே பெண்களைச் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் பயன்படாமல் ஆக்கிவிட்டார்கள். இதனால் உலகத்திலே ஏற்பட வேண்டிய பயன்களில் பாதியளவு பயன் ஏற்படாமலே போய்விட்டது.
இந்த முறையைத் துவக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதென்றால், பழைய முறையில் ஒழுக்கம், கட்டுப்பாடு அறிவு இல்லை என்பதோடு, பெண்களை அடிமையாக்கப் பயன்பட்டது. எனவே தான் பெண்ணடிமையினைப் போக்க வேண்டுமென்பதற்காகவே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே இம்முறையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.
1926-லேயே இந்த முறையில் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். அன்று முதல் நாட்டில் இம்முறையில் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்முறையானது சிலர் சிக்கனத்தை முன்னிட்டும் சிலர் நேரத்தை முன்னிட்டும் சிலர் பணச் செலவை முன்னிட்டும் கையாளுகிறார்கள். ஒரு சிலர்தான் இதன் உண்மையினை உணர்ந்து இந்த முறைப்படி திருமணங்களைச் செய்து வருகின் றனர். நாம் இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்டோம் ஆனதினாலே நாம் கோயிலுக்குப் போகக் கூடாது. பகுத்தறி விற்கு ஏற்காத காரியங்களில் ஈடுபடக் கூடாது. காட்டு மிராண்டிப் பண்டிகைகளான தீபாவளி போன்றவைகளைக் கொண்டாடக் கூடாது. தங்களது வருவாய்க்குள் செலவிட வேண்டும். அளவோடு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்ற குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும். நன்றாக வளர்க்க வேண்டும். நல்லொழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.
சாமியை நம்புகிறவன் அயோக்கியத்தனம் செய்வதற்குப் பயப்படுவது கிடையாது. காரணம், எந்த அயோக்கியத் தன்மை செய்தாலும் சாமி மன்னிப்பார் என்பதால் தான் நிறைய அயோக்கியத்தனம் நடைபெறுகிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தக் கடவுள் – மதம் – சாஸ்திரம் – ஜாதி – சம்பிரதாயம் இவைகள் இருந்தும் மக்கள் இவைகளைப் பின் பற்றி வந்தும் ஏன் மக்களிடம் ஒழுக்கம் – நாணயம் இல்லை என்றால், நமக்குக் கற்பிக்கப்பட்ட கடவுள் – கடவுள் கதைகள் – மதம் – சாஸ்திரம் எல்லாமுமே ஒழுக்கக்கேடு, நாணயக் கேடு, விபச்சாரம் இவைகளையே அடிப்படையாகக் கொண்டு அடைக்கப்பட்டதால் தான் மக்களிடம் நாணயம், ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு கெட்டு அயோக்கியத்தனம் மிகுந்திருக் கிறது. மக்களிடம் நாணயம், ஒழுக்கம், நேர்மை இவைகள் ஏற்பட வேண்டுமானால், இந்தக் கடவுள் – மதம் – சாஸ்திரம் – பார்ப்பான் இவைகள்யாவும் ஒழிக்கப் பட்டே ஆக வேண்டும்.
இப்போது நமக்கு அமைந்திருக்கும் இந்த ஆட்சியானது இந்தியாவில் இது வரை எங்குமே ஏற்படாத பகுத்தறிவாளர்களை கொண்ட ஆட்சியாகும். இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்பதாகக் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
(27.10.1967 அன்று சிந்தாதரிப்பேட்டையில் சிம்சன் கம்பெனியின் பின்புறம் உள்ள கார்ப்பரேஷன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’ 5.11.1967)