சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (25.4.2025) பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய இத்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக வெளியிடப்படும் என அறிவித்தார்.
அதில் சமூகநீதி மற்றும் பெண்ணு ரிமை குறித்த எதிர்கால ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு இதழ்கள் மற்றும் மலர்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளியான கவிதைகள் மற்றும் கட்டு ரைகள் 5 தொகுதிகளாக மூன்றாண்டு காலத்திற்குள் தனி வெளியீடுகளாகவோ, கூட்டு வெளியீடுகளாகவோ ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும் என அறிவித்தார்.
மற்ற அறிவிப்புகள் வருமாறு:
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பள்ளி வேலை நேரத்தில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் 13 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
வாசிப்பு இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துப் புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் விதத்தில் கதை சொல்லும் அமர்வுகள் (Story Telling Sessions), வாசிப்பு சவால்கள் (Reading Challenges), புத்தகக் கழகங்கள் (Book Club) ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் (Themed Reading Weeks) செயல்படுத்தப்படும். இதன் அடிப்படையில் மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், பிடித்த விளையாட்டுகள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.
இன்றைய சூழலில் பள்ளி மாணவர் களிடம் வாழ்வியல் திறன்கள், விழுமியங்கள், பாலினச் சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சமூக ஊடகத்தின் முறையான பயன்பாடு, சுகாதாரமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான உணவுப் பழக் கங்கள், நேர்மறை எண்ணங்கள், போதைப் பொருள்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வுக் கட்டகம் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகை யில் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காகப் பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு செயல் படுத்தப்படும்.
கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்குபெற்று மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு அவர்களின் கலைத்திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காகத் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு புத்தொளிப் பயிற்சியாக ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் சுமார் 400 மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
மனநலத்தை மேம்படுத்த…
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 46,000 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தகுந்த விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் பயிற்சிகள் ரூ. 4 கோடி மதிப் பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (DIET) மூலம் ஆசிரியர்களுக்கு இசை, நாடகம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
400 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளில் பயிலும் 12,000 மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள், மாநில திறன் மய்யம் மற்றும் வேளாண் அறிவியல் மய்ய ஆய்வகங்கள் ஆகியவற்றின் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாணவர்களின் தொழில் முனைதல், செய்முறைத் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி வழங்கப்படும்.
பாராட்டுச் சான்றிதழ்
ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய பாடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு மாணவர்களுக்குக் கற்பித்து வருகின்றனர். ஆகவே படைப்பாற்றல், புத்தாக்க முயற்சி, தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்தி 100% தேர்ச்சியினைப் பெற்றுத் தரும் அரசுப்பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் 2300க்கும் மேற்பட்ட மாணவ / மாணவிகள் பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை மேன்மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ரூ.4.60 இலட்சம் மதிப்பீட்டில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.
பள்ளிகளில் சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் நோக்குடன் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. மாணவர்களின் தொழில்நுட்பக் கற்றலை எளிதாக்கவும், உயர்ந்த தரத்தில் குழந்தைநேய வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தவும், முதற்கட்டமாக, 6,478 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைக்கு மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியை உறுதி செய்வ தற்கு ஒவ்வொரு குடியிருப்புப் பகு திக்கு அருகிலும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி தொலைதூர கிராமப்பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 4 தொடக்கப் பள்ளிகள் நடு நிலைப் பள்ளிகளாகவும், 14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
பள்ளிகளின் தரமும் செயல்பாடுகளும் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அடை யாளம் காணப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப் படுவர்.
கூடுதலாக சேர்க்கைகள்
பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை பள்ளிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளம்பரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப் பட்டு வரும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பற்றி விளக்கி, கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புக்களுக்கான பாடக் கருத்துகளை ஆழ்ந்து படிப்பதற்கும், அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை உருவாக்கும் பொருட்டும் வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறைப் பயன்பாட்டிற்கான கைப்பிரதிப் பாடநூல்கள் வழங்கப்படும்.
நவீன கற்றல் முறைகள்
வளர்ந்துவரும் தொழில்நுட்பச் சவால்களுக்கு ஏற்ப நவீன கற்றல் முறைகள் மூலம் தரமான மற்றும் உரிய கற்றல் விளைவுகளைப் பெறவும் மாறிவரும் அறிவியல், தொழில்நுட்ப உலகத்தோடு இயைந்து வாழவும் திறன் மேம்பாட்டுக் கல்வி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை மாணவர்கள் பெறுவதை உறுதி செய்யவும் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கென வரும் கல்வியாண்டில் முதற்கட்டமாக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாணவர்களிடம் கற்றல் விளைவுகளை மேம்படுத்தி அறிதல், புரிதல், பயன்படுத்துதல் மற்றும் உயர்நிலைச் சிந்தனைத் திறன்களை வளர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,25,000 முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் நேர்த்தியான கற்பித்தல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, ஈடுபாடும் பங்களிப்பும் கொண்ட பன்முகத் திறமையாளராகச் செயல்பட உரிய பாட வல்லுநர்களைக் கொண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வரும் கல்வியாண்டில் ரூ. 28 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 6000க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு அவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பொருட்டு பாடப்பொருள் மற்றும் கற்பித்தல் நடைமுறைகள் சார்ந்து ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில், 2025–2026ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் பயிற்சி வழங்கப்படும்.
விழிப்புணர்வு பயிற்சி
தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் 90,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சமூகநல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களைக் கொண்டு விழிப்புணர்வுப் பயிற்சி ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
நவீன தமிழ் இலக்கியத்தின் அடையாளத்தையும் தமிழ் மொழியின் சிறப்புகளையும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மகாகவி பாரதியார் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட. கவிதைகளைக் கொண்ட தொகுப்பு 25 இந்திய மற்றும் உலகமொழிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
இளைய தலைமுறையினர் தமிழ்நாட்டு வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் மூத்த வரலாற்று அறிஞர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயற்றிய அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நூல்கள், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் தனிவெளியீடுகளாகவோ கூட்டு வெளியீடுகளாகவோ வெளியிடப்படும்.
துறைத் தேர்வுகளை எழுதும் அரசு அலுவலர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக துறைத் தேர்வுகளுக்கான முதன்மையான நூல்கள் தனி வெளியீடுகளாகவோ, கூட்டு வெளியீடுகளாகவோ கொண்டு வரப்படும். முதல்கட்டமாக, 25 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும். இதன் வாயிலாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பயன்பெறுவர்.
சமூகநீதி – பெண்ணுரிமை
சமூகநீதி மற்றும் பெண்ணுரிமை குறித்த எதிர்கால ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு இதழ்கள் மற்றும் மலர்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளியான கவிதைகள் மற்றும் கட்டு ரைகள் 5 தொகுதிகளாக மூன்றாண்டு காலத்திற்குள் தனி வெளியீடுகளாகவோ, கூட்டு வெளியீடுகளாகவோ ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
புத்தக வெளியீட்டு விழாக்கள், கலை, இலக்கிய விழாக்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த ஏதுவாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 300 இருக்கைகள் கொண்ட கருத்தரங்கக்கூடம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
வாசகர்களின் வசதிக்காக பழுதடைந்த 30 நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுவதோடு 125 நூலகங்களில் கழிப்பறை வசதிகளும் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
வயதுவந்தோர் கல்வித் திட்டங்களின் கீழ் பயின்று வருகின்ற கற்போருக்குத் தொழிற்திறன் பயிற்சி வழங்குவதன் மூலம் அவர்களின் வருவாய் ஈட்டும் திறனை மேம்படுத்துவது மிகவும் அவசிய மானதாகும்.
இதன் தொடர்ச்சியாக, சமுதாயப் பங்களிப்பு, தொடர்புடைய திட்டங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன், உள்ளூர்த் தேவைகளின் அடிப்படையில் செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு, தையற்கலை, மெழுகு மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற கற்போருக்கு உகந்த தொழிற்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இணையான சான்றிதழ்
8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றமைக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டது.